மேற்கிந்திய தீவுகள் A அணியின் விஷாஉல் சிங் நிதானமான துடுப்பாட்டம் மூலம் பெற்றுக்கொண்ட தனது ஐந்தாவது சதத்தின் உதவியுடன், இலங்கை A அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் A அணியினர் பாரிய ஓட்ட எண்ணிக்கையை பெற்றுள்ளனர். இதனால் இலங்கை அணி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
இலங்கைக்கு உத்தியோகபூர்வமற்ற சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் A அணியினருக்கும், இலங்கை A அணியினருக்கும் இடையிலான நான்கு நாட்கள் கொண்ட இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்றாகும். நேற்றைய முதலாம் நாள் ஆட்ட முடிவின் போது மேற்கிந்திய தீவுகளின் A அணியினர் 5 விக்கெட்டுக்களை இழந்து 331 ஓட்டங்களை பெற்றிருந்தனர். அவர்களின் அணி சார்பாக விஷாஉல் சிங் ஆட்டமிழக்காமல் 81 ஓட்டங்களைப் பெற்றிருந்தார் .
இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தில் தங்களது முதலாவது இன்னிங்சை மேற்கிந்தியத் தீவுகளின் A அணியினர் தொடர்ந்தனர். மேற்கிந்திய தீவுகள் A அணியின் விஷாஉல் சிங் தனது நேர்த்தியான துடுப்பாட்டம் காரணமாக சதத்தையும் கடந்து 16 பெளன்டரிகள் உள்ளடங்களாக 161 ஓட்டங்களை பெற்றார். இவரின் அபாரமான ஆட்டத்துடன் மேற்கிந்திய தீவுகளின் A அணியினர் 9 விக்கெட்டுக்களை இழந்து மிகவும் பெரிய ஒட்ட எண்ணிக்கையான 509 ஓட்டங்களை பெற்று மிகவும் வலுவான நிலைக்கு சென்று தங்களது ஆட்டத்தை இடைநிறுத்தினர்.
இதில் உபாதை காரணமாக நேற்று ஆட்டத்தின் பாதியில் மைதானத்தை விட்டு வெளியேறிய ராஜேந்திர சந்திரிக்கா இன்று மீண்டும் வந்து விளையாடி 9 பெளண்டரிகள் உள்ளடங்களாக 84 ஓட்டங்களை அவ்வணி சார்பாக பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் இலங்கை A அணி சார்பாக இளம் பந்து வீச்சாளர் சரித் அசலங்க 104 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களையும், ஜெப்ரி வன்டேர்செய், சுதேஷ் குமார, அனுக் பெர்னாந்து, திமுத் கருணாரத்ன ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதனை தொடர்ந்து தங்களது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாட தொடங்கிய இலங்கை A அணியினர், ஆரம்பம் முதலே தடுமாற்றங்களை சந்தித்தனர். இலங்கை அணியின் முதலாவது விக்கெட் 19 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் பறிபோனது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் துடுப்பாட்ட வீரர் அவிஸ்க பெர்னாந்து 7 ஓட்டங்களை மாத்திரம் பெற்று கெமர் ரூச் இன் பந்து வீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். அதனை தொடர்ந்து இலங்கை A அணியின் அடுத்த விக்கெட், இரண்டாவது விக்கெட்டுக்காக 13 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த நிலையிலும், மூன்றாவது விக்கெட் 4 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த வேளையிலும் நான்காவது விக்கெட், ஒரு ஒட்டத்தினை இணைப்பாட்டமாக பெற்றிருந்த நிலையிலும் முறையே லஹிரு திரிமன்னெ, ரோசேன் சில்வா, சரித் அசலன்க ஆகியோர் ஆட்டமிழந்து அரங்கு திரும்பினர்.
இதனால் 37 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களை இழந்து மிகவும் நெருக்கடியான நிலைமைக்கு இலங்கை A அணி உள்ளானது. இந்த நிலையில், களத்தில் இருந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரரான இலங்கை A அணித் தலைவர் திமுத் கருணாரத்னவுடன் விக்கெட் காப்பாளர் நிரோசன் திக்வெல்ல இணைந்து இலங்கை அணியின் மோசமான நிலையினை கருத்திற்கொண்டு நிதானமாக ஆடி ஐந்தாவது விக்கெட்டுக்காக 91 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். அதன்படி, இன்றைய ஆட்ட நேர முடிவின் போது இலங்கை அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கையை 128 ஓட்டங்களாக உயர்த்த அவர்கள் உதவி செய்தனர். இதன் போது திமுத் கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 12 பெளண்டரிகள் உள்ளடங்களாக அரைச்சதத்தை கடந்து 66 ஓட்டங்களையும், நிரோசன் திக்வெல்ல ஆட்டமிழக்காமல் 2 பெளன்ரிகளுடன் 38 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
பந்து வீச்சில், மேற்கிந்திய தீவுகள் A அணியின் வேகப்பந்து வீச்சாளர் கீயோன் ஜோசப் சிறப்பாக பந்து வீசி 4 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி இருந்தார். இவருடன் சேர்த்து கேமர் ரோச் மற்றும் ரஹீம் கொர்ன்வால் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றியிருந்தனர்.
போட்டியின் மூன்றாவது நாள் நாளை தொடரும்.
போட்டி சுருக்கம்
மேற்கிந்திய தீவுகள் A அணி (முதலாவது இன்னிங்ஸ்) – 509/9 Dec (137.4), விஷாஉல் சிங் 161, ஜஹ்மர் ஹமில்டன் 99, சரித் அசலன்க 104/4
இலங்கை A அணி (முதலாவது இன்னிங்ஸ்) 128/4 (40) – திமுத் கருணாரத்ன 66*, நிரோஷன் திக்வெல்ல 38*, கீயோன் ஜோசப் 4/2, கேமர் ரோச் 18/1