ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைமையகம் கொழும்பில் திறந்து வைப்பு

286
ACC

ஆசியாவின் கிரிக்கட் கவுன்சிலின் தலைமைக் காரியாலயம் கொழும்பில் நேற்று  மாலை திறந்து வைக்கப்பட்டது.

முன்னதாக மலேசியாவில் அமைந்திருந்த ஆசிய கிரிக்கட் கவுன்சிலின் தலைமையகம் தற்போது இலங்கை கிரிக்கட் சபை அமையப்பெற்றுள்ள இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. புதிய தலைமையகக் கட்டிடம் இலங்கை கிரிக்கட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இந்தியா பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளின் கிரிக்கட் சபை தலைவர்களும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் பொலிஸ் மாஅதிபர் ஆகியோரும் கலந்துகொண்டனர். ஆசிய கிரிக்கட் கவுன்சிலில் 25 நாடுகள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆசிய கிரிக்கட் கவுன்சிலின் தலைமையகம் இலங்கையில் திறந்து வைக்கப்பட்டுள்ளமை மிகவும் முக்கியமான விடயம் ஒன்றாகும்.

இலங்கையில் தலைமையகத்தைத் திறப்பதற்கு எமது ஆதரவு வழங்கிய ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஆசிய நாடுகள் ஒன்று சேர்ந்து முன்னேற்றகரமான பாதையில் செல்ல வேண்டும். இதற்காக அனைவரும் தமது முழு ஒத்தாசைகளை வழங்குவார்கள் என நம்புகிறேன். தற்போது ஆசிய நாடுகள் களத்தில் சிறப்பாக பிரகாசித்து வருகின்றது.

அண்மையில் நடந்து முடிந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி அபாரமாக வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

இதே போன்று பாகிஸ்தான் இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இக்காலமானது ஆசிய நாடுகளுக்கான காலமாகும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஆசிய நாட்டவர்கள் என்ற பலத்துடன் எமது திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

ஆதாரம் – வீரகேசரி