2016/17 பருவ காலத்திற்கான டயலொக் றக்பி லீக் சுற்று எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ளது. சுற்றுத்தொடரின் முதல் போட்டியில் பொலிஸ் விளையாட்டுக் கழகம் கடற்படை விளையாட்டுக் கழகத்தினை நவம்பர் 4ஆம் திகதி பொலிஸ் பார்க் விளையாட்டு மைதானத்தில் சந்திக்கவுள்ளது.
கடந்த வருட வெற்றியாளர்களான கண்டி விளையாட்டுக் கழகம், சுற்றுத்தொடரினை கடைசியாக நிறைவு செய்த CH&FC விளையாட்டுக் கழகத்தினை எதிர்கொள்வதுடன், ஹவலொக் விளையாட்டுக் கழகம் விமானப்படை அணியை ரத்மலானையில் சந்திக்கவுள்ளது. மேலும் CR&FC விளையாட்டுக் கழகம், ராணுவப்படை அணியை தியகமவில் சந்திக்கும். இந்தப் போட்டிகள் நவம்பர் 5ஆம் திகதி இடம்பெறவுள்ளன.
முதல் சுற்றுப் போட்டிகள் டிசம்பர் 18ஆம் திகதி நிறைவடைவதைத் தொடர்ந்து, வீரர்களுக்கு இரண்டு வார ஓய்வு வழங்கப்பட்டு, இரண்டாம் கட்ட போட்டிகள் மீண்டும் 2017ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் திகதி தொடங்கும். இறுதி சுற்றுப் போட்டிகள் பெப்ரவரி 19ஆம் திகதி ஆரம்பமாகும். அதனைத் தொடர்ந்து டயலொக் க்லிஃபோர்ட் போட்டி ஆரம்பமாவதுடன் அதன் இறுதிப்போட்டி மார்ச் மாதம் 11ஆம் திகதி நடைபெறும்.
சென்ற வருடம் போன்று இவ்வருடம் சர்வதேச அணி வீரர்கள் புதிதாக இடம்பெறவில்லை என்பது வருத்தத்தை அளிக்கக் கூடிய விடயமாகும். சென்ற வருட வெற்றியாளர்களான கண்டி விளையாட்டுக் கழகம் இவ்வருடம் நட்சத்திர வீரர்கள் சிலரை விலைக்கு வாங்கியுள்ளது. தனுஷ்க ரஞ்சன் (ஹவலொக்), காஞ்சன ராமநாயக்க (CR&FC), ஜேசன் திஸாநாயக்க (CR&FC) மற்றும் ரொஷான் திஸாநாயக்க (ஹவலொக்) ஆகியோர் புதுமுக வீரர்களாக கண்டி அணிக்கு களமிறங்குவதுடன் அனுபவம் மிக்க ‘ஸ்க்ரம் ஹாஃப்‘ வீரர் ரொஷான் வீரரத்ன தலைவர் பதவியை பொறுப்பேற்றுள்ளார்.
ஹவலொக் விளையாட்டுக் கழகத்தின் பிரதான பயிற்றுவிப்பாளர் பொறுப்பு, தூளாகிஸ் டவிடாவிடமிருந்து (லாகா) ரொனி இப்ராஹிமிற்கு கை மாறியுள்ளது. ஹவலொக் அணி இம்முறை கண்டி விளையாட்டுக் கழகத்திற்கு பெரும் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வணியின் தலைவராக துஷ்மந்த பிரியதர்ஷன செயற்படுவார். சென்ற வருடம் அதிக ‘ட்ரை‘களாக 12 ட்ரைகளை வைத்த ‘ஹுக்கர்‘ நிலையில் விளையாடும் பிரசாத் மதுஷங்க இவ்வருடமும் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் ஷாரோ பெர்னாண்டோ, நிரோஷன் பெர்னாண்டோ, சாமர தாபரே போன்ற அனுபவ வீரர்களுடன் 20 வயதிற்குக் கீழ்ப்பட்ட வளர்ந்துவரும் வீரர்களான நிஷோன் பெரேரா மற்றும் கெவின் டிக்சன் ஆகியோரும் அணியில் கைகோர்க்கவுள்ளனர்.
