இந்தியாவை மீட்ட அஷ்வின் மற்றும் சஹா

193
Ravichandran Ashwin
(AP Photo/Ricardo Mazalan)

இந்திய – மேற்கிந்திய தீவுகள்  அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் செயின்ட் லூசியாவில் உள்ள கிராஸ் தீவின் டேரன் சமி தேசிய மைதானத்தில் நேற்றுத் தொடங்கியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டர் முதலில் பந்து வீசுவதற்குத் தீர்மானம் செய்தார்.

மேற்கிந்திய தீவுகள் அணியில் சுழற்பந்து வீச்சாளர் தேவேந்திர பிஷூ நீக்கப்பட்டு, அறிமுக வீரரான வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப் சேர்க்கப்பட்டு இருந்தார். அதேபோல் தொடக்க வீரர் சந்திரிகா நீக்கப்பட்டு லியன் ஜொன்சன் சேர்க்கப்பட்டு இருந்தார்.

இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது. உமேஷ் யாதவ், அமித் மிஸ்ரா மற்றும் சேடேஸ்வர்  புஜாரா ஆகியோர் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், ரோஹித்  சர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டு இருந்தனர். ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் முரளி விஜய் குறி்த்து இந்திய அணி பரிசீலிக்கவில்லை.

இந்த அணியின் தொடக்க வீரர்களாக லோகேஷ் ராஹுலும், ஸீகர் தவானும் களம் இறங்கினார்கள். லோகேஷ் ராஹுல் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தவான் 1 ஓட்டத்தை  எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்த வந்த இந்திய அணியின் தலைவர் விராத் கொஹ்லி 3 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இதனால் இந்தியா 19 ஓட்டங்களை  எடுப்பதற்குள் 2 விக்கட்டுகளை இழந்தது காணப்பட்டது.

அடுத்து லோகேஷ் ராஹு உடன் அஜின்கியா ரஹானே ஜோடி சேர்ந்தார். லோகேஷ் ராஹுல்  சிறப்பாக விளையாடி அரைச்சதம் அடித்தார். அத்துடன் 50 ஓட்டங்களோடு வெளியேறினார்.

4ஆவது விக்கெட்டுக்கு அஜின்கியா ரஹானேவுடன் ரோஹித் சர்மா ஜோடி சேர்ந்தார். மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 23 ஓவர்கள் முடிவில் 3 விக்கட்டுகள் இழப்பிற்கு 87 ஓட்டங்களை எடுத்து இருந்தது.   மதிய உணவு இடைவேளை  முடிந்து வந்த உடனே ரோஹித் சர்மா 9 ஓட்டங்களோடு ஆடுகளத்தை விட்டு ஆட்டம் இழந்து வெளியேறினார்.

5ஆவது விக்கட்டுக்கு அஜின்கியா ரஹானேவுடன்  ரவி அஸ்வின் ஜோடி சேர்ந்தார். சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடிய அஜின்கியா ரஹானே 35 ஓட்டங்களோடு ஆட்டம் இழந்தார். இந்திய அணி 5 விக்கட்டுகள் இழப்பிற்கு 126 ஓட்டங்களை எடுத்து தடுமாறியது. இதனால் 175 ஓட்டங்களை இந்திய அணி கடக்குமா என்றே தோன்றியது.

அப்போது ரவி அஸ்வினும், சாஹாவும் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒன்று, இரண்டு ஓட்டங்களாக சேர்த்தனர். 64.3 ஓவர்களில் இந்திய அணி 150 ஓட்டங்களை  எட்டியது. சிறப்பாக விளையாடி வந்த அஸ்வின் 157 பந்துகளில் அரைச்சதம் அடித்து அசத்தினார்.

83.3 ஓவர்களில் 200 ஓட்டங்களை  எட்டிய இந்திய அணி ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களில் 5 விக்கட்டுகள் இழப்பிற்கு 234ஓட்டங்களை எடுத்தது. ரவி அஸ்வின் 75 ஓட்டங்களோடும், சாஹா 46 ஓட்டங்களோடும் களத்தில் இருந்தனர்.

மேற்கிந்திய தீவுகள் தரப்பில் ஜோசப் மற்றும் சாஸ் இருவரும் தலா இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தி இருந்தார்கள்.

போட்டியின் சுருக்கம்

இந்தியா – 234/5

ரவி அஷ்வின் 75*, சஹா 46*, லோகேஷ் ராஹுல் 50, அஜின்கியா ரஹானே 35

அல்சாரி ஜோசப் 38/2, ரோஸ்டன் சேஸ் 38/2