உலகத் தடகள அமைப்பு ரஷியாவைச் சேர்ந்த 68 வீர – வீராங்கனைகளை ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளத் தடைவிதித்தது. இதைத் தற்போது விளையாட்டுக்கான மத்திய தீர்ப்பாயம் ஆமோதித்துள்ளது.
ரஷியாவைச் சேர்ந்த பல்வேறு வீரர்கள் – வீராங்கனைகள் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக புகார் எழுப்பப்பட்டது. இதன் அடிப்படையில் பல பரிசோதனைகள் மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது தடை விதிக்கப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.
இதனால் சர்வதேச தடகள அமைப்பு ரஷியாவின் 68 தடகள வீர –வீராங்கனைளுக்கு ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கத் தடை விதித்தது. இதை எதிர்த்து ரஷிய ஒலிம்பிக் கமிட்டி மற்றும் 68 ரஷிய தடகள வீர – வீராங்கனைகள் (தனித்தனியாக) விளையாட்டுக்கான மத்திய தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம் உலகத் தடகள அமைப்பு விதித்த தடை தொடரும் என அறிவித்தது. இதனால் ரஷிய தடகள வீரர் – வீராங்கனைகள் ரியோவில் கலந்து கொள்வது கேள்விக்குறியாகியுள்ளது.
இதே நேரத்தில் 68 வீர – வீராங்கனைகளும் ரஷியாவிற்கு வெளியே ஊக்கமருந்து தொடர்பான பரிசோதனைக்கு உட்பட்டு ரஷியா சார்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகிக்கும் தன்மையோடு, அதாவது எந்த நாட்டு பிரதிநிதியாகவும் கலந்துகொள்ளாமல் தனி நபராக கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்