இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளின் நிறைவில், 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலை வகிக்கின்ற நிலையில், மூன்றாவது போட்டியையும் வென்று, அவுஸ்திரேலிய அணியை 3-0 எனத் தோற்கடித்து டெஸ்ட் தொடரை வெற்றிகொள்ள வேண்டுமென, இலங்கை அணியின் பிரதம தேர்வாளரும் முன்னாள் அணித்தலைவருமான சனத் ஜெயசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கு முன்னைய தொடர்கள் பலவற்றில் தோல்விகளைச் சந்தித்த இலங்கை, எவரும் எதிர்பாராத விதமாக, அவுஸ்திரேலிய அணியைத் தோற்கடித்துள்ளது.
இந்நிலையில் கருத்துத் தெரிவித்த சனத், “2-0 என்ற கணக்கில் நாம் முன்னிலை வகிப்போமென எவரும் நினைத்திருக்கவில்லை. அது, அதற்கு மாறாகவே (அவுஸ்திரேலியா 2-0 என முன்னிலை வகிக்குமென) இருக்குமென அனைவரும் எண்ணினர்.
ஆனால், ஒரு அணியாக நாங்கள், அதை மாற்றியமைத்துள்ளோம். இத்தொடரை 3-0 என நாம் வெல்ல முடியுமாயின், அது வரலாறாகும்.
மாபெரும் சந்தர்ப்பமொன்று எங்களுக்குக் கிடைத்துள்ளதென்பதை, எங்கள் வீரர்கள் உணர்வார்களென நான் நம்புகிறேன்” என அவர் தெரிவித்தார்.
இதற்கு முதல் அவுஸ்திரேலியாவை 17 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரே ஒரு தடவை மாத்திரம் வென்ற இலங்கை அணி, சில நாட்கள் இடைவெளியில் இரண்டு வெற்றிகளைப் பெற்ற நிலையில், இலங்கையின் எதிர்காலம் தொடர்பாக, நம்பிக்கையை வெளியிட்டார் சனத்.
“மாறுபடும் காலத்தில் நாங்கள் இருக்கிறோம். அனுபவம் குறைந்த அல்லது அனுபவமற்ற வீரர்களுடனேயே நாம் விளையாடுகிறோம்.
அவர்கள் மீது ஏராளமான நம்பிக்கை காணப்படுகிறது, அவர்கள் விளையாடிய விதம் தொடர்பாக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளோம்” என அவர் தெரிவித்தார்.