ஹவலொக் விளையாட்டுக் கழகம் போன்றே CR&FC விளையாட்டுக் கழகமும் அனுபவ மற்றும் புதுமுக வீரர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஷேன் சம்மந்தப்பெரும அணியை வழிநடத்துவதுடன், ஸ்காட்லாந்து அணியின் பழைய வீரரான பென் மெக்டவுகல் அணியை பயிற்றுவிக்கவுள்ளார்.
நட்சத்திர வீரர் ஓமல்க குணரத்ன கடற்படை அணியிலிருந்து CR&FC விளையாட்டுக் கழகத்தில் இணைந்துள்ளார். அஷான் டி கொஸ்டா, சசங்க ஆரியரத்ன மற்றும் ரிசா முபாரக் பொலிஸ் விளையாட்டுக் கழகத்திலிருந்து CR&FC விளையாட்டுக் கழகத்தில் இணைந்துள்ளதுடன் பழைய தலைவரான இஷான் நூர் மீண்டும் அணியில் இணையப்பெற்றுள்ளார். தரிந்த ரத்வத்த மற்றும் கவிந்து பெரேரா ஆகியோரும் அணிக்கு வலுச் சேர்ப்பர்.
கடந்த வருடம் சுற்றை நான்காவதாக முடித்த கடற்படை அணியில் இம்முறை இளம் வீரர்கள் சிலர் இடம்பிடித்துள்ளனர். மோதிலால் ஜயதிலக இவ்வணியை வழிநடத்துவார். மேலும் தினுஷ சதுரங்க, லீ கீகல், கேர்த்த பெரேரா, சானக சந்திமால் மற்றும் நிவங்க பெரேரா ஆகியோர் அணியின் அனுபவ வீரர்களாகத் திகழ்வர். சென்ற வருடம் அதிக புள்ளிகளை பெற்றுக்கொடுத்த ‘புல் பெக்‘ வீரர் திலின வீரசிங்க இம்முறையும் சிறப்பாக விளையாடி தேசிய அணிக்குத் தெரிவாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொலிஸ் விளையாட்டுக் கழகம் சென்ற வருடம் சோபிக்கத் தவறியது. எனினும் பொலிஸ் அணியின் பழைய வீரரான சுதத் சம்பத் இம்முறை அணிக்கு பயிற்றுவிப்பாளராக சிறப்பான வழிநடாத்தலை மேற்கொள்வார் என கணிக்கப்படுகிறது. அணியின் சிறந்த வீரர்களாக முஷின் பலீல், அச்சல பெரேரா, ரதீஷ செனவிரத்ன மற்றும் மொஹமட் அப்ஸல் ஆகியோர் திகழ்கின்றனர்.
கடற்படை அணி சென்ற வருடம் ஆரம்பப் பாதியில் சிறப்பாக விளையாடினாலும் அதன் பின் பின்னடைவைச் சந்தித்தது. இம்முறை கயன் சலிந்த சென்ற வருடம் வெளிப்படுத்திய சிறப்பாட்டத்தை இவ்வருடமும் வெளிப்படுத்துவார் என நம்பப்படுகிறது. தொடர்ந்து இரண்டாவது வருடமாக பிஜி நாட்டின் பெவேரி வேராபுலா இவ்வணியை பயிற்றுவிக்கவுள்ளார்.
விமானப்படை அணி சென்ற வருடம் போன்று இவ்வருடமும் சிக்கல்களை சந்திக்க நேரிடும். பிரபல வீரர் நுவான் பெரேராவில் பலத்த எதிர்பார்ப்பு தங்கியுள்ளது. மேலும் ஹவலொக் விளையாட்டுக் கழகம் மற்றும் கடற்படை விளையாட்டுக் கழகத்தை வெற்றிபெறச்செய்த லெனார்ட் டி சில்வாவிற்கு இம்முறை இமாலய சவால் காணப்படுகிறது.
இறுதியாக CH&FC அணி, நடந்து வரும் கிரிக்கட் போட்டித்தொடர் காரணமாக மைதானம் தொடர்பான பிரச்சினையை சந்தித்துள்ளது. இலங்கை ரக்பி கால்பந்தாட்ட சம்மேளனம் இதற்கான முடிவை அறிவிப்பதாக வாக்குறுதி அளித்துள்ள வேளையில் அவர்களது சொந்தப் போட்டிகள் ரேஸ் கோர்ஸ் அல்லது றோயல் விளையாட்டு மைதானத்தில் நடாத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.