டிலேஷ், செஹான் மற்றும் கவிந்து பங்களிப்புடன் கென்றிச் அணி வெற்றி

314
LB Finance v Kanrich Finance MCA “B” Finals

மேகன்டைல் B டிவிசன் மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில், டிலேஷ் புத்திக்கவின் நேர்த்தியான பந்துவீச்சு மற்றும் செஹான் விஜயரட்ன, கவிந்து குலசேகரவின் சிறப்பான 125 இணைப்பாட்டம் கைகொடுக்க, 3 விக்கெட்டுக்களால் கென்றிச் பைனான்ஸ் அணி வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கென்றிச் பைனான்ஸ் அணி, முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது. மிகவும் சிறப்பாக பந்து வீசிய டிலேஷ் புத்திக்க முதல் 5 ஓவர்களுக்குள், லக்ஷான் ரொட்ரிகோ, குசல் மெண்டிஸ் மற்றும் அரை இறுதிப் போட்டியில் 69 ஓட்டங்கள் பெற்ற சதீர சமரவிக்ரம ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி LB பைனான்ஸ் அணியை இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளினார். தொடர்ந்து சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகள் விழ, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 237 ஓட்டங்களுக்கு LB பைனான்ஸ் அணி மட்டுப்படுத்தப்பட்டது.

அதன் பின்னர், களம் இறங்கிய கென்றிச் பைனான்ஸ் அணியின் இரண்டு விக்கெட்டுகளை, ஷிரான் பெர்னாண்டோ ஆரம்ப ஓவர்களில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். எனினும், கென்றிச் பைனான்ஸ் அணி மத்திய தர வரிசை துடுப்பாட்ட வீரர்களின் சிறந்த இணைப்பாட்டங்கள் மூலம் 47.2 ஓவர்களில் 238 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.

செஹான் விஜயரட்ன 64 ஓட்டங்களையும், தமித் பிரியதர்ஷனவின் விரைவான 6 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் உட்பட 36 பந்துகளில் 55 ஓட்டங்களை பெற்றுப் அணிக்கு வலுவூட்டினர். அவர்களைத் தொடர்ந்து களம் இறங்கிய முன்னால் 19 வயதுக்கு உட்பட்ட இலங்கை அணித்தலைவர் கவிந்து குலசேகர நிதானமாக விளையாடி ஆட்டமிழக்காமல் 89 பந்துகளுக்கு முகம் கொடுத்து 60 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைய உதவினார்.
 
வேகப்பந்து வீச்சாளர் ஷிரான் பெர்னாண்டோ 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், சுழற்பந்துவீச்சாளர் ரஜீவ வீரசிங்க 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய போதும் கென்றிச் பைனான்ஸ் அணியின் வெற்றியைத் தடுக்க முடியவில்லை.

போட்டியின் சுருக்கம்
 

LB பைனான்ஸ் அணி : 237/8 (50)
சரித் சுதாகர 44, கசுன் விஜேரத்ன 37, ரஜீவ வீரசிங்க 27
டிலேஷ் புத்திக்க 67/5

கென்றிச் பைனான்ஸ் அணி : 241/7 (47.2)
செஹான் விஜயரட்ன 64, டாமித் பிரியதர்ஷன 55, கவிந்து குலசேக்கர 60*
ஷிரான் பெர்னாண்டோ 43/3, ரஜீவ வீரசிங்க 26/2

முடிவு – கென்றிச் பைனான்ஸ் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி