குழுவில் இரண்டாவதாக நிறைவு செய்த இலங்கை றக்பி அணி ஆசிய அணிக்கு 7 பேர் கொண்ட போட்டிகளில் அரையிறுதிப் போட்டிக்குத் தெரிவானது. அரையிறுதிப் போட்டியில் பலம் மிக்க ஹொங்கொங் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
சைனீஸ் தாய்பே உடன் முதல் போட்டியை ஆரம்பித்த இலங்கை அணி, தமது முதல் போட்டியில் 26-07 என்று சைனீஸ் தாய்பே அணியை வென்றது. 2ஆவது போட்டியில் சிங்கப்பூர் அணியை 66-00 என்று அபாரமாக வென்ற இலங்கை அணி, இறுதிக் குழு போட்டியில் சீன அணியிடம் 24-14 என்று தோற்று குழுவில் இரண்டாம் இடத்தைப் பெற்றது.
குழு A இல் ஹொங்கொங் மற்றும் தென் கொரிய அணிகள் அரையிறுதிப்போட்டிக்குத் தெரிவாகின. இலங்கை அணியை வென்றதன் மூலம் குழு B இல் முதல் இடத்தைப் பிடித்த சீன அணி அரையிறுதியில் தென் கொரிய அணியை சந்திக்கவுள்ளது. இலங்கை அணி அரை இறுதியில் பலமிக்க ஹொங்கொங் அணியை சந்திக்கவுள்ளது.
Photos: Sri Lanka Team Action Asia Rugby 7s Championship 3rd Leg 2016 – Day 1
இலங்கை அணியானது ஹொங்கொங் அணியை கடந்த இரு பாகத்திலும் இறுதிப் போட்டியில் சந்தித்தது. கடந்த இரு பாகங்களிலும் இரு அணிகளும் 3 முறை நேருக்கு நேர் மோதியது. இதில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஹொங்கொங் அணி வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. குழு போட்டியில் ஹொங்கொங் அணி மலேசிய அணியிடம் தோற்றமையே இலங்கை அணியின் ஒரே ஆறுதல் ஆகும். குழுப்போட்டியில் ஹொங்கொங் அணி மலேசிய அணியிடம் 14-19 என்று தோல்வியுற்றாலும் குழுவில் முதல் இடத்தைப் பிடித்துக்கொண்டது.
அதேவேளை இலங்கை மகளிர் றக்பி அணியால் சிங்கப்பூர் அணியுடனான போட்டியில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. இதனால் அரையிறுதிக்கு தகுதி பெற முடியவில்லை. இலங்கை மகளிர் அணி ஹொங்கொங் அணியுடனான போட்டியில் 12-17 என்றும், சீன அணியிடம் 27-00 என்றும் தோல்வியுற்றது. சிங்கப்பூர் அணியுடனான போட்டியில் 15-05 என்று வெற்றிபெற்றது.
இலங்கை அணி ஞாயிற்றுக் கிழமை (16) பி.ப.3.05 க்கு அரையிறுதியில் ஹொங்கொங் அணியுடன் மோதவுள்ளது
சீன அணி இலங்கையின் வெற்றி ஓட்டத்தைக் கலைத்தது
சீன அணியுடனான போட்டியை 24-14 என்று தோல்வியுற்றதன் மூலம், இலங்கை அணியின் குழுவில் முதல் வரும் நோக்கம் கலைந்தது. முன்னைய போட்டியில் 66-00 என்று சிங்கப்பூர் அணியை அபாரமாக வெற்றியீட்டிய இலங்கை அணி சீன அணியுடனான போட்டியில் 2ஆவது நிமிடத்திலேயே சீன அணிக்கு புள்ளி பெரும் வாய்ப்பை அளித்தது. தொடர்ந்து இரண்டாவது ட்ரையையும் வைத்த சீன அணி 12 புள்ளிகளைப் பெற்று முன்னிலை கொண்டது. பின்னர் ரிச்சர்ட் தர்மபாலாவின் ட்ரையின் மூலம் 7 புள்ளிகளைப் பெற்றவாறு முதல் பாதியை முடித்து இலங்கை அணி.
