இந்தியா – மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி கிராஸ் இஸ்லெட் மைதானத்தில் நடைபெற்றதுவருகிறது. முதல் இனிங்ஸில் இந்திய அணி 353 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. அஸ்வின், சாகா இருவரும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர்.
பின்னர் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 2-வது நாள் முடிவில் 47 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கட் இழப்பிற்கு 107 ஓட்டங்கள் எடுத்திருந்தது. கே.சி.பிராத்வெயிட்(53), பிராவோ(18) ஓட்டங்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.
3-வது நாள் ஆட்டம் மழை குறுக்கீட்டால் ஒரு பந்து கூட வீசப்படாமல் முழுவதும் கைவிடப்பட்டது. இதனையடுத்து 4-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. பிராத்வெயிட் 64 ஓட்டங்களுக்கும், பிராவோ 29 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து சாமுவேல்சும், பிளாக்வுட்டும் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினர். இந்த ஜோடி 4-வது விக்கட்டுக்கு 67 ஓட்டங்கள் எடுத்தது. பிளாக்வுட் 20 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அப்போது மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கட்டுகள் இழப்பிற்கு 202 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அடுத்த 23 ஓட்டங்கள் எடுப்பதற்குள் மீதமுள்ள 6 விக்கட்டுகளையும் அந்த அணி இழந்தது.
புவனேஸ்குமார் அபாரமாக பந்து வீசி 5 விக்கட்டுகளை சாய்த்தார். 225 ஓட்டங்களுக்கு மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இனிங்ஸில் ஆட்டமிழந்தது. பின்னர் இந்திய அணி தனது இரண்டாவது இனிங்ஸை விளையாடியது.
தொடக்கம் முதலே இந்திய வீரர்கள் அதிரடியாக விளையாடினர். கே.எல்.ராகுல் 24 பந்துகளில் 28 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது, 7.3 ஓவர்களில் இந்திய அணி 49 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இருப்பினும் கோலி(4), தவான்(26) என அடுத்தடுத்து விக்கட்டுகள் வீழ்ந்தது.
பின்னர் ரகானேவும், ரோகித் சர்மாவும் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். இருப்பினும் இடையிடையே ரோகித் சர்மா மூன்று சிக்ஸர்களை விளாசினார். சிறப்பாக விளையாடிய ரகானே அரைச்சதம் அடித்தார்.
4-வது நாள் முடிவில் இந்திய அணி 39 ஓவர்களில் 3 விக்கட்டுகள் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் எடுத்தது. ரகானே 51(93), ரோகித் சர்மா 41(57) களத்தில் இருந்தனர். இந்திய அணி மொத்தமாக 285 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.
இன்று கடைசி நாள் ஆட்டம் என்பதால், இந்திய அணி சிறிது நேரம் விளையாடி பின்னர் 350 ஓட்டங்களை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இலக்காக நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி சமநிலை ஆவதற்கோ அல்லது இந்திய அணி வெற்றி பெறுவதற்கோ வாய்ப்புகள் உள்ளது.
போட்டியின் சுருக்கம்
இந்தியா – 353/10
ரவி அஷ்வின் 118, சஹா 104, லோகேஷ் ராஹுல் 50, அஜின்கியா ரஹானே 35
அல்சாரி ஜோசப் 69/3, கமின்ஸ் 54/3, ரோஸ்டன் சேஸ் 70/2
மேற்கிந்திய தீவுகள் – 225/10
கே.சி.பிராத்வெயிட் 64, மார்லன் சாமுவேல்ஸ் 48, டெரன் பிராவோ 29
புவனேஸ் குமார் 33/5, ரவி அஷ்வின் 52/2
இந்தியா – 157/3
அஜின்கியா ரஹானே 51*, ரோஹித் ஷர்மா 41*, லோகேஷ் ராஹுல் 28
கமின்ஸ் 22/2
இந்திய அணி 282 ஓட்டங்கள் முன்னிலையில்