2020ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை இலக்காகக் கொண்டு இலங்கை வீரர்களைஅதற்குத் தயார்படுத்தும் திட்டத்தின் ஒரு அங்கமாக, முதல் முறையாக ஏற்பாடு செய்யப்படுகின்ற தெற்காசிய நீர்சார் விளையாட்டு சம்பியன்ஷிப் போட்டிகள் இலங்கை நீர்சார் விளையாட்டு சங்கத்தின் (SLSAU) ஆதரவுடன் இலங்கையில் நடாத்தப்படவுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவு, ஆப்கானிஸ்தான், நேபாளம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த வீர, வீராங்கனைகள் பங்கேற்கவுள்ள இப்போட்டித் தொடர், இம்மாதம் 18ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை சுகததாச உள்ளக நீச்சல் அரங்க வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வு குறித்து விளக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பில், மாண்புமிகு விளையாட்டு அமைச்சர் தயாசிறி ஜயசேகர கருத்து தெரிவிக்கையில்,
“நீச்சல் விளையாட்டில் மாத்திரம் 38 வகையான போட்டிகள் நடாத்தப்படுவதால், இது பதக்கம் ஒன்றினை பெறக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படும் விளையாட்டுக்களில் ஒன்றாகும். எனவே 2020ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை கருத்தில் கொண்டு செயற்படுமிடத்து, நீச்சல் போட்டிகளை ஊக்குவிப்பது மிக முக்கியமானதும்.” எனத் தெரிவித்தார்.
இப்போட்டித் தொடரிற்கான ஏற்பாடுகளில் உதவிகளை வழங்கிவரும் இலங்கை கடற்படையின் முதன்மை கொமாண்டோ மற்றும் இலங்கை நீர்சார் விளையாட்டு சங்கத்தின் தலைவருமான ஜயந்த கமகே, குறித்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில்,
“அடுத்த தலைமுறை விளையாட்டு வீரர்களை இலங்கையில் இடம்பெறும் இவ்வாறானதொரு சர்வதேச விளையாட்டு நிகழ்வுக்கு வரவேற்பதில் நாம் பெருமை அடைகின்றோம். இலங்கையில் நீர்சார் விளையாட்டுக்களை ஊக்குவிப்பதில் இந்த நிகழ்வு ஒரு சிறந்த ஆரம்பமாக அமையும்.” என்றார்.
இந்தப் போட்டிகள் வெவ்வேறு வயது மட்டங்களில் இடம்பெறுவதுடன், மொத்தமாக 7 நாடுகளை சேர்ந்த 400 விளையாட்டு வீரர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர். இலங்கை சார்பாக 85 நீச்சல் (Swimming) வீரர்கள், 25 ‘நீரில் பாய்தல்‘ (Diving) போட்டியாளர்கள், 30 நீர்ப்பந்தாட்ட (Water polo) வீரர்கள் மற்றும் 20 திறந்த வெளி நீச்சல் (Open water swimming) வீரர்கள் உள்ளடங்கலாக மொத்தம் 160 போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இலங்கையில் இறுதியாக இடம்பெற்ற சர்வேதேச நீச்சல் போட்டியானது, 2006ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு (SAG) போட்டியேயாகும். எனவே 10 வருடங்களின் பின்னர் இடம்பெறவுள்ள இவ்விளையாட்டு நிகழ்வானது பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் ஆரம்பமாகவுள்ளது. இவ்வருடம் முதல் தெற்காசிய நீர்சார் விளையாட்டு சம்பியன்ஷிப் போட்டிகளை இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் ஆரம்ப நிகழ்வு, மாண்புமிகு விளையாட்டு அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் தலைமையில் இடம்பெறவுள்ளதுடன், இறுதி நிகழ்வான திறந்த வெளி நீச்சலுடன் காலி முகத்திடலில் போட்டித்தொடர் நிறைவு பெரும்.
இம்முறை அங்கர் நிவ்டேல் நிறுவனம் இப்போட்டிகளுக்கான அனுசரணையை வழங்குகிறது.
போட்டிகள் பற்றிய உடனடி செய்திகளுக்கு Thepapare.com உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.