டி மசேநொட் மற்றும் புனித பட்ரிக்ஸ் கல்லூரிகள் கால்பந்தாட்ட சம்பியனாகின

533

இவ்வருடத்திற்கான பாடசாலை மட்ட கால்பந்தாட்ட சுற்றுத் தொடரின் அகில இலங்கை மட்டப் போட்டிகளில் கந்தான டி மசேநொட் கல்லூரி 17 வயதுக்கு உட்பட்ட பிரிவிலும், யாழ்ப்பாணம் புனித பட்ரிக்ஸ் கல்லூரி 15 வயதுக்கு உட்பட்ட பிரிவிலும் சம்பியனாகத் தெரிவாகியுள்ளன.

17 வயதிற்கு உற்பட்ட போட்டிகள் 

9 மாகாணங்களும் உள்ளடங்களாக 27 பாடசாலைகள் இப்போட்டி தொடரில் பங்குபற்றின. அகில இலங்கை மட்டப் போட்டிகள் அனுராதபுரம் சிறைச்சாலை மைதானம் மற்றும் அனுராதபுரம் சிக்னல் கோர்ப்ஸ் மைதானம் என்பவற்றில் தொடர்ந்து மூன்று நாட்களாக  நடைப்பெற்றன.

மேல் மாகாணத்தை சேர்ந்த அணிகளான டி மசேநொட் கல்லூரி மற்றும் ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரிகள் 17 வயதிற்குப்பட்ட இறுதிப் போட்டியில் அனுராதபுரம் சிறைச்சாலை மைதானத்தில்  மோதிக்கொண்டன.

மேல் மாகாணத்தில் இரண்டாவது இடத்தை பிடித்த டி மசேநொட் கல்லூரி இறுதிப் போட்டிக்கு முன்னர், கண்டி பெறவர்ட்ஸ் கல்லூரி, பதுளை தர்மதூத கல்லூரி, யாழ்ப்பாணம் மானிப்பாய் இந்து கல்லூரி, கிண்ணியா மத்திய கல்லூரி ஆகிய கல்லூரி அணிகளுடன் வெற்றிப்பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவானது.

மேல் மாகாணத்தில் சம்பியனான ஹமீட் அல் ஹுஸைனி அணி, இறுதிப் போட்டிக்கு முன்னர், போர்டைஸ் தமிழ் வித்தியாலயம், புனித ஜோசப் கல்லூரி, திருகோணமலை புனித பட்ரிக்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் புனித பட்ரிக்ஸ் கல்லூரி ஆகிய அணிகளுடனான போட்டிகளில் வெற்றிப்பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவானது.

சம்பியனாகும் கனவுடன் விளையாடிய இரு அணியும் கடினமாக மோதிக்கொண்டன. எனினும் இறுதிவரை இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியாத நிலையில் போட்டி நேர முடிவின் பொழுது 0-0 என்ற கோல் கணக்கில் காணப்பட்டது.

வெற்றியாளர்களை தீர்மானிக்க இரு அணிகளுக்கும் பெனால்டி உதைகள்  வழங்கப்பட்டன. அதன்போது, தொடர்ந்து நான்கு கோல்களை டி மசேநொட் கல்லூரி அடிக்க, ஹமீட் அல் ஹுஸைனி வீரர்களின் இரு உதைகளை  டி மசேநொட் கல்லூரி கோல் காப்பாளர் டினேத் தீக்ஷண அருமையாக தடுத்தார். இதனால் டி மசேநொட்  கல்லூரி சம்பியனானது.

எனினும், வெற்றிப் பெற்ற அணிகளுக்கு கேடயம் வழங்கப்படும் பொழுது ஒருங்கிணைப்பு குழுவின் மோசமான நிர்வாக முறைமையை அனைவராலும் காணக்கூடியதாக இருந்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு வழங்கப்பட்ட கிண்ணங்கள் மற்றும் கேடயங்களின் ஒரு பகுதி உடைந்து காணப்பட்டது மட்டுமல்லாது அவை சுத்தம் செய்து சரி செய்யப்படாமலும் இருந்தமை வருத்தத்துக்குறிய விடயமாகும்.

அனுராதபுரம் சிக்னல் கோர்ப்ஸ் மைதானத்தில் நடைப்பெற்ற 17 வயதுக்கு உட்பட்டோருக்கான 3ஆம் இடத்திற்கான போட்டியில் யாழ்ப்பாணம் புனித பட்ரிக்ஸ் கல்லூரி, கிண்ணியா மத்திய கல்லூரியை 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வென்று 3ஆம் இடத்தை கைப்பற்றியது.

யாழ்ப்பாணம் புனித பட்ரிக்ஸ் கல்லூரியின் பொறுப்பாளர் எமக்குக் கருத்து தெரிவித்த பொழுது,

“எங்களுடைய அரையிறுதி போட்டி மாலை 5 மணிக்கு சிக்னல் கோர்ப்ஸ் மைதானத்தில் நிறைவுப்பெற்றது. அதன் பின் கிண்ணியா மத்திய கல்லூரியுடனான   3ஆம் இடத்திற்கான போட்டியை விளையாடுவதற்காக மாலை 5.30 மணிக்கு சிறைச்சாலை மைதானத்திற்கு செல்லுமாறும், அவ்வாறு உரிய நேரத்திற்கு செல்லாவிடின் போட்டியின் வெற்றி எதிரணிக்கு கொடுக்கப்படும் எனவும் ஒருங்கிணைப்பாளர்கள் எமக்கு எச்சரித்தனர். நாம் எவ்வாறு அரை மணி நேரத்தினுள் அடுத்த மைதானத்திற்கு செல்வது?

