இன்று ஆரம்பமான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளின் முதல் நாள் நிறைவில் புனித ஜோசப் கல்லூரி மற்றும் புனித பேதுரு கல்லூரி அணிகள் வலுவான நிலையிலுள்ளன.
புனித பேதுரு கல்லூரி எதிர் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய புனித பேதுரு கல்லூரி 5 விக்கெட்டுகளை இழந்து 290 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. புனித பேதுரு கல்லூரி சார்பாக அதிரடியாக ஆடிய அனிஷ்க பெரேரா 100 ஓட்டங்களைக் குவித்ததுடன் ஷலீத் பெர்னாண்டோ (77) மற்றும் லக்ஷிண ரொட்ரிகோ (68*) அரைச் சதம் கடந்தனர். மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி சார்பாக பந்துவீச்சில் சச்சிந்து கொலம்பகே 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அடுத்து களமிறங்கிய மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, ஆட்டம் நிறைவடையும் போது 3 விக்கெட்டுகளை இழந்து 94 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி சார்பாக லசித் குரூஸ்புள்ளே ஆட்டமிழக்காது 43 ஓட்டங்களைப் பெற்று களத்திலிருந்தார்.
போட்டியின் சுருக்கம்
புனித பேதுரு கல்லூரி – 290/5d (62) – அனிஷ்க பெரேரா 100, ஷலீத் பெர்னாண்டோ 77, லக்ஷிண ரொட்ரிகோ 68*, சச்சிந்து கொலம்பகே 2/22
மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி – 94/3 (32) – லசித் குரூஸ்புள்ளே 43*
புனித ஜோசப் கல்லூரி எதிர் டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி
நாணய சுழற்சியில் வென்ற டி.எஸ். சேனநாயக்க கல்லூரி முதலில் களத்தடுப்பினைத் தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய புனித ஜோசப் கல்லூரி 286 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. புனித ஜோசப் கல்லூரி சார்பில் துடுப்பாட்டத்தில் ஜெஹான் பெர்னாண்டோபுள்ளே 86 ஓட்டங்களையும், பஹன் பெரேரா 63 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். டி.எஸ். சேனநாயக்க கல்லூரி சார்பாகப் பந்துவீச்சில் விஹான் குணசேகர 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து களமிறங்கிய டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியின் துடுப்பாட்ட வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக ஓய்வறை திரும்ப, அவ்வணி ஆட்ட நேரம் நிறைவடையும் போது 6 விக்கெட்டுகளை இழந்து 69 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது. புனித ஜோசப் கல்லூரி சார்பாக ருச்சிர ஏக்கநாயக்க 3 விக்கெட்டுகளையும் மற்றும் ஹரீன் குரே 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.
போட்டியின் சுருக்கம்
புனித ஜோசப் கல்லூரி – 286 (71.4) – ஜெஹான் பெர்னாண்டோபுள்ளே 86, பஹன் பெரேரா 63, விஹான் குணசேகர 5/60, முதித லக்ஷன் 3/84
டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி – 69/6 (21) – ருச்சிர ஏக்கநாயக்க 3/18, ஹரீன் குரே 2/22
றோயல் கல்லூரி எதிர் மஹிந்த கல்லூரி
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய றோயல் கல்லூரி சகல விக்கெட்டுகளையும் இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. கனித் சந்தீப (52) அரைச்சதம் கடந்தார். கவிந்து சதுரங்க 40 ஓட்டங்களைக் குவித்தார். பந்துவீச்சில் ரிஷான் காவிந்த 4 விக்கெட்டுகளையும், கவிந்து எதிரிவீர 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
அடுத்து களமிறங்கிய மஹிந்த கல்லூரி ஆட்டம் நிறைவடையும் போது 4 விக்கெட்டுகளை இழந்து 98 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. மஹிந்த கல்லூரி சார்பாக ரவிந்து ஹன்சிக ஆட்டமிழக்காது 58 ஓட்டங்களைப் பெற்று களத்திலிருந்தார்.
போட்டியின் சுருக்கம்
றோயல் கல்லூரி – 205 (58.4) – கனித் சந்தீப 52, கவிந்து சதுரங்க 40, ஹிமேஷ ராமநாயக்க 37, ரிஷான் காவிந்த 4/37, கவிந்து எதிரிவீர 3/64
மஹிந்த கல்லூரி – 98/4 (31.5) – ரவிந்து ஹன்சிக 58*
நாளை போட்டிகளின் இரண்டாவது நாளாகும்.