தெற்காசிய நீர் விளையாட்டுப் போட்டிகள் இலங்கையில்

424
South Asian swimming

இலங்கை நீர் சார்ந்த விளையாட்டு வரலாற்றில் முதன் முதலாக, இலங்கை நீர் விளையாட்டு சம்மேளனமானது தெற்காசிய நீர் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டிகளை இலங்கையில் ஒழுங்கு செய்யவுள்ளது. இப்போட்டிகளானது ஒக்டோபர் 18ஆம் திகதி சுகததாச உள்ளக நீச்சல் தடாகத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கையானது 10 வருடங்களுக்கு பின்னர் சர்வதேச விளையாட்டு போட்டியொன்றை பொறுப்பேற்று நடாத்தவுள்ளது. 2006ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளின் பின்னர், இலங்கையில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள சர்வதேச விளையாட்டு தொடர் இதுவாகும். 7 நாடுகளை பிரதிநித்துவப்படுத்தி 300 இற்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பங்குபெற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை நீர் விளையாட்டு சம்மேளனத்தின் செயலாளர் பங்குபற்றும் நாடுகள் பற்றி நம்மிடம் கருத்து தெரிவித்த பொழுது,

“10 வருடங்களின் பின் சர்வதேசப் போட்டி ஒன்றை நாம் ஒழுங்கு செய்வது இதுவே முதன் முறையாகும். இறுதியாக ஒழுங்கு செய்யப்பட்ட சர்வதேச போட்டியானது தெற்காசியப் போட்டிகளாகும். 8 தெற்காசிய நாடுகளில், ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு, வங்காளதேசம், நேபாள் மற்றும் இலங்கை ஆகிய 7  நாடுகள் போட்டிகளில் பங்குகொள்வதை உறுதி செய்துள்ளன.”

போட்டி ஆரம்பிப்பதற்கு ஒரு மாத காலம் இருக்கும் நிலையில், இலங்கை நீர் விளையாட்டு சம்மேளனமானது  இப்போட்டிகளை வெற்றிகரமாக  நடாத்துவதற்கான அணைத்து ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருக்கிறது. ஒக்டோபர் 18ஆம் திகதி சுகததாச உள்ளக நீச்சல் தடாகத்தில் ஆரம்பிக்கவுள்ள இப்போட்டிகள் ஒக்டோபர் 23ஆம் திகதி காலி முகத்திடலில் நிறைவு செய்யப்படவுள்ளது.

இலங்கையில் நடைபெற உள்ள போட்டிகளின் சிறப்பம்சம் ஆனது, இப்போட்டிகள் நீச்சல், வாட்டர் போலோ மற்றும் டைவிங் ஆகிய விளையாட்டுகளையும் உள்ளடக்கியுள்ளது. ஒக்டோபர் 18 ஆம் திகதி சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் ஆரம்ப வைபவம் நடைபெறவுள்ளதோடு, ஒக்டோபர் 23ஆம் திகதி காலி முகத்திடலில், கடல் நீச்சல் போட்டிகளுடன் நிறைவுபெறவுள்ளது.

இளம் வீர, வீராங்கனைகளுக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில் நீச்சல் மற்றும் டைவிங் போட்டிகள் 3 வயதுப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடைபெறவுள்ளது. அப்பிரிவுகளானது, 13-14 வயத்திற்குட்பட்ட பிரிவு, 15-17 வயதுப்பிரிவு ஆகும். மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் திறந்த வயதுப்பிரிவில் பங்குபெற உள்ளனர். வாட்டர் போலோ விளையாட்டு 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு உரித்தானதாகும்.

இப்போட்டிகளில் கலந்துகொள்வதற்கான இலங்கை அணிக்கான தெரிவுகள் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளதோடு, இறுதி விபரம் ஒக்டோபர் முதலாம் வாரத்தில் உறுதி செய்யப்படவுள்ளது.