ராஹுல் சதம், இந்திய அணி 162 ஓட்டங்கள் முன்னிலையில்

271
CRICKET-INDIA-WINDIES
(AFP/Getty Images)

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் 30ஆம் திகதி தொடங்கியது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் இருந்தது. காயம் அடைந்த முரளி விஜய்க்குப் பதிலாக லோகேஷ் ராஹுல் அணியில்  இடம் பெற்றார்.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது. இதன் படி துடுப்பாடிய  மேற்கிந்திய தீவுகள் அணி 52.3 ஓவர்களில் 196 ஓட்டங்களுக்கு  சுருண்டது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக பிளாக்வூட்  அதிகபட்சமாக 62  ஓட்டங்களையும், செம்வல்ஸ் 37 ஓட்டங்களையும், கமின்ஸ் 24 ஓட்டங்களை ஆட்டம் இழக்காமழும் பெற்றனர். இந்திய அணி சார்பில் அஷ்வின் அதிகபட்சமாக 5 விக்கட்டுகளைக் கைப்பற்றினார். இஷாந்த், ஷமி தலா 2 விக்கட்டுகளைக் கைப்பற்றினர்.

பின்னர் இந்திய அணி முதல் இனிங்ஸை விளையாடியது. ராகுலும், தவானும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்திய அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. தவான் 27 ஓட்டங்களோடு  ஆட்டம் இழந்தார். மறுமுனையில் இருந்த ராகுல் அபாரமாக விளையாடி அரைச் சதம் அடித்தார் 58 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 50 ஓட்டங்களை எடுத்தார்.  இதன் மூலம் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 126 ஓட்டங்களை எடுத்து இருந்தது.

பின் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியதும் ராகுலும், புஜாராவும் நிதானமாக விளையாடி ஓட்டங்களைக் குவித்தார்கள். இந்த ஜோடியை மேற்கிந்திய தீவுகள் அணி பந்து வீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. சிறப்பாக ஆடிய ராகுல் சிக்ஸ் அடித்து தனது மூன்றாவது சதத்தை நிறைவு செய்தார். தொடர்ந்து பிரகாசித்த இவர் 158 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். இவரை தவிர புஜாரா 46 ஓட்டங்களையும், கோஹ்லி 44 ஓட்டங்களையும் பெற்றனர். இறுதியில் 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கட் இழப்பிற்கு 358 ஓட்டங்களைப் பெற்று இருந்தது. தற்போது வரை இந்திய அணி 5 விக்கட்டுகள் கையிருப்பில் இருக்க 162 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

மேற்கிந்திய அணியின் பந்து வீச்சில் செஸ் 91 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

மேற்கிந்திய தீவுகள் – 196/10

ப்ளாக்வூட் 62, சாமுவேல்ஸ 37 கமின்ஸ் 24*,

ரவி அஷ்வின் 52/5, மொஹமத் ஷமி 23/2, இஷாந்த் சர்மா 53/2

இந்தியா – 358/5

லோகேஷ் ராஹுல் 158,  புஜாரா 46, கோஹ்லி 44, ரஹானே 42*

செஸ் 91/2

இந்திய அணி 5 விக்கட்டுகள் கையிருப்பில் 162 ஓட்டங்கள் முன்னிலையில்