19 வயதுக்கு உட்பட்டோருக்கான ‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரில் இன்று ஆரம்பமான போட்டிகளின் முதல் நாள் நிறைவின் போது மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நாலந்த கல்லூரி மற்றும் கோட்டை ஜனாதிபதி கல்லூரி ஆகிய அணிகள் முன்னிலை வகிக்கின்றன.
மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி எதிர் புனித ஜோசப் வாஸ் கல்லூரி
‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரின் குழு ‘D’ இற்கான போட்டியொன்றில் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியும் புனித ஜோசப் வாஸ் கல்லூரியும் மோதிக்கொண்டன. நாணயச் சுழற்சியில் வென்ற மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.
அதன்படி களமிறங்கிய புனித ஜோசப் வாஸ் கல்லூரி 59.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. புனித ஜோசப் வாஸ் கல்லூரி சார்பாக தனஞ்சய பெரேரா 48 ஓட்டங்களையும், அஞ்சன ருக்மல் 43 ஓட்டங்களையும் குவித்தனர். மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி சார்பாக பந்து வீச்சில் லசித் குரூஸ்புள்ளே 3 விக்கெட்டுகளையும், சச்சிந்து கொலம்பகே மற்றும் சங்க பூர்ண ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் பெற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து களமிறங்கிய மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி ஆட்ட நேர முடிவின் போது 6 விக்கெட்டுகளை இழந்து 141 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. துடுப்பாட்டத்திலும் அசத்திய லசித் குரூஸ்புள்ளே 67 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். புனித ஜோசப் வாஸ் கல்லூரி சார்பில் தனஞ்சய பெரேரா மற்றும் கனிஷ்க நாணயக்கார ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.
போட்டியின் சுருக்கம்
புனித ஜோசப் வாஸ் கல்லூரி – 172 (59.3)
தனஞ்சய பெரேரா 48, அஞ்சன ருக்மல் 43, மதுஷான் ரணதுங்க 26
லசித் குரூஸ்புள்ளே 3/28, சச்சிந்து கொலம்பகே 2/14, சங்க பூர்ண 2/16
மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி – 141/6 (35)
லசித் குரூஸ்புள்ளே 67, அஷான் பெர்னாண்டோ 25
தனஞ்சய பெரேரா 2/27, கனிஷ்க நாணயக்கார 2/36
நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.
நாலந்த கல்லூரி எதிர் இசிபதன கல்லூரி
நாலந்த கல்லூரியை எதிர்த்து முதலில் துடுப்பெடுத்தாடிய இசிபதன கல்லூரி சகல விக்கெட்டுகளையும் இழந்து 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. இசிபதன கல்லூரி சார்பாக துடுப்பாட்டத்தில் கலன பெரேரா 47 ஓட்டங்களையும் மனீஷ ரூபசிங்க 44 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். சிறப்பாகப் பந்து வீசிய இடது கை சுழற்பந்து வீச்சாளரான கவீஷ் மதுரப்பெரும 10 ஓட்டங்களை மாத்திரமே வழங்கி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து களமிறங்கிய நாலந்த கல்லூரியும் துடுப்பாட்டத்தில் பெரிதாக சோபிக்கவில்லை. முதல் இனிங்ஸில் முன்னிலை பெற்றுக் கொண்ட போதிலும், நாலந்த அணியினர் ஆட்ட நேர முடிவின் போது 9 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தனர். நாலந்த கல்லூரி அணியின் தலைவர் தசுன் செனவிரத்ன 35 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். இசிபதன கல்லூரி சார்பாகப் பந்து வீச்சில் லஹிரு டில்ஷான் 3 விக்கெட்டுகளையும், ஹேஷான் பெர்னாண்டோ மற்றும் சஞ்சுல பண்டார ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் பெற்றுக் கொண்டனர்.
போட்டியின் சுருக்கம்
இசிபதன கல்லூரி – 135 (36.1)
கலன பெரேரா 47, மனீஷ ரூபசிங்க 44, சஞ்சுல பண்டார 23
கவீஷ் மதுரப்பெரும 5/10, உமேஷ்க டில்ஷான் 2/16
நாலந்த கல்லூரி – 146/9 (46)
தசுன் செனவிரத்ன 35, அஷான் பெர்னாண்டோ 25
லஹிரு டில்ஷான் 3/25, சஞ்சுல பண்டார 2/8, ஹேஷான் பெர்னாண்டோ 2/28
நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.
அநுராதபுர மத்திய கல்லூரி எதிர் கோட்டை ஜனாதிபதி கல்லூரி
நாணய சுழற்சியில் வென்ற ஜனாதிபதி கல்லூரி முதலில் களத்தடுப்பினைத் தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய அநுராதபுர மத்திய கல்லூரி 31 ஓவர்களில் 125 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்த நிலையில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. லஹிரு லியனகே அதிகபட்சமாக 28 ஓட்டங்களைப் பெற்றார். ஜனாதிபதி கல்லூரி சார்பாக அற்புதமாக பந்துவீசிய ரிபாஸ் மௌரூஸ் 34 ஓட்டங்களை வழங்கி 7 விக்கெட்டுகளை சாய்த்தார்.
தமது முதலாவது இனிங்ஸிற்காக களமிறங்கிய ஜனாதிபதி கல்லூரி 47 ஓவர்கள் நிறைவில் 225 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. கனிது தெவ்மின அரைச்சதம் கடந்தார். ஹஷான் பிரியதர்ஷன 47 ஓட்டங்களைக் குவித்தார். அநுராதபுர மத்திய கல்லூரி சார்பில் பந்து வீச்சில் ரவிந்த பிரபாஸ்வர மற்றும் மதுரங்க சந்திரரத்ன ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீதம் பெற்றுக் கொண்டனர்.
இரண்டாவது இனிங்ஸிற்காக களமிறங்கிய அநுராதபுர மத்திய கல்லூரி ஆட்ட நேர முடிவின் போது விக்கெட் இழப்பேதுமின்றி 4 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
போட்டியின் சுருக்கம்
அநுராதபுர மத்திய கல்லூரி (முதல் இனிங்ஸ்) – 125 (31)
லஹிரு லியனகே 28
ரிபாஸ் மௌரூஸ் 7/34
ஜனாதிபதிக் கல்லூரி (முதல் இனிங்ஸ்) – 225 (47)
கனிது தெவ்மின 50, ஹஷான் பிரியதர்ஷன 47
ரவிந்த பிரபாஸ்வர 4/38, மதுரங்க சந்திரரத்ன 4/42
அநுராதபுர மத்திய கல்லூரி (இரண்டாவது இனிங்ஸ்) – 4/0 (2)
நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.