இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 1ஆவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நேற்று ஆரம்பமானது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் ஆடிய இந்திய அணி நேற்றைய முதலாவது நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 291 ஓட்டங்களை பெற்றிருந்தது. அப்போது ஆடுகளத்தில் ஜடேஜா 11 ஓட்டங்களுடனும், உமேஷ் யாதவ் 8 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
பின் இன்று 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. இதில் தொடர்ந்து ஆடிய இந்திய அணி தமது முதல் இனிங்சில் மேலும் 27 ஓட்டங்களை சேர்த்து 318 ஓட்டங்களை பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் முரளி விஜே 65 ஓட்டங்களையும், புஜாரா 62 ஓட்டங்களையும், ஜடேஜா ஆட்டம் இழக்காமல் 42 ஓட்டங்களையும், ரவிஷந்திரன் 40 ஓட்டங்களையும் பெற்றனர். நியூசிலாந்து அணியின் பந்து வீச்சில் சான்ட்னெர் மற்றும் போல்ட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தி இருந்தனர்.
அதன்பின் நியூசிலாந்து அணி தமது முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆரம்ப விக்கெட்டுக்காக 35 ஓட்டங்கள் பகிரப்பட்ட பின்பு தொடக்க வீரர் மார்ட்டின் கப்டில் 21 ஓட்டங்களோடு ஆட்டம் இழந்தார். ஆனால் அதன்பின் ஜோடி சேர்ந்த டொம் லெதம், கேன் வில்லியம்சன் ஆகியோர் சிறப்பான நிதான போக்கை கொண்ட ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதன்படி இருவரும் அரைச்சதம் அடித்து நியூசிலாந்து அணிக்கு சிறந்த அடித்தளமிட்டார்கள்.
நியூசிலாந்து அணி 2ஆவது நாள் தேனீர் இடைவேளையின் போது 47 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 152 ஓட்டங்களை பெற்று இருந்தது. அப்போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பிறகு மழை தொடர்ந்து பெய்தமையினாலும், மைதானத்தின் பவுண்டரி எல்லைக்கு அருகே மழைநீர் தேங்கி நின்றமையாலும் 2ஆவது நாள் ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
அப்போது ஆடுகளத்தில் கேன் வில்லியம்சன் 65 ஓட்டங்களோடும்,டொம் லெதம் 56 ஓட்டங்களோடும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். வீழ்ந்த ஒரு விக்கெட்டை உமேஷ் யாதவ் கைப்பற்றி இருந்தார்.
போட்டியின் சுருக்கம்
இந்தியா – 318/10
முரளி விஜே 65, புஜாரா 62, ஜடேஜா 42*, ரவிஷந்திரன் அஷ்வின் 40
சான்ட்னெர் 94/3, போல்ட் 67/3
நியூசிலாந்து – 152/1
கேன் வில்லியம்சன் 65*, டொம் லெதம் 56*
உமேஷ் யாதவ் 22/1
நியூசிலாந்து அணி 166 ஓட்டங்கள் பின்னிலையில்