முச்சக்கர வண்டிகளிலேயே மைதானத்திற்கு வந்தோம். அது மட்டுமல்லாது நமது அணியினர் நாள் முழுவதும் விளையாடிவிட்டு களைப்புடன் இருந்தனர். இதை ஒருங்கிணைப்பாளர்களுக்கு விளங்கப்படுத்தவது மிக கடினமாக அமைந்தது. இறுதியில் அவர்கள் போட்டியை தள்ளிபோடுவதற்கு ஒத்துக்கொண்டு  மறுநாள் காலை 7.30 மணிக்கு சிறைச்சாலை மைதானத்திற்கு வரும்படி கூறினர். இப்போது நேரம் காலை 11.30 மணி. தற்போது அவர்கள் நம்மை சிக்னல் கோர்ப்ஸ் மைதானத்திற்கு செல்லும்படி பணிக்கின்றனர். எமது வலய மட்ட போட்டிகளும் இதை விட சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது” என்று அவர் இறுதிப் போட்டி இடம்பெற்ற நாள் காலையில் தெரிவித்திருந்தார்.

 மாலை 5 மணிக்கு அரையிறுதி போட்டி நிறைவடைந்த பின்னர் வெறும் 30 நிமிடங்களில் 3ஆம் இடத்திற்கான போட்டியில் பட்ரிக்ஸ் கல்லூரியை எவ்வாறு விளையாட கூறலாம் என்பது கேள்விக்குரிய விடயமாகும்.

முதலாம் சுற்று 

Al Adhan MV, Badulla 0  1 Al Hira MV, Nattandiya
Jinaraja MV, Singhapitiya 3  0 Royal College, Polonnaruwa
Zahira College, Mawanella 0  1 Olcott MV, Galle
St.Sebastian’s College, Katuneriya 1  0 Seevali MMV, Ratnapura
Mahagaswewa MV, Galenbindunuwewa 0  2 Fordyce Tamil Vidyalaya, Dik Oya
Kirinda Muslim College, Hambantota 4  6 Manipay Hindu College, Jaffna
De Mazenod College, Kandana 3  0 Berrewaerst College, Kandy
Sivananda College, Batticaloa 1  4 Dharmadutha College, Badulla
Kinniya Central College 3  1 President’s College, Rajagiriya
Zahira College, Gintota 2  1 Jaffna Central College

இரண்டாம் சுற்று 

St.Patrick’s College, Jaffna 5  1 Al Hira MV, Nattandiya
Jinaraja MV, Singhapitiya 1  0 Olcott MV, Galle
St.Joseph’s College, Trincomalee 1  0 St.Sebastian’s College, Katuneriya
Fordyce Tamil Vidyalaya, Dik Oya 1  3 Hameed Al Husseinie College
St.Joseph’s College, Anuradhapura 0  3 Manipay Hindu College, Jaffna
De Mazenod College, Kandana 5  2 Dharmadutha College, Badulla
Baduriya MMV, Mawanella 1  3 Kinniya Central College
Zahira College, Gintota 0  1 St.Joseph Vaz College, Wennappuwa

காலிறுதி சுற்று 

St.Patrick’s College, Jaffna 3  0 Jinaraja MV, Singhapitiya
St.Joseph’s College, Trincomalee 0  1 Hameed Al Husseinie College
Manipay Hindu College, Jaffna 0  1 De Mazenod College, Kandana
Kinniya Central College 1  0 St.Joseph Vaz College, Wennappuwa

அரையிறுதி சுற்று  

St.Patrick’s College, Jaffna 0  1 Hameed Al Husseinie College
Kinniya Central College 0  1 De Mazenod College, Kandana

3ஆம் இடத்திற்கான போட்டி 

St.Patrick’s College, Jaffna 3  1 Kinniya Central College

இறுதி போட்டி

De Mazenod College Kandana 0(4) 0(2) Hameed Al Husseinie College

15 வயதிற்குற்பட்ட  போட்டிகள்

அனுராதபுரம் பொது விளையாட்டு அரங்கில் நடைப்பெற்ற 15 வயதிற்குற்பட்டோருக்கான போட்டிகளில் வட மாகாண அணிகளே  ஆதிக்கம் செலுத்தின.

இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் புனித பட்ரிக்ஸ் கல்லூரி மற்றும் இளவாலை புனித ஹென்றிஸ் கல்லூரி அணிகள் மோதிக்கொண்டன. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் கடினமாக மோதின. பெனால்டி உதை மூலம் பெறப்பட்ட ஒரே ஒரு கோலினால் புனித பட்ரிக்ஸ் கல்லூரி சம்பியன் பட்டத்தை வென்றது.

அனுராதபுர புனித ஜோசப் கல்லூரியை 2-1 என்று வெற்றிக்கொண்ட மன்னார்  புனித லூசியா கல்லூரி 3ஆம் இடத்தை கைப்பற்றிக்கொண்டது.