Photos: Asia Rugby 7’s Championship 3rd Leg 2016 – Day 1
இலங்கை அணியின் தடுப்பு சிறந்ததாகக் காணப்படவில்லை. அதனை சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்ட சீன அணி மேலும் இரண்டு ட்ரைகளை தொடர்ச்சியாக வைத்து 24 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது. ரிச்சர்ட் தர்மபால இறுதி நேரத்தில் ட்ரை ஒன்று வைத்தாலும் இலங்கை அணி 14-24 என்று தோல்வியுற்றது.
66 புள்ளிகள் பெற்று சிங்கப்பூர் அணியை அபார வெற்றிபெற்றது இலங்கை அணி
ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய இலங்கை அணி வீரர்கள் முதல் விசிலுடனேயே தமது ட்ரை வைக்கும் படலத்தை துவங்கினர். முதல் பாதியில் 5 ட்ரை வைத்து இலங்கை 35 புள்ளிகளைப் பெற்று முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் ஆரம்பம் முதலே ட்ரை வைத்தது. இலங்கை அணி மேலும் 5 ட்ரைகளை வைத்தது. இலங்கை அணி சார்பாக தரிந்த ரத்வத்த ஹட்ரிக் ட்ரை வைத்தார். மேலும் துலாஜ் பெரேரா தமக்கு கிடைத்த 10 உதைகளில் 8 உதைகளை கம்பங்களுக்கு மத்தியில் சரியாக உதைத்து 16 புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்தார்.
இலங்கை அணியின் முதல் போட்டி
இலங்கை அணி 3ஆம் பாகத்தில் முதல் போட்டியில் சைனீஸ் தாய்பே அணியுடன் மோதியது . தமது தாய்நாட்டு ரசிகர்களுக்கு மத்தியில் சிறப்பான ஆரம்பத்தைப் பெற இலங்கை அணி தவறியது. சைனீஸ் தாய்பே அணி முதலாவதாக ட்ரை வைத்து 7 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றது. எனினும் ரிச்சர்ட் தர்மபால இலங்கை அணி சார்பாக முதல் ட்ரை வைக்க இலங்கை அணி தமது சிறப்பான ஆட்டத்தை அதன்பின் வெளிக்காட்டத் துவங்கியது.
இறுதியில் தமது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்காமல் முதல் போட்டியை 26-07 என்று வென்று இலங்கை அணி ஒரு சிறந்த ஆரம்பத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இலங்கை மகளிர் றக்பி அணி
தமது முதல் போட்டியில் ஹொங்கொங் மகளிர் அணியை எதிர்கொண்ட இலங்கை மகளிர் அணி இப்போட்டியில் கடினமான போட்டியின் பின்னர் 12-17 எனத் தோல்வியுற்றது. இலங்கை அணியின் தனுஜா வீரக்கொடி சிறப்பாக 80 மீட்டர் ஓடி இலங்கை அணிக்காக முதல் ட்ரை வைத்தார். எனினும் ஹொங்கொங் அணியும் தொடர்ந்து ட்ரை வைத்து புள்ளியை சமநிலை செய்தது. இலங்கை அணியின் அயேஷா களுஆராச்சி மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட அதை சாதகமாகப் பயன்படுத்திய ஹொங்கொங் அணி மேலும் 2 ட்ரை வைத்தது. இறுதி நேரத்தில் துலானி ட்ரை வைத்த போதிலும் இலங்கை 12-17 எனத் தோல்வியுற்றது.
மகளிர் அணியின் 2ஆவது போட்டி
தமது இரண்டாவது போட்டியில் சீன மகளிர் அணியுடன் மோதிய இலங்கை மகளிர் அணி 27 -00 என்று தோல்வியுற்றது. ஆரம்பத்தில் இருந்தே சீன அணியே போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. இத்தோல்வியுடனேயே இலங்கை மகளிர் அணியின் அரையிறுதிக் கனவு கலைந்தது.
இலங்கை மகளிர் அணியின் முதல் வெற்றி
இலங்கை மகளிர் அணி தாம் பங்கு கொண்ட இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியுடன் வெற்றிபெற்றது. சிங்கப்பூர் அணியே முதலில் புள்ளி பெற்ற போதிலும், இலங்கை அணி சிறப்பாக விளையாடி ட்ரை வைத்தது.
இலங்கை அணிக்காக 100 மீட்டர்கள் ஓடி துலானி பல்கொண்டகே இரண்டாவது ட்ரை வைத்தார். போட்டியின் இறுதிக் கட்டத்தில் மேலும் ஒரு ட்ரை வைத்த துலானி இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்தார்.