ஸாஹிராவை வீழ்த்தி சம்பியனானது ஹமீதியா

2738
Hameed Al Husseinie College

அகில இலங்கை மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்டப் போட்டிகளின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியன் கொழும்பு ஸாஹிராவை பெனால்டி முறையில் 4-3 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி, ஹமீத் அல் ஹுஸைனி கல்லூரி இம்முறை சம்பியனாக தெரிவாகியுள்ளது. 

அகில இலங்கை மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்டப் போட்டிகளின் இறுதிக் கட்டப் போட்டிகள் நேற்று (செப் 11) அனுராதபுரம் சிறைச்சாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றன. இதில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியன் கொழும்பு ஸாஹிரா மற்றும் ஹமீத் அல் ஹுஸைனி கல்லூரிகள் மோதின.

போட்டியின் புகைப்படங்கள்

ஏற்கனவே, இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில்ஸாஹிரா அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் காலி புனித எலோசியஸ் கல்லூரி அணியையும். ஹமீதியா அணி 3-0 என்ற கோல்கள் கணக்கில் கிண்ணியா மத்திய கல்லூரியையும் வெற்றி கொண்டன.

கொழும்பை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னணி பாடசாலை அணிகளான இவ்விரு அணிகளும் சம அளவிலான பலத்தையே கொண்டுள்ளன. எனவே போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்று யாராலும் உறுதியாகக் கூற முடியாமல் இருந்தது. இதன் காரணமாக போட்டி மிகவும் எதிர்பார்ப்பு மிக்கதாக அமைந்திருந்தது.

போட்டி ஆரம்பித்து 10ஆவது நிமிடத்தில் ஸாஹிரா அணி வீரர் துல்பிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதன் காரணமாக ஹமீதியா அணிக்கு ஒரு இலவச உதை (ப்ரீ கிக்) வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனை சிறந்த முறையில் பயன்படுத்திய ஹமீதியா அணியின் உப தலைவர் கரீம் பாசில் ப்ரீ கிக் மூலம் தனது அணிக்கான முதலாவது கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

அதன் பின்னர் 10 நிமிடங்கள் கழிந்து, போட்டியின் 20ஆவது நிமிடத்தில் ஸாஹிரா அணிக்கு கோணர் உதை வாய்ப்பொன்று கிடைத்தது. அந்த உதையை ஸாஹிரா வீரர் ஹிஜாஸ் தலையால் முட்டி கோல் பெற்றதன்மூலம் ஸாஹிரா அணி தமக்கான முதல் கோலைப் பெற்று, போட்டியை சமநிலைப்படுத்தியது. அதன் பின்னர் முதல் பாதியில் எந்த கோல்களும் பெறப்படவில்லை.

முதல் பாதி : ஹமீதியா 01 – 01 ஸாஹிரா

சம்பியன் கிண்ணத்தைப் பெறுவதற்கு மேலும் ஒரு கோலைப் பெற வேண்டிய கட்டாயத்துடன் ஆரம்பமான இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் பலத்த போராட்டத்துடன் விளையாடினர். எனினும் இரு அணி வீரர்களும் சிறந்த முறையில் விளையாடியமையினால் யாருக்கும் கோல்கள் பெறும் எந்தவித சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை.

இவ்வாறான ஒரு சிறப்பான இரண்டாவது பாதி முடிவின்போது, இரு அணிகளினாலும் மேலதிகமாக எந்தவொரு கோலையும் போட முடியாமல் போனது. எனவே போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையானது.

முழு நேரம் : ஹமீதியா 01 – 01 ஸாஹிரா

எனவே இந்த இறுதிப் போட்டியின் வெற்றியைத் தீர்மானிப்பதற்காக பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன்போது ஸாஹிரா அணியின் தலைவர் பரூட் பாயிஸ் அடித்த முதல் உதையை ஹமீதியா கோல் காப்பாளர் தினேஷ் சிறந்த முறையில் தடுத்தார்.

அதேவேளை ஹமீதியா அணி வீரர் கரீம் பாசில் அடித்த முதல் பெனால்டி உதையின்போது, பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியே சென்றது. எனவே பெனால்டியின் முதல் உதைகளை இரண்டு அணிகளும் தவறவிட்டன. பின்னர் இரு அணிகளிலிருந்தும் 2ஆவது, 3ஆவது மற்றும் 4ஆவது பெனால்டி உதைகளை அடித்தவர்கள் பந்தை கோல் கம்பத்தினுள் சரியாக அடித்தனர். எனவே 3-3 என்று சமநிலையானது.

