புனித ஜோசப் கல்லூரி 10 விக்கெட்டுகளினால் அபார வெற்றி

362
U19 School Cricket

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரில் இன்று நிறைவு பெற்ற போட்டியொன்றில் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியை இலகுவாக தோற்கடித்த புனித ஜோசப் கல்லூரி 10 விக்கெட்டுகளால் வெற்றியைப் பெற்றுக் கொண்டதுடன் மொரட்டுவ மகா வித்தியாலயத்துடனான போட்டியில் புனித ஜோசப் வாஸ் கல்லூரி முதல் இனிங்ஸ் வெற்றியைப் பெற்றுக் கொண்டது.

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி எதிர் புனித ஜோசப் கல்லூரி

‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரின் குழு ‘D’ இற்கான போட்டியொன்றில் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியும் புனித ஜோசப் கல்லூரியும் மோதிக் கொண்டன. முதல் நாள் நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து 151 ஓட்டங்களைப் பெற்றிருந்த புனித ஜோசப் கல்லூரியினர் இன்று தொடர்ந்து துடுப்பெடுத்தாடினர்.

ரேவன் கெலி 76 ஓட்டங்களையும், பவன் பெரேரா 56 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்க, புனித ஜோசப் கல்லூரி 8 விக்கெட்டுகளை இழந்து 251 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. இதன்படி, அவ்வணி முதல் இனிங்ஸில் 101 ஓட்டங்களினால் முன்னணி பெற்றுக் கொண்டது. மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி சார்பில் ரவிந்து பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இரண்டாவது இனிங்ஸிற்காக களமிறங்கிய மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி மீண்டும் துடுப்பாட்டத்தில் சோபிக்காத நிலையில் 160 ஓட்டங்களுக்கே சகல விக்கெட்டுகளையும் இழந்தது. தனித்து போராடிய லசித் குரூஸ்புள்ளே 81 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் ஜெஹான் பெர்னாண்டோபுள்ளே மற்றும் ஹரீன் குரே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீதம் பெற்றுக் கொண்டனர்.

60 என்ற சுலபமான இலக்கை நோக்கி களமிறங்கிய புனித ஜோசப் கல்லூரி, 17.1 ஓவர்களில் விக்கெட் இழப்பேதுமின்றி வெற்றியை சுவீகரித்துக் கொண்டது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ரேவன் கெலி மற்றும் பவன் பெரேரா ஆட்டமிழக்காது முறையே 30 மற்றும் 26 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.

முன்னர், நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 150 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அவ்வணி சார்பாக துஷான் குருகே 32 ஓட்டங்களையும்,  சச்சிந்த கொலம்பகே 24 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். புனித ஜோசப் கல்லூரி சார்பாகப் பந்துவீச்சில் ருச்சிர ஏக்கநாயக்க 4 விக்கெட்டுகளையும், ஹரீன் பெரேரா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 போட்டியின் சுருக்கம் 

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி (முதல் இனிங்ஸ்) – 150 (46.5) – துஷான் குருகே 32, சச்சிந்த கொலம்பகே 24, ருச்சிர ஏக்கநாயக்க 4/42, ஹரீன் பெரேரா 3/28

புனித ஜோசப் கல்லூரி (முதல் இனிங்ஸ்) – 251/8d (63.5) – ரேவன் கெலி 76, பவன் பெரேரா 56, நிபுன் சுமனசிங்க 43, ரவிந்து பெர்னாண்டோ 4/59

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி (இரண்டாவது இனிங்ஸ்) – 160 (43.2) – லசித் குரூஸ்புள்ளே 81, ஷெஹான் மனீஷ 25, ஜெஹான் பெர்னாண்டோபுள்ளே 3/24, ஹரீன் குரே 3/39

புனித ஜோசப் கல்லூரி (இரண்டாவது இனிங்ஸ்) – 60/0 (17.1) – ரேவன் கெலி 30*, பவன் பெரேரா 26*

முடிவு: புனித ஜோசப் கல்லூரி 10 விக்கெட்டுகளால் வெற்றி.


புனித ஜோசப் வாஸ் கல்லூரி எதிர் மொரட்டுவ மகா வித்தியாலயம்

இரண்டாவது தினம் தமது முதல் இனிங்ஸிற்காக களமிறங்கிய மொரட்டுவ மகா வித்தியாலயம், முதல் இனிங்ஸ் வெற்றிக்காக 332 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் ஆட்டத்தை ஆரம்பித்தது. எனினும், புனித ஜோசப் வாஸ் கல்லூரியின் பந்துவீச்சாளர்கள் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை வீழ்த்த, மொரட்டுவ மகா வித்தியாலயம் 149 ஓட்டங்களுக்கு சுருண்டது.

மதுஷ்க பெர்னாண்டோ அதிகபட்சமாக 53 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்துவீச்சிலும் தமது கைவரிசையைக் காட்டிய தனஞ்சய பெரேரா 3 விக்கெட்டுகளையும் மதுஷான் ரணதுங்க 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதன்படி புனித ஜோசப் வாஸ் கல்லூரி முதல் இனிங்ஸில் 182 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்டது.

இது ‘சிங்கர்’ கிரிக்கெட் சுற்றுத் தொடரின் போட்டியொன்று அல்லாத காரணத்தினால் வெற்றிக்கு முயற்சி செய்யாத புனித ஜோசப் வாஸ் கல்லூரி மீண்டும் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. மீண்டுமொருமுறை துடுப்பாட்டத்தில் அசத்திய தனஞ்சய பெரேரா மற்றும் மதுஷான் ரணதுங்க ஆட்டமிழக்காது முறையே 105 மற்றும் 55 ஓட்டங்களைப் பெற்றுக் கொள்ள, புனித ஜோசப் வாஸ் கல்லூரி ஆட்ட நேர முடிவின் போது 2 விக்கெட்டுகளை இழந்து 186 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

முன்னர், முதல் நாளன்று நாணய சுழற்சியில் வென்ற புனித ஜோசப் வாஸ் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. தனஞ்சய பெரேரா (110) மற்றும் மதுஷான் ரணதுங்க (108) ஆகியோர் சதங்கள் விளாச, புனித ஜோசப் வாஸ் கல்லூரியினர் 90.3 ஓவர்களில் 332 ஓட்டங்களைக் குவித்தனர்.

 போட்டியின் சுருக்கம் 

புனித ஜோசப் வாஸ் கல்லூரி (முதல் இனிங்ஸ்) – 332 (90.3) – தனஞ்சய பெரேரா 110, மதுஷான் ரணதுங்க 108, பிரசாத் பெரேரா 62

மொரட்டுவ மகா வித்தியாலயம் (முதல் இனிங்ஸ்) – 149 (56.2) – மதுஷ்க பெர்னாண்டோ 53, தனஞ்சய பெரேரா 3/26, மதுஷான் ரணதுங்க 2/33

புனித ஜோசப் வாஸ் கல்லூரி (இரண்டாவது இனிங்ஸ்) – 186/2 (50) – தனஞ்சய பெரேரா 105*, மதுஷான் ரணதுங்க 55*

முடிவு: போட்டி சமநிலையில் முடிவடைந்தது. புனித ஜோசப் வாஸ் கல்லூரி முதல் இனிங்ஸில் வெற்றி.