கால்பந்து வீரர் ஈ.பி.ஷன்னவின் தற்போதைய வாழ்க்கை நிலைமை குறித்து அண்மையில் அதிகம் கதைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அவ்வாறான நிலைமைகள் இதன் பிறகு வீரர்களுக்கு ஏற்படுவதைத் தடுக்கும் முகமாக, இலங்கையின் இளம் கால்பந்து வீரர்களுக்கு தொழில் வழிகாட்டல் நிகழ்வுகள் மற்றும் விஷேட செயலமர்வுகளை நடத்துவதற்கான ஒரு திட்டத்தினை இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் முன்மொழிந்துள்ளார்.
இலங்கை கால்பந்து தேசிய அணியின் முன்னாள் வீரரும் அணித் தiலைவருமான ஈ.பி.ஷன்ன புதைகுழி தோண்டும் தொழிலை செய்து வருகின்றமை தொடர்பில் அண்மையில் பல ஊடகங்களிலும் பலவகையான செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. எனினும் நாட்டின் கால்பந்து மீதான மரியாதை மற்றும் தரத்தை குறைக்காமல் இருப்பதற்காக அதிகமானவர்கள் ஷன்னவிற்கு எதிரான கருத்துக்களையே தெரிவித்து வந்தனர். குறிப்பாக ஷன்னவின் தற்போதைய நிலைமைக்கு அவரே காரணம் என்றும் தெரிவித்தனர்.
ஷன்ன குறித்து இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் ரஞ்சித் ரொட்ரிகோ அண்மையில் கருத்து தெரிவிக்கையில், “ஷன்ன சிறந்த திறன் உள்ள ஒரு வீரராக இருந்தார். எனினும் அவரிடம், விளையாட்டு வீரரிடம் இருக்க வேண்டிய பண்பு, மரியாதை, கண்ணியம் மற்றும் விசுவாசம் என்பன இல்லாமல் இருந்தது. அதுவே அவரது வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது” என்று தெரிவித்திருந்தார்.
இவ்விடயத்தில் பலதரப்பட்ட பிரச்சினைகளும் மாற்று கருத்துகளும் வெளியிடப்பட்டு வந்த நிலையிலேயே, அவ்வாறான சம்பவங்கள் இனி வீரர்களுக்கு ஏற்படாமல் இருப்பதற்கு தற்பொழுது குறித்த தொழில் வழிகாட்டல் மற்றும் செயலமர்வு நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளன.
ஷன்னவின் விடயம் குறித்து தெளிவுபடுத்துவதற்காக அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. அதன்போது இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா இத்திட்டம் குறித்து கருத்து தெரிவித்தார். அங்கு உரையாற்றிய அவர்,
“எமது வீரர்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்து நாம் இந்த திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம். இதற்கான காகில்ஸ் உட்பட எமது ஏனைய அனுசரணையாளர்களுடனும் நாம் ஒன்றாக இணைந்து செயற்படவுள்ளோம்.
இத்திட்டத்திற்காக வருடம் ஒன்றிற்கு 5 லட்சத்தையும் விட அதிக பணம் செலவாகும். எனவே, பிபா (FIFA) மற்றும் ஆசிய கால்பந்நு கூட்டமைப்பு (AFC) என்பவற்றிடமிருந்து நாம் இதற்கான நன்கொடையைப் பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
இத்திட்டத்தினை ஆரம்பிப்பதற்காக நாம் முதற்கட்டமாக யாழ்ப்பாணம், அட்டன், மாத்தறை, பதுள்ளை மற்றும் கலபிடிய ஆகிய இடங்களில் பயிற்சி நிலையங்களை ஆரம்பிக்க உள்ளோம். அவற்றுக்கான முழு நேர பயிற்றுவிப்பாளர்களையும் இணைத்துக்கொள்ள உள்ளோம்.
இதன்போது வீரர்களின் திறமைகளை மேலும் வளர்க்கும் முகமாகவும், சிறந்த வீரர்களாக அவர்களை உருவாக்கும் நோக்குடனும் பயிற்சிகள் வழங்கப்படும். அதற்கு மேலாக எமது கால்பந்து வீரர்களுக்கு வாழ்க்கைத் திறன் தொடர்பாக கற்றுக் கொடுக்கவும், அவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளின் அறிவைக் கொடுக்கவும் நாம் உத்தேசித்துள்ளோம்.
இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் நாட்டை மதிக்கும், சிறந்த ஒழுக்கமுள்ள, திறமையான வீரர்களை எம்மால் உருவாக்க முடியும். 2022ஆம் ஆண்டாகும்பொழுது கால்பந்தை நாட்டில் மிகவும் பிரபலமான விளையாட்டாக கொண்டுவரும் நோக்குடனேயே நாம் இந்த செயற்திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம்” என்று அனுர டி சில்வா தெரிவித்தார்.
அதன்போது, தற்போதைய தேசிய கால்பந்து அணி வீரர்கள் ஒவ்வொருவரையும் எவ்வாறு ஒழுக்கம் மற்றும் மரியாதை உள்ள வீரர்களாக உருவாக்கலாம் என்று அனுர டி சில்வாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், “நாம் நடத்தவுள்ள வதிவிடப் பயிற்சிகளின்போது எமது வீரர்களை சிறந்த முறையில் தமது வாழ்க்கையைக் கொண்டு செல்லும்; ஒரு நபராக உருவாக்க முயற்சிப்போம். குறிப்பாக அவர்களை நாட்டின் சிறந்த பிரஜைகளாக உருவாக்குவதற்காகவே செயற்படுவோம்” என்றார்.
மேலும், “நான் இலங்கை தேசிய அணிக்காக விளையாடும்பொழுது காலையிலேயே பயிற்சிகளுக்கு செல்வேன். பயிற்சிகள் முடிந்தவுடன் உடனடியாக எனது தொழிலுக்கு செல்வேன். காரணம் எனக்கு எனது வாழ்க்கையை முன்னேற்ற வேண்டும் என்ற தேவை இருந்தது” என்று, தான் தேசிய அணியில் இருந்த காலத்தை அவர் உதாரணம் காட்டினார்.
அண்மைக்காலமாக சூடு பிடித்திருந்த ஷன்னவின் விவகாரம் குறித்து கால்பந்து சம்மேளனம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றதன. எனினும், ஷன்னவுக்கு ஏற்பட்ட நிலைமை இதன்பிறகு வேறு எந்த வீரருக்கும் ஏற்படக் கூடாது என்பதில் இலங்கை கால்பந்து சம்மேளனம் மிகவும் அவதானமாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஒரு சம்பவத்தில் இருந்து பாடம் கற்றதன் பின்னர் அவ்வாறு மீண்டும் ஏற்படாமல் இருக்க எடுக்கும் முயற்சிகள் நிச்சயம் வெற்றி அளிக்கும் என்பதில் ஐயமில்லை