டக்கெட், பில்லிங்க்ஸின் சிறந்த ஆட்டத்தால் பங்களாஷுடனான தொடரை வென்றது இங்கிலாந்து

594
Bang vs Eng tour

சிட்டகொங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற பங்களாதேஷுடனான சர்வதேச ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் 4 விக்கெட்டுக்களால் போராடி வெற்றி பெற்றதன் மூலம்  2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது.

ஏற்கனவே தொடரை 1-1 என்று இரு அணிகளும் சமப்படுத்தியிருந்த நிலையில் தொடரைக் கைப்பற்றும் இறுதிப் போட்டி நேற்று இடம்பெற்றது. இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 277 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. முதல் விக்கெட்டுக்காக தமீம் இக்பால் மற்றும் இம்ருள் கயிஸ் ஆகியோர் இணைப்பாட்டமாக 80 ஓட்டங்களை விளாசி சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர். 45 ஓட்டங்களைப் பெற்ற தமீம் இக்பால் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 5,000 ஓட்டங்களை கடந்த முதல் பங்களாதேஷ் வீரர் என்ற சாதனையைப் பதிவு செய்தார்.

 

பின்னர் பங்களாதேஷ் அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை  இழந்தாலும், 7ஆவது விக்கெட்டுக்காக ஒன்றிணைந்த மோசட்டேக் மற்றும் முஷ்பிகுர் ரஹிம் ஆகியோர் இணைந்து இறுதி 12 ஓவர்களில் 85 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பகிர்ந்துகொண்டனர். அதேவேளை, இங்கிலாந்து பந்து வீச்சு சார்பாக ஆதில் ரஷித் தனது சிறந்த பந்து வீச்சு பெறுபேறான 43 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

தொடர்ந்து, 278 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடக் களமிறங்கிய இங்கிலாந்து அணி 47.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்து. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி பங்களாதேஷுடனான தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

 

இங்கிலாந்து அணி, தனது முக்கிய வீரர்களான மோர்கன், ஹேள்ஸ் மற்றும் காயம் அடைந்த ஜோ ரூட், ஜேசன் ரொய் போன்ற சிறந்த மற்றும் முக்கிய வீரர்கள் இல்லாதிருந்த நேரத்தில் இந்த தொடரை வென்றமை குறிப்பிடத்தக்கது.

 

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட பேன் டக்கெட் மற்றும் சாம் பில்லிங்க்ஸ் அதிரடியாக ஆடி, இருவரும் அரைச் சதங்களை கடந்து இங்கிலாந்து அணியில் தமது இருப்பை தொடர்ந்து வைத்துக்கொள்வதற்கு முயற்சி மேற்கொண்டமை முக்கிய அம்சமாகும்.
போட்டி சுருக்கம்:

 

பங்களாதேஷ் 277/06 (50) – முஷ்பிகுர் ரஹீம் 67*, சப்பீர் ரஹ்மான் 49, இம்ருள் கயிஸ் 46, தமீம் இக்பால் 45, மோசட்டேக்ஹோசைன் 38*, ஆதில் ரஷிட் 43/4

 

இங்கிலாந்து 278/06 (47.5) – பென்டக்கெட்  63, சாம் பில்லிங்க்ஸ் 62, பென் ஸ்டோக்ஸ் 47*,

ஜெம்ஸ் வின்ஸ் 32, கிறிஸ் வோக்ஸ் 27*, ஷபியுல்  இஸ்லாம் 61/2, மஷ்ராபே மோர்டசா 51/2

 

பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஒக்டோபர் 20ஆம் திகதியிலிருந்து 24ஆம் திகதி வரை சிட்டகொங்  சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.