இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் பாகிஸ்தான் கிரிக்கட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் டெஸ்டில் பாகிஸ்தானும், 2-வது, 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன.
இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்றுத் தொடங்கியது. நாணய சுழற்சயில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது. ஆரம்பம் முதல் தடுமாற்றத்துக்கு உள்ளாகிய இங்கிலாந்து அணி 110 ஓட்டங்களுக்குள் தலைவர் அலஸ்டயர் குக் (35 ஓட்டங்கள்), ஜோ ரூட் (26 ஓட்டங்கள்) உட்பட 5 முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் பெவிலியன் திரும்பினர்.
இதன் பின்னர் விக்கட் காப்பாளர் பேர்ஸ்டோ, மொயீன் அலி ஆகியோர் இங்கிலாந்து அணியை நெருக்கடியில் இருந்து விடுவித்தனர். பேர்ஸ்டோ 55 ஓட்டங்களோடும் அடுத்து வந்த கிறிஸ் வோக்ஸ் 45 ஓட்டங்களோடும் ஸ்டூவர்ட் பிராட் ஓட்டம் ஏதுமின்றியும், ஸ்டீவன் பின் 8 ஓட்டங்களோடும் வெளியேறினர்.
மறுமுனையில் நிலைத்து நின்று அசத்திய மொயீன் அலி சிக்ஸர் விளாசி தனது 3-வது சதத்தைப் பூர்த்தி செய்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 76.4 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 328 ஓட்டங்களைப் பெற்றது.
அபாரமாக ஆடிய மொயீன் அலி 108 ஓட்டங்களோடு ஆட்டம் இழந்தார். பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு தரப்பில் சோகைல் கான் 5 விக்கட்டுகளும், வஹாப் ரியாஸ் 3 விக்கட்டுகளும், முகமது அமிர் 2 விக்கட்டுகளும் கைப்பற்றினர்.
பின் தமது முதல் இனிங்ஸிற்காக ஆடிய பாகிஸ்தான் அணி 1ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கட் இழப்பிற்கு 3 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.