டயலொக் சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளின் சூப்பர் 8 சுற்று ஆரம்பிப்பதற்கு 3 நாட்களே இருக்கும் நிலையில் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் தவிர்க்க முடியாத காரணத்தினால் சூப்பர் 8 சுற்றை ஒத்திவைத்துள்ளது.
இது தொடர்பாக 24ஆம் திகதி மாலை கருத்து தெரிவித்த இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனமானது,
“ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதி ஆரம்பிக்க ஒழுங்கு செய்யப்பட்டிருந்த டயலொக் சாம்பியன்ஸ் லீக் சூப்பர் 8 சுற்றுக்கள் தவிர்க்க முடியாத காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய திகதி மற்றும் ஏனைய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்” என தெரிவித்தது.
இவ் ஒத்திவைப்புக் குறித்து எமது நிறுவனத்திற்கு 22ஆம் திகதியே உறுதி செய்யப்படாத தகவல்கள் கிடைக்கப்பெற்றது. அதன் அடிப்படையில் போட்டிகள் நடைபெறவிருந்த ரேஸ் கோஸ் மைதான நிர்வாகம் இப்போட்டிகள் பற்றி அறிந்திருக்கவில்லை என்ற தகவல் கிடைக்கப்பெற்றது.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர்,
“நாங்கள் மைதானத்தை குறித்த திகதியில் பதிவு செய்து அதற்கு ஏற்ப போட்டிகளை ஒழுங்கு செய்தோம். எனினும் மைதானத்தைப் பதிவு செய்யும் போது இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட தொடர்பாடல் தவறுகளால் குறித்த மைதானம் குறித்த திகதியில் வேறொரு நிகழ்ச்சிக்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்பது மைதானத்திற்குப் பொறுப்பான நகர அபிவிருத்தி திணைக்களம் மூலம் எமக்குத் தெரியவந்தது”
சென்ற வாரம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ரேஸ் கோஸ் மைதானத்தில் முதல் இரு வார சூப்பர் 8 போட்டிகள் நடைபெறும் என இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் எவ்வாறு போட்டிகள் ஒழுங்கு செய்யப்படவுள்ளது என வினவப்பட்ட பொழுது,
“செப்டெம்பர் 3ஆம் திகதி சூப்பர் 8 போட்டிகள் ஆரம்பமாகும். எனினும் இலங்கை விளையாட்டு விழாவும் நடைபெறவுள்ளதாலும், இலங்கை கால்பந்தாட்ட அணி கம்போடியா நோக்கி பயணிக்க உள்ளதாலும் எமக்கு போட்டிகளை அதற்கு முன் முடிக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.”
மேலும் கருது தெரிவித்த ஜஸ்வர் உமர்
“எமக்கு இரண்டு வழிகள் உண்டு, முதலாவது போட்டிகளுக்கிடையிலான இடைவேளையை குறைப்பது. இது சாத்தியமற்றது ஏனெனில் நாம் வீரர்களையும் கவனத்தில்கொள்ள வேண்டும். இரண்டாவது 4 வாரங்கள் சூப்பர் 8 சுற்று விளையாடப்பட்டு, கம்போடியா செல்வதற்கு 2 வாரங்கள் ஓய்வு வழங்கப்பட்டு மீண்டும் இரண்டு வாரங்களின் பின் சூப்பர் 8 சுற்றை ஆரம்பிப்பதாகும். இது தொடர்பான இறுதி முடிவு வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும்.”
இது கழகங்களுக்கிடையில் மேலும் இடையூறை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சென்ற வாரம் வெளியிடப்பட்ட போட்டித் தகவல்கள் கழகங்களை பாதித்த நிலையில் இவ் அவசர மாற்றம் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.