பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான ”கொத்மலே சொக்ஸ்” கால்பந்து தொடரில் இன்று (செப்.26) இடம்பெற்ற முதலாவது காலிறுதிப் போட்டியில் பெனால்டி முறையில் 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் ஹமீத் அல் ஹுசைனி அணியை வெற்றி கொண்டதன் மூலம் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
ஏற்கனவே இடம்பெற்ற குழு மட்டத்திலான முதல் சுற்றுப் போட்டிகள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் தலா ஏழு அணிகள் போட்டியிட்டன. அனைத்து அணிகளும் தமது குழுவில் உள்ள ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை வீதம் மோதின. நான்கு குழுக்களிலும் இருந்து முதல் இரு இடங்களைப் பெற்ற அணிகள் காலிறுதி சுற்றுக்குத் தெரிவாகின.
Photos: St.Patrick’s v Hameed Al Husseinie | Kotmale Chox U19 QF 1
அந்த வகையில் குழு ”டி” யில் போட்டியிட்ட யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணி, தாம் விளையாடிய ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற்று குழு நிலையில் முதல் இடத்தைப் பெற்றுக்கொண்டது.
அதேபோன்று, குழு ”ஏ” யில் அங்கம் வகித்த கொழும்பு ஹமீத் அல்-ஹுசைனி கல்லூரி அணி, தாம் விளையாடிய ஆறு போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று, ஒரு போட்டியில் தோல்வியடைந்து குழு மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.
அதன்படி குழு ”ஏ” யில் இருந்து தெரிவாகிய கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி கல்லுாரி அணியும், குழு ”டி” யில் இருந்து தெரிவாகிய யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணியும் இன்றைய காலிறுதியில் மோதிக்கொண்டன. இந்தப் போட்டி கொழும்பு சிட்டி லீக் கால்பந்து மைதானத்தில் மாலை 3 மணிக்கு ஆரம்பமாகியது.
போட்டி ஆரம்பமாகியது முதல் ஆட்டம் விறுவிறுப்பாகவே இருந்தது. போட்டியின் 6ஆவது நிமிடத்தில் ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி அணிக்கு இலவச உதை (ப்ரீ கிக்) ஒன்றுக்கான வாய்ப்பு கிடைத்தது. அதன்போது கரீம் பாசில் பந்தை உதைய, அதனை அணித்தலைவர் அமான் கோலாக மாற்றி, தமது அணியை முன்னிலை பெறச் செய்தார்.
அதன் பின்னர் போட்டியின் 20ஆவது நிமிடத்தில் ஹமீத் அல் ஹுசைனி அணி வீரர் ரிஷானுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரு அணியினருக்கும் பல ப்ரீ கிக் வாய்ப்புகள் கிடைத்தன. எனினும் அதனால் எவரும் சிறந்த பயனைப் பெற்றுக்கொள்ளவில்லை. போட்டியின் 33ஆவது நிமிடத்தில் புனித பத்திரிசியார் அணி வீரர் அபீஷானுக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
முதல் பாதியின் 45 நிமிடங்கள் கடந்த நிலையில், மேலதிக நிமிடத்தில் புனித பத்திரிசியார் கல்லூரி அணிக்கு கோணர் உதைக்கான வாய்ப்பொன்று கிடைத்தது. அதன்போது அவ்வணி வீரர் அபீஷான் பந்தை தலையால் முட்டி கோல் அடித்து கோல் எண்ணிக்கைய சமப்படுத்தினார்.
முதல் பாதி: ஹமீத் அல் ஹுசைனி (1) – (1) புனித பத்திரிசியார்
பின்னர் தீர்மானம் மிக்க இரண்டாவது பாதியில் இரு அணிகளும் மிகவும் விறுவிறுப்பாக விளையாடியது. இரு அணி வீரர்களும் தமது அணிக்கான வெற்றி கோலைப் போடுவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும் அந்த வாய்ப்புகள் எதுவும் சிறந்த முறையில் நிறைவு செய்யப்படவில்லை. குறிப்பாக இரு அணியினதும் பின்கள வீரர்களினது பங்களிப்பு இரண்டாவது பாதியில் மிகவும் சிறந்த விதத்தில் அமைந்தது.
எவ்வாறிருப்பினும் இரு அணியினரும் இரண்டாவது பாதியில் எந்த கோல்களையும் பெறவில்லை.
முழு நேரம்: ஹமீத் அல் ஹுசைனி (1) – (1) புனித பத்திரிசியார்
எனவே போட்டியின் வெற்றியைத் தீர்மானிப்பதற்காக இரு அணியினருக்கும் பெனால்டி உதைக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
பெனால்டி விபரம்
அன்டனி சுபாஷ் (புனித பத்திரிசியார் அணி) – இவர் அடித்த பந்து கோல் கம்பத்திற்கு வெளியே சென்றது.
சாஜித் (ஹமீத் அல் ஹுசைனி அணி) – சிறந்த முறையில் கோலைப் பெற்றுக் கொடுத்தார்.
அனிருத் (புனித பத்திரிசியார் அணி) – கோலைப் பெற்றுக் கொடுத்தார்.
பாசில் (ஹமீத் அல் ஹுசைனி அணி) – பாசில் அடித்த பந்தை புனித பத்திரிசியார் அணியின் கோல்காப்பாளர் பிருன்தாபன் சிறந்த முறையில் தடுத்தார்.
ஹயின்ஸ் (புனித பத்திரிசியார் அணி) – கோலைப் பெற்றுக் கொடுத்தார்.
ஷாஹிட் (ஹமீத் அல் ஹுசைனி அணி) – இவரது உதையையும் கோல்காப்பாளர் பிருன்தாபன் சிறப்பாகப் பாய்ந்து தடுத்தார்.
பி.வேனு (புனித பத்திரிசியார் அணி) – இவர் அடித்த பந்தை ஹமீத் அல் ஹுசைனி அணி கோல்காப்பாளர் தினேஷ் தடுத்தார்.
அமான் (ஹமீத் அல் ஹுசைனி அணி) – தற்பொழுது முன்றாவது முறையாகவும் சிறந்த முறையில் செயற்பட்ட கோல்காப்பாளர் பிருன்தாபன் அமானின் உதையையும் தடுத்து தனது அணிக்கான பாரிய பங்களிப்பை வழங்கினார்.
ஷான்தன் (புனித பத்திரிசியார் அணி) – இவர் தனது அணிக்கான வெற்றி கோலை அடித்தார்.
பொனால்டி முடிவு : புனித பத்திரிசியார் (3) – (1) ஹமீத் அல் ஹுசைனி
இந்தப் போட்டி முடிவுகளின்படி, ”கொத்மலே சொக்ஸ்” கால்பந்து தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு தெரிவாகியுள்ள முதல் அணியாக யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணி திகழ்கின்றது.
Thepapare.com இன் சிறந்த வீரர் : பிருன்தாபன் (புனித பத்திரிசியார் அணி)