ரியோ ஒலிம்பிக் 2016 – ஆகஸ்ட் 19

319

அதிவேக கோல் அடித்து நெய்மார் சாதனை

ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான கால்பந்து அரை இறுதியில் பிரேசில்-ஹோண்டுராஸ் அணிகள் நேற்று மோதின. ஆட்டம் தொடங்கிய 15-வது நிமிடத்திலேயே பிரேசில் தலைவர் நெய்மார் கோல் அடித்து அமர்க்களப்படுத்தினார். ஒலிம்பிக் கால்பந்து வரலாற்றில் அதிவேகமாக அடிக்கப்பட்ட கோல் இது தான். முதல் பாதியில் பிரேசில் 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

பெண்களுக்கான கால்பந்து அரை இறுதி ஆட்டங்களில் சுவீடன் பிரேசிலையும், ஜெர்மனி கனடாவையும் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

12 ஆண்டுகால உழைப்புக்கு கிடைத்த வெற்றி

ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் பெற்றுக் கொடுத்தார். பெண்களுக்கான 58 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் அரியானவைச் சேர்ந்த அவர் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது குறித்து சாக்சி மாலிக் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் எனது கனவு நனவானது. இந்த சாதனையை நினைத்து பெருமைப்படுகிறேன். எனது வாழ்க்கையில் இது மறக்க முடியாத தருணமாகும்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனை நானாக இருப்பேன் என்பதை நினைத்துப் பார்க்கவில்லை. மற்ற மல்யுத்த வீரர்களும் பதக்கங்களைப் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.12 ஆண்டுகால கடின உழைப்புக்குக் கிடைத்த முடிவு தான் இந்த வெண்கலப் பதக்கம். இந்தியாவுக்கு பெருமை சேர்த்ததை நினைத்து நான் மிகவும் சந்தோ‌ஷம் அடைகிறேன். என் மீது அன்பையும், பாராட்டையும் வெளிப்படுத்திய நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒலிம்பிக் வெண்கலப் பதக்கத்தை எனது குடும்பத்தினர் மற்றும் எனது பயிற்சியாளர்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சாக்சி மாலிக் ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்றதால் அவரது பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தனது மகள் நாட்டுக்கு பெருமை சேர்த்து உள்ளதாக அவரது தாயார் சகேஷ் கூறியுள்ளார்.

200 மீட்டர் இறுதிப்போட்டிக்கு அமெரிக்க வீரர் கேட்லின் தகுதி இழந்தார்

ரியோ ஒலிம்பிக்கில் நேற்று காலை ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் அரை இறுதி போட்டிக்கள் நடைபெற்றன. 3-வதாக நடந்த அரை இறுதியில் அமெரிக்க வீரர் ஜஸ்டின் கேட்லின் ஓடினார். அவர் பந்தய தூரத்தை 20.13 வினாடியில் கடந்து 3-வது இடத்தை பிடித்தார். இதனால் அவர் இறுதிபோட்டி வாய்ப்பை இழந்தார்.

மற்றொரு அரையிறுதியில் அதிவேக வீரரான உசேன் போல்ட் பந்தய தூரத்தை 19.78 வினாடியில் கடந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

கேட்லின், உசேன் போல்டுக்கு சவால் கொடுக்க கூடிய வீரர் ஆவார். 100 மீட்டர் ஓட்டத்தில் அவர் வெள்ளிப் பதக்கம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கால்பந்தாட்ட இறுதி ஆட்டத்தில் பிரேசில்-ஜெர்மனி

ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான கால்பந்து அரைஇறுதியில் போட்டியை நடத்தும் பிரேசில் 6-0 என்ற கோல் கணக்கில் ஹோண்டுராசை துவம்சம் செய்தது. பிரேசில் தலைவர் நெய்மார் 2 கோல்கள் அடித்தார். இதில் ஆட்டம் தொடங்கிய 15-வது நிமிடத்திலேயே அடித்த அதிவேக ஒலிம்பிக் கோலும் அடங்கும்.

மற்றொரு அரைஇறுதியில் ஜெர்மனி 2-0 என்ற கோல் கணக்கில் நைஜீரியாவை வீழ்த்தியது. முதல் முறையாக ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் முனைப்பில் உள்ள 5 முறை உலக சாம்பியனான பிரேசில் அணி இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியுடன் நாளை மோதுகிறது.

200 மீட்டர் ஓட்டத்திலும் தாம்சன் தங்கப்பதக்கம்

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்கா வீராங்கனை எலைன் தாம்சன் 21.78 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். 100 மீட்டர் ஓட்டத்திலும் தங்கப்பதக்கம் வென்று இருந்த எலைன் தாம்சன் ஜமைக்காவின் புதிய தங்க மங்கையாக உருவெடுத்துள்ளார்.

இதில் நெதர்லாந்து வீராங்கனை டாப்னே சிப்பெர்ஸ் (21.88 வினாடி) வெள்ளிப்பதக்கமும், அமெரிக்க வீராங்கனை டோரி போவி (22.15 வினாடி) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.