இவ்வருடத்திற்கான அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வாக தேசிய ரீதியான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் 13ஆம் திகதி கண்டி போகம்பர விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளன.
அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா நிகழ்வுகள் 4 கட்டங்களாக நடாத்தப்படுகின்றன. அதில் 27 வகையான குழு விளையாட்டுக்கள் 3 கட்டங்களின் கீழ் நாட்டின் பல பகுதிகளிலும் நடாத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே எஞ்சியுள்ள மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்வுகள் இறுதி நிகழ்வாக இடம்பெறவுள்ளன.
போகம்பர விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் 13ஆம் திகதி ஆர்பமாகும் இந்த நிகழ்வுகள் 17ஆம் திகதி வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு இடம்பெறவுள்ளன. இதில் நாட்டில் உள்ள அனைத்து மாகாணங்களின் வீர வீராங்கனைகளும் கலந்துகொள்ள உள்ளனர்.
மாகாண மட்டத்திலான போட்டிகளில் திறமைகளைக் காட்டி வெற்றி பெற்ற 15, 17, 19 மற்றும் 21 வயதுக்கு கீழ்ப்பட்ட பிரிவுகளில் உள்ள 2,684 வீரர்களும், 2,437 வீராங்கனைகளும் இந்த தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளனர்.
எமது நாட்டின் வரலாற்றில், தேசிய மட்டத்தில் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு இடம்பெறும் ஒரே ஒரு விளையாட்டு நிகழ்வாக இந்த நிகழ்வு இருக்கின்றமை முக்கிய விடயமாகும்.
13ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வுகள் குறித்து தெளிவு படுத்தும் ஊடகவியலாளர் மாநாடொன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் அமைந்துள்ள இலங்கை கால்பந்து இல்லத்தில் (Football House) கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கல்வி அமைச்சின் முக்கிய அதிகாரிகள், அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவிற்கான அனுசரணையாளர்களான நெஸ்ட்லே நிறுவனம், ப்ரிமா நிறுவனம் மற்றும் இலங்கை வங்கி என்பவற்றின் முக்கிய அதிகாரிகள் உட்பட பல ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்.
அங்கு உரையாற்றிய கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் கருத்து தெரிவிக்கையில், ”நாம் பாடசாலை மட்டத்தில் உள்ள மாணவர்களின் விளையாட்டுத் திறனை வளர்த்து, அவர்களை எதிர்காலத்தில் தேசிய மற்றும் சர்tதேச அளவில் சிறந்த வீரர்களாக கொண்டு வருவதற்கே முயற்சிக்கின்றோம். அதன்படி, 2018, 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியாகும்பொழுது இவர்கள் சிறந்த திறனுள்ள வீரர்களாக வருவார்கள்.
கடந்த காலங்களில் விளையாட்டு அபிவிருத்திக்காக, பாடசாலைகளில் விளையாட்டு ஆசிரியர்கள் இல்லாத ஒரு நிலைமை இருந்தது. எனவே, அதனை நீக்க புதிதாக 5,000 விளையாட்டு ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும்.
ஒரு மாகாணத்தில் ஒரு பாடசாலையை விளையாட்டுப் பாடசாலையாக மாற்றும் திட்டம், அதேபோன்று அனைத்து மாணவர்களும் குறைந்தது ஒரு விளையாட்டையாவது கட்டாயம் தெரிவு செய்ய வேண்டும் என்ற திட்டம் என்பன எதிர்காலத்தில் கொண்டுவரப்படும். இவற்றின்மூலம் நாட்டில் விளையாட்டுத் துறை சிறந்த முறையில் வளர்ச்சி அடையும்” என்றும் அமைச்சர் அங்கு தெரிவித்தார்.
ஏதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பமாகும் போட்டி நிகழ்சிகளுக்கான நாட்டின் அனைத்துப் பாகங்களில் இருந்தும் 600 க்கும் அதிகமான நடுவர்கள் கடமைக்கு அழைக்கப்படவுள்ளனர். மேலும், போட்டிகளில் வெற்றிகளைப் பெறும் வீரர்களுக்கு பலவகையான பெறுமதியான பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.
இந்தப் போட்டிகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையதளமான ThePapare.com இன் ஊடாகப் பெற்றுக் கொள்ளலாம்.