இலங்கை கிரிக்கட் அணியின் சகலதுறை வீரர் திஸர பெரேரா அவரது போட்டிச் சம்பளத்திலிருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அவுஸ்திரேலிய அணியின் வேகப் பந்து வீச்சாளர் மிச்சல் ஸ்டார்க் சர்வதேச கிரிக்கட் சபையின் விதிகளை மீறிய குற்றம் சாட்டப்பட்டு கண்டிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் திஸர பெரேரா சர்வதேச கிரிக்கட் சபையின் 2.1.7 என்ற விதி முறையில் கூறப்பட்டிருக்கும் மொழி, செயல்கள் அல்லது துடுப்பாட்ட வீரரை கேவலப்படுத்தி அல்லது சைகைகள் பயன்படுத்தி ஆக்கிரோஷமான எதிர்வினை தூண்டக்கூடும் செயல்களை மீறிய குற்றச் சாட்டிற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளார். அத்தோடு அவுஸ்திரேலிய அணியின் மிச்சல் ஸ்டார்க் 2.1.1 என்ற விதி முறையில் கூறப்பட்டிருக்கும் விளையாட்டுக்கு முரணான நடத்தையை மேற்கொண்டு இருந்ததால் சர்வதேச கிரிக்கட் சபை அதிகாரிகளால் கண்டிக்கப்பட்டுள்ளார்.
இந்த அபராத கட்டணங்களை ஆடுகள நடுவர்களான மைக்கேல் கஃப், ரவீந்திர விமலசிறி, 3ஆம் நடுவர் அலீம் டார் மற்றும் 4ஆவது நடுவர் ரன்மோர் மார்டினஸ் ஆகியோர் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.
2ஆது ஒருநாள் போட்டியில் மிச்சல் ஸ்டார்க் வீசிய பந்தை இலங்கை அணியின் தினேஷ் சந்திமால் தடுத்தாடப் பந்து ஸ்டார்கிடம் சென்றது. அப்போது தினேஷ் சந்திமால் கிரீஸ்சிற்குள் இருப்பதை அவதானித்தும் ஸ்டார்க் அந்தப் பந்தை அவரை நோக்கி வீசி எறிந்தார். இதன் மூலம் அவர் கண்டிக்கப்பட்டு இருந்ததோடு அவுஸ்திரேலிய அணி வெற்றி இலக்கை நோக்கி ஆடிய வேளையில் ஆர்மபத் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் திஸர பெரேரா வீசிய பந்து வீச்சில் ஆட்டம் இழந்து இருந்தார். அப்போது திஸர பெரேரா தகாத வார்த்தைகளைக் கூறி டேவிட் வோர்னரை சினங் கொள்ளச் செய்து இருந்தார் என்ற குற்றச் சாட்டிற்காக 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்ட்டுள்ளார்.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்