இந்நிலையில் ஸாஹிரா அணியின் 5ஆவதும் இறுதியுமான பெனால்டி உதையை ஹமீதியா அணியின் கோல் காப்பாளர் தினேஷ் தடுத்தார். எனவே, ஹமீதியா அணியின் வெற்றி கோலைத் தீர்மானிப்பதற்கான பெனால்டி உதை வாய்ப்பை சதரு பெற்றார். அவர் அதனை கோலாக மாற்ற அவ்வணியின் வெற்றி உறுதியானது.

எனவே போட்டியின் முடிவில் பெனால்டி முறையில் 4-3 என்ற கோல்கள் கணக்கில் ஹமீத் அல் ஹுஸைனி கல்லூரி அணி வெற்றி பெற்று, அகில இலங்கை மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்டப் போட்டிகளின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான சம்பியனாகத் தெரிவாகியது.

இந்தப் போட்டியின் வெற்றி குறித்து ஹமீத் அல் ஹுஸைனி கல்லூரியின் கால்பந்து பயிற்றுவிப்பாளர் இம்ரான் ஹுஸைன் கருத்து தெரிவிக்கும்பொழுது,

“இலங்கையில் உள்ள முன்னணி பாடசாலை கால்பந்து அணிகளாக ஸாஹிராமற்றும் ஹமீதியா அணிகள் இருக்கின்றன. எனவே எமக்கு சிறந்த ஒரு இறுதிப் போட்டியை கண்டு ரசிக்க முடியுமாய் இருந்தது. இந்தப் போட்டி இரு பாடசாலை அணிகளுக்கு இடையிலான ஒரு போட்டி போன்று இருக்கவில்லை. மாறாக இரண்டு கழக அணிகள் விளையாடுவது போன்று இரு அணி வீரர்களும் தமது திறமையைக் காட்டியிருந்தனர்.

ஏற்கனவே இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியின்போது எமது பல வீரர்கள் காயத்திற்கு உள்ளாகியிருந்தனர். எனவே முக்கிய வீரர்கள் பலர் இறுதிப் போட்டியில் விளையாடுவது சந்தேகமாக இருந்தது. எனினும், அவர்கள் காயத்துடன் இறுதிப் போட்டியில் விளையாடினர். நாம் எதிர்பார்த்தது போன்று அவர்கள் தமது திறமையை வெளிப்படுத்தினர்.

இலங்கை தேசிய அணிக்கான சிறந்த வீரர்களை உருவாக்குவதையே நாம் பிரதான இலக்காகக் கொண்டுள்ளோம். அந்த வகையில் எமது வீரர்களின் திறமையைப் பார்க்கும்பொழுது, எங்களது இலக்கு வெற்றிப் பாதையில் சென்றுகொண்டுள்ளது என்பதை எம்மால் உணர முடியும்” என்று அவர் தெரிவித்தார்.

Round 1

Trinity College, Kandy               1 – 2         Kinniya Central College
St.Aloysius College, Galle         1 – 0         St.Sebastian’s College, Katuneriya
Hameed Al Husseinie                1 – 0         Zahira College, Gampola
St.Patrick’s College, Jaffna       1 – 0          Al Misbah College, Madampe
St.Henry’s College, Ilavalai       3 – 0         Bandiwewa MV, Jayanthipura
Al Aqsha College, Kinniya         3 – 1         Batugedara MV, Ratnapura
St.Joseph Vaz, Wennappuwa    2 – 0        Richmond College, Galle
Muthur Central College             6 – 0        Sirisumana MV, Ratnapura

Round 2

St.Lucia’s College, Mannar         5 – 0                Badulla Central College
Al Aqsha College, Kinniya           3 – 0                Dharmadutha College, Badulla
De Mazenod College                1(3) – 1(2)          St.Joseph Vaz College, Wennappuwa
Zahira College, Colombo             4 – 0               Muthur Central College
Kinniya Central College          1(3) – 1(1)           Ruwanveli MV, Horowpathana
St.Henry’s College, Ilavalai    0(2) – 0(4)           St.Aloysius College, Galle
St.Patrick’s College, Jaffna          2 – 0               Wickramabahu College, Gampola

Quarter Finals

Hameed Al Husseinie College   0(4) – 0(2)   St.Lucia’s College, Mannar
De Mazenod College, Kandana     0 – 3        Kinniya Central College
Zahira College, Colombo           0(4) – 0(2)    St.Patrick’s College, Jaffna
St.Aloysius’ College, Galle         2(4) – 2(2)    Al-Aqsha College, Kinniya

Semi Finals

Zahira College, Colombo             1 – 0      St.Aloysius’ College, Galle
Hameed Al Husseinie College    3 – 0      Kinniya Central College

Final

Hameed Al Husseinie College     1(4) – 1(3)     Zahira College, Colombo