இங்கிலாந்து – பாகிஸ்தான் கிரிக்கட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் முடிவடைந்துள்ள நிலையில், 2ஆவது டெஸ்ட் நேற்று மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃப்போர்டில் தொடங்கியது. லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் முதல் போட்டியில் இடம்பெறாத பென் ஸ்டோக்ஸ், ஆண்டர்சன் ஆகியோர் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டனர். லோர்ட்ஸில் விளையாடிய அதே பாகிஸ்தான் அணிதான் இந்தப் போட்டியிலும் களம் இறங்கியது.
நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணித் தலைவர் அலைஸ்டர் குக் முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தார். அதன்படி குக்கும், ஹேல்ஸும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
7ஆவது ஓவரை மொகமது ஆமிர் வீசினார். இந்த ஓவரின் கடைசிப் பந்தில் 10 ஓட்டங்களை எடுத்திருந்த ஹேல்ஸ் கிளீன் போல்டாகி வெளியேறினார். அடுத்து ஜோ ரூட் களம் இறங்கினார்.
வேகப்பந்து வீச்சுக்கு பெரிய அளவில் ஒத்துழைக்காத வகையில் ஆடுகளம் இருந்ததால் குக், ரூட் சிரமமின்றி ரன்கள் சேர்த்தனர். இருவரும் நிலைத்து நின்று ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இங்கிலாந்து அணி 15.2 ஓவரில் 50 ஓட்டங்களைத் தொட்டது. முதல் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 27 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 95 ஓட்டங்களை எடுத்திருந்தது. ஜோ ரூட் 41 ஓட்டங்களுடனும், குக் 40 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
உணவு இடைவேளைக்குப் பிறகு இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆமிர், ரஹத் அலி, ரியாஸ், யாசீர் ஷா எவ்வளவோ முயற்சி செய்தும் விக்கட்டைக் கைப்பற்ற முடியவில்லை. ஜோ ரூட் 86 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரிகளுடன் அரைச்சதம் அடித்தார். ரூட் அரைச்சதம் அடித்த சில நிமிடங்களில் குக் 90 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரிகளுடன் அரைச்சதம் அடித்தார்.
பின்னர் தொடர்ந்தும் சிறப்பாக ஆடிய அலைஸ்டர் குக் சதம் அடித்தார். 157 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்களைத் தொட்டார். இதன்மூலம் சர்வதேச போட்டிகளில் 29ஆவது சதத்தைப் பதிவு செய்தார். அத்துடன் கிரிக்கட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சர் டொனால்டு பிராட்மேன் சாதனையை சமன் செய்தார்.
பிராட்மேன் 1928 முதல் 48 வரை சுமார் 20 ஆண்டுகள் 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 80 இனிங்ஸில் 29 சதங்கள் அடித்தார். தற்போது குக் 131 போட்டிகளில் விளையாடி 234 இனிங்ஸில் 29 சதங்கள் அடித்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக இருவரும் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 13ஆவது இடத்தில் உள்ளனர். இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் 51 சதங்களுடன் முதல் இடத்திலும், கல்லிஸ் 45 சதங்களுடன் 2ஆவது இடத்திலும், பாண்டிங் 41 சதங்களுடன் 3ஆவது இடத்திலும், சங்ககரா 38 சதங்களுடன் 4ஆவது இடத்திலும், டிராவிட் 36 சதங்களுடன் ஐந்தாவது இடத்திலும், கவாஸ்கர், லாரா, ஜெயவர்தனே ஆகியோர் 34 சதங்களுடன் 6ஆவது இடத்திலும் உள்ளனர்.
சிறப்பாக ஆடிய குக் 105 ஓட்டங்களோடு ஆமிரின் பந்து வீச்சில் மீண்டும் ஒருமுறை போல்ட் ஆகி ஆட்டம் இழந்தார். பின் நிதானமாக ஆடிய ரூட் தனது டெஸ்ட் வாழ்வில் இன்னுமொரு சதம் அடித்தார். இறுதியில் தமது முதல் இனிங்ஸிற்காக விளையாடி வரும் இங்கிலாந்து அணி நேற்றைய 1ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கட்டுகளை இழந்து 314 ஓட்டங்களைப் பெற்று இருந்தது. இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் ஆட்டம் இழக்காமல் 141 ஓட்டங்களைப் பெற்று களத்தில் ஆடி வருகிறார். பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சில் முஹமத் அமீர் மற்றும் ரஹத் அலி ஆகியோர் தலா 2 விக்கட்டுகள் வீதம் கைப்பற்றினர். கடந்த போட்டியில் 10 விக்கட்டுகளை வீழ்த்திய யாசிர் ஷாவால் விக்கட் எதையும் கைப்பற்ற முடியவில்லை. போட்டியின் 2ஆவது நாள் ஆட்டம் இன்று தொடரவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
இங்கிலாந்து 314/4 – ஜோ ரூட் 141*, அலைஸ்டர் குக் 105 , கெரி பெலன்ஸ் 23, முஹமத் அமீர் 63/2 , ரஹத் அலி 69/2
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்