இந்திய, மேற்கிந்திய தீவு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில்,இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் மற்றும் துடுப்பாட்டக்காரர்களால் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.
இந்திய, மேற்கிந்தியத்தீவு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி விவி ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 302 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இன்று 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. கோஹ்லியும், அஸ்வினும் நங்கூரம் போன்று நிலைத்து நின்று விளையாடினார்கள்.
விராட் கோலி 150 ஓட்டங்களைக் கடந்து வீறுநடை போட்டார். அவருடன் இணைந்து அஸ்வின் தனது 7ஆவது அரைச் சதத்தைப் பதிவு செய்தார்.
இன்றைய 2ஆவது நாள் மதிய உணவு இடைவேளையின் கடைசி ஓவரில் விராட் கோஹ்லி இரட்டை சதத்தைத் தொட்டார். இதன்மூலம் தனது முதல் இரட்டை சதத்தைப் பதிவு செய்தார்.
இந்தியாவின் மொத்த ஓட்ட எண்ணிக்கை 400 ஓட்டங்களைத் தாண்டியது. மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 119 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 404 ஓட்டங்கள் குவித்துள்ளது.
விராட் கோஹ்லி 200 ஓட்டங்களுடனும், அஸ்வின் 64 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். இந்த இரட்டை சதம் மூலம் மேற்கிந்தியத்தீவு மண்ணில் இந்திய தலைவர் ஒரு இனிங்ஸில் அதிக ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
இதற்கு முன் ராகுல் டிராவிட் 146 ஓட்டங்கள் எடுத்ததுதான் அதிகபட்ச ஓட்டங்களாக இருந்தது.
விராட் கோஹ்லி இரட்டைச் சதம் அடித்த சில பந்துகளிலேயே போல்டாகி வெளியேறினார்.
இவருக்குச் சிறப்பான இணைப்பாட்டத்தைக் கொடுத்த அஷ்வின் தனது 3ஆவது சதத்தைப் பதிவு செய்தார், அவர் 114 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா 66 பந்துகளில் 53 ஓட்டங்கள் எடுத்து அசத்தினர், அணியின் வேகப்பந்து வீச்சாளர் தன் பங்கிற்கு 19 பந்துகளில் 17 ஓட்டங்கள் எடுத்தார். இதில் இரண்டு சிக்ஸர்கள் அடங்கும்.
இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 566 ஒட்டங்கள் எடுத்திருந்த போது அணியின் தலைவர் விராட் கோஹ்லி ஆட்டத்தை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தார்.
மேற்கிந்திய அணி தரப்பில் பரத்வைட், பிஷோ தலா 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து தனது முதல் இனிங்ஸைத் தொடங்கிய மேற்கிந்திய அணி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
அணியின் தொடக்க ஆட்டக்காரர் சந்திரிக்கா 16 ஓட்டங்கள் எடுத்த போது வேகப்பந்து வீச்சாளர் ஷமியின் ஓவரில், விக்கெட் காப்பாளர் சகாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் மேற்கிந்திய தீவு அணி 1 விக்கெட் இழப்பிற்கு 31 ஓட்டங்கள் எடுத்து, இந்திய அணியை விட 535 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது.
விராட் கோஹ்லியின் சாதனைகள்
தலைவராக விராட் கோஹ்லி ஆயிரம் ஓட்டங்களைக் (18 இன்னிங்ஸ்) கடந்திருக்கிறார். இந்த மைல்கல்லை வேகமாக எட்டிய இந்தியத் தலைவர்களின் வரிசையில் 2ஆவது இடத்தை டோனியுடன் கோஹ்லி பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த சாதனை பட்டியலில் சுனில் கவாஸ்கர் (14 இன்னிங்ஸ்) முதலிடம் வகிக்கிறார்.
* தலைவராக வெளிநாட்டு மண்ணில் கோஹ்லி அடித்த 5ஆவது சதம் (12 இனிங்ஸ்) இதுவாகும். இதன் மூலம் வெளிநாட்டு மண்ணில் தலைவராக அதிக சதங்கள் எடுத்த இந்தியரான முகமது அசாருதீனின் சாதனையை (41 இனிங்ஸில் 5 சதம்) சமன் செய்தார்.
* 6 ஓட்டங்கள் எடுத்த போது விராட் கோஹ்லி டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ஓட்டங்களைக் (42ஆவது டெஸ்ட்) கடந்தார்.
* மேற்கிந்திய மண்ணில் இரட்டைச் சதம் அடித்த 3ஆவது வெளிநாட்டுத் தலைவர் கோஹ்லி ஆவார். இங்கிலாந்தின் லியோனர்ட் ஹூட்டன் (205 ஓட்டங்கள், 1954ஆம் ஆண்டு), அவுஸ்திரேலியாவின் பாப் சிம்சன் (201 ஓட்டங்கள், 1965ஆம் ஆண்டு) ஏற்கனவே இச்சிறப்பைப் பெற்று இருக்கிறார்கள்.
* கோஹ்லி ஓட்டங்கள் எடுத்த விதமும், அவர் துடுப்பாடிய விதமும் சச்சின் தெண்டுல்கர் தனது தொடக்க காலத்தில் ஆடியதை நினைவுப்படுத்துவது போன்று இருந்ததாக இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் பாராட்டினார்.