குமார் சங்கக்கார தலைமையில் ‘முரளி நல்லிணக்க கிண்ணம் – 2016’ ஆரம்பம்

330
Murali Cup 2016 Opening Ceremony

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘முரளி நல்லிணக்க கிண்ணம் – 2016’ போட்டிகள் நேற்று (21 செப். 2016) குமார் சங்கக்கார தலைமையில் கிளிநொச்சியில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இம்முறை இடம்பெறும் போட்டிகளுக்காக, மேலதிகமாக 10 அணிகள் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ளதுடன், பெருமைக்குரிய இக்கிண்ணத்தை சுவீகரிப்பதற்கு ஆண்கள் மற்றும் மகளீர் என இரு பிரிவுகளுக்கும் வாய்ப்பு வழங்கப்படுள்ளது.

இந்தப் போட்டிகளின் ஆரம்ப விழாவில், கௌரவ அதிதியாக கலந்துகொண்ட கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார கருத்து தெரிவிக்கையில், “வடக்கு மற்றும் கிழக்கில் புதிய கிரிக்கெட் வீரர்கள் உருவாவதற்கும், சிறந்த கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய திறமைகளை வெளிகாட்டுவதற்கும், அதன் மூலம் அவர்கள் சர்வதேச தரத்திற்கு செல்வதற்கும், சிறந்த அடித்தளமாக இந்தப் போட்டிகள் இருக்கின்றன’ என்று தெரிவித்தார்.

முரளி நல்லிணக்க கிண்ணம் 2016 – ஆரம்ப விழா படங்கள்

முரளி நல்லிணக்க கிண்ண போட்டி தொடர் உருவாக்கம் முதல் அதில் இணைந்திருந்த குமார் சங்கக்கார ஆரம்ப விழாவில் மேலும் குறிப்பிடுகையில், அணிகள் இப்போட்டித் தொடரை, “வெறுமனே 20 ஓவர்கள் கொண்ட போட்டித்தொடராக நோக்காது, போட்டித் தொடரின் உருவாக்கத்திக்கான பின்னணியை நோக்க வேண்டும். போட்டித்தொடர் முழுவதும் தோழமையுணர்ச்சியுடனும், நட்புணர்வை பரப்புவதன் மூலமும், முரளி நல்லிணக்க கிண்ண போட்டியின் உண்மையான நோக்கங்களை அடைய அணிகள் கடப்பாடுடன் விளையாடுவது முக்கியம்” எனவும் தெரிவித்தார்.

இப்போட்டித் தொடரானது, கிளிநொச்சி, மாங்குளம், ஒட்டுசுட்டான் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் உள்ள மைதானங்களில் இன்று முதல் நடைபெறவுள்ளன. இதன் இறுதிப்போட்டி, எதிர் வரும் 25ஆம் திகதி, கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டித் தொடரின் போது, குமார் சங்கக்கராவுடன் உலக கிரிக்கெட் ஜாம்பவான்களாகிய மஹேல ஜயவர்தன மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோரும் இணைந்து சிறப்பிக்கவுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.