யசோதா மெண்டிஸ் அசத்தல் : மத்திய மாகாண, மேல் மாகாண மகளிர் அணிகள் வெற்றி

953
Women's Provincial Cricket Day 3

கடந்த 5 ஆம் திகதி ஆரம்பமாகிய மாகாணங்களுக்கு இடையிலான மகளிர் டி-20 சம்பியன்ஷிப் போட்டிகளின் மூன்றாவது நாளுக்குரிய போட்டிகள் இன்று கொழும்பு புளும் பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழக மைதானத்தில் இடம்பெற்நன. இதில், தென் மாகாண மற்றும் மத்திய மாகாண மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மத்திய மாகாண மகளிர் அணியும், மேல் மாகாண மற்றும் வட மத்திய மாகாண மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மேல் மாகாண மகளிர் அணியும் வெற்றி பெற்றன.

இரம்மியமான காலைப்பொழுதொன்றில் ஆரம்பமாகிய முதலாவது போட்டியில் தென் மாகாண மகளிர் அணியும், மத்திய மாகாண மகளிர் அணியும் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மத்திய மாகாண அணித்தலைவி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். நேர்த்தியான துடுப்பாட்டம் ஒன்றினை ஆரம்பித்த மத்திய மாகாண மகளிர் அணியினர் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 115 ஓட்டங்களை பெற்றனர்.

இதில் இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் யசோதா மெண்டிஸ் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 61 ஓட்டங்களை மத்திய மாகாண அணி சார்பாக பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் தென் மாகாண மகளிர் அணி சார்பாக ருச்சினி சமரசேன 26 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

பின்னர் 116 என்ற வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென் மாகாண அணியினர் அடுத்தடுத்தாக விக்கெட் சரிவுகளை சந்தித்து 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 108 ஓட்டங்களை பெற்றனர். எனவே அவர்கள் 7 ஓட்டங்களால் தோல்வியை  தழுவினர். இதில் தென் மாகாண மகளிர் அணியின் ரேஷானி பெரேரா அதிகபட்சமாக 34 ஓட்டங்களை பெற்றார். மத்திய மாகாண மகளிர் அணி சார்பாக சிரிபாலி வீரக்கொடி 19 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுக்களையும், உதேசிகா பிரபோதினி 21 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

போட்டியின் சுருக்கம்  

மத்திய மாகாண மகளிர் அணி: 115/6 (20) – யசோதா மெண்டிஸ் 61, ருச்சினி சமரசேன 26/2

தென் மாகாண மகளிர் அணி: 108/8(20) – ரேசானி பெரேரா 34, சிரிபாலி வீரக்கொடி 19/2, உதேசிகா பிரபோதினி 21/2

போட்டி முடிவு: மத்திய மாகாண மகளிர் அணி 7 ஓட்டங்களால் வெற்றி


இதே மைதானத்தில் இடம்பெற்ற அடுத்த போட்டியில், வட மத்திய மாகாண மகளிர் அணி மற்றும் மேல் மாகாண மகளிர் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வட மத்திய மாகாண அணித்தலைவி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். அதன்படி துடுப்பெடுத்தாட தொடங்கிய வட மத்திய மாகாண மகளிர் அணியினர் மேல் மாகாண மகளிர் அணியினரின் பந்து வீச்சினை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 101 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர். இதில் அதிகபட்சமாக வட மத்திய மாகாண மகளிர் அணியின் நிலக்சி சில்வா ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களை பெற்றார். சிறப்பாக பந்து வீசிய மேல் மாகாண அணியின் சச்சினி செவ்வந்தி 14 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

அதன் பின்னர், வெற்றி 102 என்ற இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேல் மாகாண மகளிர் அணியினர் 19.3 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 102 ஓட்டங்களை பெற்று போட்டியில் மூன்று பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் வெற்றி இலக்கினை அடைந்தனர்.  இதில் மேல் மாகாண அணி சார்பாக ஹன்சிம கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் வட மத்திய மகளிர் அணி சார்பாக அமா காஞ்சனா 10 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்

வட மத்திய மாகாண மகளிர் அணி: 101/8 (20) – நிலக்சி சில்வா 24*, டினுசா ஹிடகொட 20, சச்சினி செவ்வந்தி 14/3

மேல் மாகாண மகளிர் அணி: 102/8 (20) – ஹன்சிம கருணாரத்ன 41*, அமா காஞ்னா 10/2, நிலுக்கா கருணாரத்ன 31/2

போட்டி முடிவு: மேல் மாகாண மகளிர் அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றி

இந்த மாகாண மகளிர் டி-20 சம்பியன்ஷிப் போட்டிகளின் சுற்று ஆட்டங்கள் இன்று முடிவடைந்த நிலையில் இதன் இறுதிப் போட்டி எதிர் வரும் ஓக்டோபர் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு கொல்ட்ஸ் கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது.