டயலொக் சாம்பியன்ஸ் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் இவ்வார இறுதியில் நடைபெற்ற போட்டிகளில் கொழும்பு கழகம், விமானப்படை, நீர்கொழும்பு இளைஞர் அணி, சூப்பர் சான், கடற்படை, இராணுவம் மற்றும் ரினோன் அணிகள் வெற்றிபெற்றன.

மாத்தறை அணி மற்றும் கொழும்பு அணிகளுக்கிடையிலான போட்டி

23ஆம் திகதி மாத்தறை கால்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த கொழும்பு கழகமானது 23ஆவது நிமிடத்தில் அபிஸ் ஒலயாமி மூலமாக முதல் கோலை  அடித்தது. அஹமட் ஷஸ்னி 33ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலையும், தனிஷ்க மதுஷங்க 42 ஆவது நிமிடத்தில் 3ஆவது கோலையும் அடிக்க முதற் பாதி 3-0 என்று நிறைவடைந்தது. இரண்டாவது பாதியிலும் சிறப்பாக விளையாடத் தவறியதால் அபிஸ் ஒலயாமி 48ஆவது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலை அடித்தார். இறுதியில் போட்டியை 4-0 என்ற கோல் கணக்கில் கொழும்பு கழகம் இலகுவாக வென்றது.


இலங்கை விமானப்படை மற்றும் நியூ யங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி

23ஆம் திகதி ஏகல விமானப்படை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடிய நியூ யங்ஸ் அணி 18ஆவது நிமிடத்தில் சோகா மூலமாக தமது முதலாவது கோலைப் பதிவு செய்தது. எனினும் பதிலுக்கு சிறப்பாக விளையாடிய விமானப்படை விட்டுக்கொடுக்காது திமுத்து லக்மால் மூலமாக 52ஆவது நிமிடத்தில் கோல் அடித்துப் போட்டியை  சமநிலை செய்தது. இரு அணிகளும் 1-1 என்ற நிலையில் விறுவிறுப்பாக சென்றுகொண்டு இருக்கையில் தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திய நிபுண பண்டார 84ஆவது நிமிடத்தில் விமானப்படை அணிக்காக கோல் அடித்து விமானப்படை அணியை வெற்றியின் பக்கம் அழைத்து சென்றார். 87ஆவது நிமிடத்தில் நியூ யங்ஸ் அணியின் வீரர் ஜோர்ஜ் சிவப்பு அட்டை காட்டப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இறுதியில் விமானப்படை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது .


கிரிஸ்டல் பெலஸ் மற்றும் நீர்கொழும்பு இளைஞர் அணிகளுக்கிடையிலான போட்டி

கடந்த 24ஆம் திகதி நாவலப்பிட்டிய ஜயதிலக்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நீர்கொழும்பு இளைஞர் அணி 4-0 என்று அபார வெற்றியைப் பெற்றது. சிறப்பாக விளையாடிய நீர்கொழும்பு இளைஞர் அணியானது ஹரிந்த்ர பீரிஸ் மூலமாக 35ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. தொடர்ந்து அப்துல் முமுனி 44ஆவது நிமிடத்தில் கோல் அடித்து முதற் பாதி முடிவின் பொழுது நீர்கொழும்பு இளைஞர் அணியை  2-0 என முன்னிலை அடைய வைத்தார். இரண்டாவது பாதியிலும் தனது திறமையை வெளிக்காட்டிய ஹரிந்த்ர பீரிஸ் மேலும் ஒரு கோல் அடித்து தமது அணியை வலுப்படுத்தினார். மேலதிக நேரமான 90+2ஆவது நிமிடத்து மொஹமட் நுஸ்லான் நீர்கொழும்பு இளைஞர் அணிக்காக கோல் அடித்து முன்னிலையை 4-0 என்று அதிகப்படுத்தினார்.


ஜாவா லேன் மற்றும் சூப்பர் சான் அணிகளுக்கிடையிலான போட்டி  

சிட்டி கால்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் சூப்பர் சன் அணி ஜாவா லேன் அணியை 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சிறப்பாக விளையாடிய சூப்பர் சன் அணி முதல் பாதியில் 21 மற்றும் 30ஆவது நிமிடங்களில் முறையே ஷப்ராஸ் கைஸ் மற்றும் ஜனித் பியுமால் மூலமாக கோல் அடித்து முன்னிலைபெற்றது. இரண்டாவது பாதியில் தமக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை தவறவிடாத மொஹமட் அப்துல்லா ஜாவா லேன் சார்பாக கோல் அடித்து தமது அணிக்கு நம்பிக்கை கொடுத்தார். எனினும் தொடர்ந்து ஜாவா லேன்  அணியினால் கோல் எதுவும் அடிக்க முடியாததால் சூப்பர் சான் அணி 2-1 என்று வெற்றியைப்பெற்றது.


