இலங்கைக்கு கண்டியில் காலை உணவு, காலியில் பகலுணவு, கொழும்பில் இரவு உணவு

404
Sri Lanka vs Australia

இலங்கை – அவுஸ்திரேலியா கிரிக்கட் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது. சந்திமால் (132), தனஞ்செயா டி சில்வா (129) ஆகியோரின் சதத்தால் இலங்கை அணி முதல் இனிங்ஸில் 355 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் முதல் இனிங்ஸை ஆடிய அவுஸ்திரேலிய அணி, அந்த அணியின் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் (119) மற்றும் ஷேன் மார்ஷ் (130) ஆகியோரின் சதத்தால் முதல் இனிங்சில் 379 ஓட்டங்கள் குவித்து பதிலடி கொடுத்தது.

இதையடுத்து 24 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இனிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணி, குசால் சில்வா (115), தனஞ்செயா டி சில்வா (65) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 347 ஓட்டங்கள் குவித்தது. இதனால், அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 324 ஓட்டங்களாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

கடும் நெருக்கடியுடன் இந்த இலக்கை எதிர்கொண்ட அவுஸ்திரேலிய அணிக்கு துவக்க ஜோடியான மார்ஷ்-வார்னர் மட்டுமே நம்பிக்கை அளித்தனர். மார்ஸ் 23 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தாலும், தொடர்ந்து நம்பிக்கை அளித்த வார்னர் 68 ஓட்டங்கள் சேர்த்தார். அதன்பின்னர் வந்த வீரர்கள் ஹேரத்தின் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கட்டுகளைப் பறிகொடுத்தனர். இதனால், அவுஸ்திரேலிய அணி 160 ஓட்டங்களுக்கு சுருண்டது. இலங்கை அணி 163 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரங்கன ஹேரத் 7 விக்கட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 3-0 என டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. கடைசி போட்டியின் ஆட்ட நாயகன், தொடர் நாயகன் என இரண்டு விருதுகளை ரங்கன ஹேரத் தட்டிச்சென்றார்.

இவ்விரு அணிகள் மோதும் 5 போட்டிளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி எதிர்வாரும் 21ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற உள்ளது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை அணி – 355/10

தனஞ்சய டி சில்வா 129, தினேஷ் சந்திமால் 132, ரங்கன ஹேரத் 33,

மிச்சல் ஸ்டார்க் 63/5, நேதன் லியன் 110/3

அவுஸ்திரேலிய அணி – 379/10

ஷோன் மார்ஷ் 130, ஸ்டீவ் ஸ்மித் 119, மிச்சல் மார்ஷ் 53

ரங்கன ஹேரத் 81/6, டில்ருவான் பெரேரா 129/2

இலங்கை அணி – 347/8d

கவ்ஷால் சில்வா 115, சந்திமால் 43, மெதிவ்ஸ் 26, தனஞ்சய டி சில்வா 65*

நேதன் லியன் 123/4, மிச்சல் ஸ்டார்க் 72/2

அவுஸ்ரேலிய அணி – 160/10

டேவிட் வோர்னர் 68, ஷோன் மார்ஷ் 23,  மிச்சல் ஸ்டார்க் 23

ரங்கன ஹேரத் 64/7, டில்ருவான் பெரேரா 71/2

இலங்கை அணிக்கு 163 ஓட்டங்களால் வெற்றி