முடிவுக்கு வருகிறது அப்ரிடியின் கிரிக்கட் வாழ்க்கை

8300
Shahid Afridi

பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் மற்றும் சகலதுறை வீரரான 36 வயது நிரம்பிய ஷஹித் அப்ரிடி

ஏற்கனவே டெஸ்ட் மற்றும் கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளின் பின் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்று இருந்தார். அதன் பின் அவர் தொடர்ந்து டி20 கிரிக்கட் போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்த வருட ஆரம்பத்தில் இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணியின் தலைவராக ஷஹித் அப்ரிடி செயற்பட்டார். இந்த தொடரில் பாகிஸ்தான் மோசமாக விளையாடியதால் தலைமைப் பதவியில் இருந்து அப்ரிடி நீக்கப்பட்டார். அத்துடன் டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அப்ரிடி தொடர்ந்து பாகிஸ்தான் அணியில் விளையாட விரும்பினார். சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய ஒரேயொரு டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியில் அப்ரிடிக்கு இடம் கொடுக்கப்படவில்லை.

விரைவில் பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு இராச்சியத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. அதன்பின் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் தான் டி20 போட்டியில் விளையாட இருக்கிறது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தொடருடன் அப்ரிடி அதிகாரபூர்வமாக ஓய்வு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கட் சபை விரும்புகிறது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான தொடருக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியில் அப்ரிடி இடம்பெறாத நிலையில் 16ஆவது வீரராக அப்ரிடியை அணியில் சேர்த்துள்ளது.

ஆனால், அப்ரிடி பாகிஸ்தான் அணியில் தொடர்ந்து விளையாட விரும்புவதாகவும், தேசிய அணியில் இடம்பிடிக்க ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், பாகிஸ்தான் கிரிக்கட் சபை மற்றும் தேர்வுக் குழு அப்ரிடியின் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், அப்ரிடி நல்ல மரியாதையுடன் ஓய்வு பெற வேண்டும் என்று கூறி இருந்ததோடு வெளிநாட்டு லீக் மற்றும் உள்ளூர் போட்டிகளில் அப்ரிடி விளையாட அனுமதி அளித்து இருந்தது.

இந்த நிலையில் தனது 20 வருட கிரிக்கட் வாழ்கையை முடித்துக் கொள்ளும் முகமாக ஷஹித் அப்ரிடி டி20 போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன்படி மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டி20 தொடரின் பின்னர் ஷஹித் அப்ரிடி சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷஹித் அப்ரிடியின் டி20 வாழ்க்கை உற்றுநோக்கினால் ஷஹித் அப்ரிடி முதல் தடவையாக 2006ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிரான டி20 போட்டியின் போது சர்வதேச டி20 அரங்கில் அறிமுகமானார். இதுவரையில் தனது 10 வருட டி20 பயணத்தில் ஷஹித் அப்ரிடி 98 டி20 போட்டிகளில் விளையாடி 18.01 என்ற துடுப்பாட்ட சராசரியில் 1405 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அதில் ஆட்டம் இழக்காமல் பெற்ற 54 ஓட்டங்கள் அதிக பட்ச ஓட்டங்களாகும். அத்தோடு அப்ரிடி மொத்தமாக 102 பவுண்டரிகள் மற்றும் 73 சிக்ஸர்களை விளாசி உள்ளார். இதேவேளை பந்துவீச்சில் 96 இனிங்ஸ்களில் பந்துவீசி 24.35 என்ற பந்துவீச்சு சராசரியில் 97 விக்கட்டுகளைக் கைப்பற்றி உள்ளார். அதில் சிறந்த பந்து வீச்சு 11 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளைக் கைப்பற்றி இருந்தமையாகும்.

இது இவ்வாறு இருக்க 82 வயதாகும் ஷகாரியார் கான் பாகிஸ்தான் கிரிக்கட் சபை தலைவராக இருந்து வருகிறார். பாகிஸ்தான் கிரிக்கட்டிற்கு தீவிரவாதிகள் மூலம் பல்வேறு சோதனைகள் வந்தபோதும் எந்தவித சிரமத்திற்கு உள்ளாகாமல் அணியை சிறப்பாகக் கொண்டு சென்றார்.

இவர் சமீபத்தில் ஆசிய கிரிக்கட் கவுன்சில் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்வதற்காக இலங்கை சென்றிருந்தார். அப்போது மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதன்பின் தற்போது அவரது தமணியில் அடைப்பு ஏற்பட்டதால் கடந்த வாரம் இங்கிலாந்தில் உள்ள ராயல் பிராம்ப்டன் மருத்துவமனையில் தமணி வால்வு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.

மருத்துவமனையில் இருந்து இன்னும் சில தினங்களில் செல்லும் அவர், இந்த மாத இறுதியில் பாகிஸ்தான் திரும்புவார் என்று கூறப்படுகிறது. கடந்த 20 வருடங்களாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வரும் கான், அதற்காக உணவு கட்டுப்பாட்டில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தக் கட்டுப்பாட்டின் காரணமாக இதய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டுடன் இவரது மூன்றாண்டு பதவிக்காலம் முடிவடைய இருக்கிறது. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கட் வாரியத்தின் முழு அதிகாரம் படைத்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் இவரது பதவிக்காலத்தை நீடித்தார். தற்போது இதய ஆபரேசன் செய்துள்ளதால், மருத்துவர்கள் நீண்ட நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினால் தனது பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்