பொலிஸ்  மற்றும் கடற்படை அணிகளுக்கிடையிலான போட்டி

கொழும்பு பொலிஸ் மைதானத்தில் 23ஆம் திகதி நடைபெற்ற இப்போட்டியில் பொலிஸ் அணியை 2-0 என்று இலகுவாக கடற்படை அணி வெற்றிகொண்டது. ஆரம்பத்தில் வேகமாக செயற்பட்ட கடற்படை அணியானது 20 மற்றும் 29ஆவது நிமிடங்களில் முறையே தம்மிக்க ரத்நாயக்க மற்றும் நிர்மல் விஜேதுங்க மூலமாக தனது இரு கோல்களையும் அடித்தது. தொடர்ந்து இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சி செய்தும் அடிக்க முடியாத நிலையில் 2-0 என்று கடற்படை அணி வெற்றிபெற்றது.


அப் கன்ட்ரி லயன்ஸ் மற்றும் சொலிட் அணிகளுக்கிடையிலான போட்டி.

23ஆம் திகதி நாவலப்பிட்டி ஜயதிலக்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிந்தது. போட்டி ஆரம்பித்து 7ஆவது நிமித்தில் தக்ஷில தனோஜ் சொலிட் அணிக்காக முதலாவது கோல் அடித்து சொலிட் அணியை முன்னிலை அடைய செய்தார். விட்டுக்கொடுக்காமல் விளையாடிய அப் கன்ட்ரி லயன்ஸ் அணியும் 42ஆவது நிமிடத்தில் ஒசார் மூலமாக கோல் அடித்து போட்டியை சமநிலை செய்தார். இரு அணிகளாலும் மேலதிக கோல்களை அடிக்க முடியாததால் போட்டி சமநிலையில் முடிந்தது.


இலங்கை இராணுவம் மற்றும் சிவில் பாதுகாப்புப் படைகளுக்கிடையிலான போட்டி

தொடர்ந்து  தோல்விகளைத் தழுவி வந்த சிவில் பாதுகாப்பு அணியானது இவ்வாரமும் இராணுவ அணியுடன் மிக மோசமாக தோல்வியைத் தழுவியது. சிறப்பாக விளையாடிய இராணுவ அணியானது 6-0 என்று பிரமாண்டமாக வெற்றிபெற்றது. இராணுவ அணிக்காக திவங்க சந்திரசேகர 42,45,76ஆவது நிமிடங்களில் ஹாட்ரிக்  கோல்கள்  அடித்து அசத்தினார். புன்சர திருன 13 மற்றும் 90+2 ஆவது நிமிடங்களில் 2 கோல்கள் அடித்தார். மேலும் சஜித் குமார 32ஆவது நிமிடத்தில் இராணுவ அணிக்காக கோல் அடித்தார்.

திகாரிய இளைஞர் அணி மற்றும் ரினொன் கழகத்திற்கு இடையிலான போட்டி


இவ்வாரத்தின் மாபெரும் வெற்றியை ரினொன் கழகம் திகாரிய இளைஞர் அணிக்கு எதிராக பெற்றுக்கொண்டது. அபாரமாக விளையாடிய ரினொன் கழகம் 9-1 என்ற மாபெரும் கோல்கள் வித்தியாசத்தில் திகாரிய இளைஞர் அணியை தோல்வியடையச் செய்தது. களனி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ரினொன் கழகம் தமது திறமையை முன்னைய போட்டிகளைப் போன்றே வெளிக்காட்டி தமது வரலாற்றில் ஒரு மறக்க முடியாத போட்டியை விளையாடியது.

ரினொன் அணி சார்பாக மொஹமட் ரிப்நாஸ் 7 மற்றும் 76ஆவது நிமிடத்திலும், அபாம் அக்ரம் 11 மற்றும் 90+1ஆவது நிமிடத்திலும், ஜாப் மைக்கல் 15,19,31ஆவது நிமிடங்களிலும் ,மொஹமட் பஸால் 35 மற்றும் 37ஆவது நிமிடங்களிலும் கோல் அடித்து அசத்தினார். திகாரிய அணிக்காக ஆறுதல் கோலினை மதுவாபுருச்சி 68ஆவது நிமிடத்தில் பெற்றுக்கொடுத்தார்.