ரியோ ஒலிம்பிக் 2016 – ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி

317
Rio Aug 10

21ஆவது தங்கப்பதக்கம் வென்றார் பெல்ப்ஸ்

ரியோ ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் அமெரிக்க வீரர் மைக்கல் பெல்ப்ஸ் மேலும் இரு தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

200 மீ. பட்டர்பிளை மற்றும் 4*200மீ ப்ரீஸ்டைல் நீச்சல் போட்டிகளில் அமெரிக்க குழு அடுத்தடுத்து தங்கம் வென்றது. இதனையடுத்து நீச்சல் வீரர் பெல்ப்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் வென்ற தங்கப் பதக்க எண்ணிக்கை 21 ஆனது.

பெல்ப்ஸ் 200 மீ. பட்டர்பிளை பிரிவில் ஜப்பானின் மசாதோ சகாயை வீழ்த்தினார். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து நடந்த 4*200 மீட்டர் ரிலே பிரிவில் அமெரிக்க குழுவுக்கு நேர்த்தியாகத் தலைமை தாங்கி வெற்றி பெறச் செய்தார்.

முன்னதாக நேற்று 20ஆவது பதக்கத்தை வென்றதன் மூலம் மைக்கல் பெல்ப்ஸ் சாட் லே கிளாஸின் சாதனையை முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2012 லண்டன் ஒலிம்பிக்கிற்குப் பிறகு ஓய்வு பெறுவதாக அறிவித்த பெல்ப்ஸ் 2014ஆம் ஆண்டு ஓய்வு முடிவை திரும்பப் பெற்று மீண்டும் சர்வதேச நீச்சல் போட்டியில் களமிறங்கினார்.

ஆனால் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்ட பெல்ப்ஸுக்கு 6 மாதம் நீச்சல் போட்டியில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது. தடை காலத்தை நிறைவு செய்த பிறகு மீண்டும் உச்சக் கட்ட பார்முக்கு திரும்பினார். இந்நிலையில் ரியோ ஒலிம்பிக்கில் தற்போது தங்க வேட்டையில் ஈடுபட்டுள்ளார்.

நியூசிலாந்தை வீழ்த்தியது ஜப்பான்

ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான அணிக்கு 7 பேர் கொண்ட றக்பி போட்டியில் பலம் பொருந்திய நியூசிலாந்து அணியை  ஜப்பான் எதிர்கொண்டது.  இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில்  பலம் பொருந்திய நியூசிலாந்து அணியை  ஜப்பான்  அணி 12-14 என்ற ரீதியில்  நியூசிலாந்து அணியை அதிர்ச்சியில் உறைய வைத்தது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து  அணியின் நட்சத்திர வீரர் சொனி பில் வில்லியம்ஸ் உபாதை அடைந்து  போட்டியின் பாதியிலேயே போட்டியை விட்டு வெளியேறி  இருந்தமை குறிப்பிடத்தக்கது.

செரீனா வில்லியம்ஸ் வெளியேற்றம்

டென்னிஸ் உலகில் புகழ் பெற்ற அமெரிக்கவைச் சேர்ந்த செரீனா வில்லியம்ஸ் 2016ஆம் ஆண்டுக்காக ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுளளார். பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின்  3ஆவது சுற்றில்  செரீனா வில்லியம்ஸ் உக்ரைன் நட்டு வீராங்கனை எலினா ஸ்விடோலினாவிடம் தோல்வி அடைந்ததை அடுத்தே இவர் ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுளளார்.

அத்தோடு ரியோ ஒலிம்பிக் போட்டியின் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இந்த முறை தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோகோவிச் முதல் சுற்றிலேயே நடையைக் கட்டி யது செர்பிய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

இந்நிலையில் ஆடவர் இரட்டையர் இரண்டாவது சுற்றில் ஜோகோவிச்ஜிமோன்ஜிக் ஜோடி 4-6, 4-6 என்ற நேர் செட்களில் பிரேசிலைச் சேர்ந்த மார்செலோ மெலோபுருனோ சோர்ஸ் ஜோடியிடம் தோல்வியடைந்தது. இதனால் ரியோ ஒலிம்பிக் போட்டியிலிருந்து ஜோகோ விச் பரிதாபமாக வெளியே றினார்.