இலங்கை “ஏ”, பாகிஸ்தான் “ஏ” மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் விளையாடும் முக்கோண ஒருநாள் தொடரின் 3ஆவது ஒருநாள் போட்டி நேற்று நார்த்தாம்டனின் கவுண்டி மைதானத்தில் இடம்பெற்றது.
இதில் இலங்கை “ஏ” அணி இங்கிலாந்து லயன்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுகள் இழப்பிற்கு 393 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டாவிட் மலன் மிக மிக அருமையாக விளையாடி வெறுமனே 126 பந்துகளுக்கு முகம் கொடுத்து 16 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக ஆட்டம் இழக்காமல் 185 ஓட்டங்களைப் பெற்றார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 146.82 ஆக இருந்தது. இவரை தவிர சம் பிலிங்ஸ் 34 பந்துகளுக்கு முகம் கொடுத்து 11 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடங்கலாக 68 ஓட்டங்களையும் (ஸ்ட்ரைக் ரேட் 200.0) பென் டக்கட் 72 பந்துகளுக்கு முகம் கொடுத்து 8 பவுண்டரிகள் அடங்கலாக 61 ஓட்டங்களையும் டேனியல் பெல் ட்ராமோண்ட் 48 பந்துகளுக்கு முகம் கொடுத்து 8 பவுண்டரிகள் அடங்கலாக 52 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை “ஏ” அணியின் தரப்பில் பந்து வீச்சில் பானுக ராஜபக்ஷ 3 ஓவர்கள் பந்து வீசி 34 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளையும் அவுஸ்திரேலிய 1ஆவது டெஸ்ட் அணி குழாமில் இலங்கை அணியில் இணைந்துள்ள லக்ஷன் சந்தகன் 9 ஓவர்கள் பந்து வீசி 72 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளையும் ரமித் ரம்புகவெல்ல 10 ஓவர்கள் பந்து வீசி 48 ஓட்டங்களுக்கு ஒரு விக்கட்டையும் கைப்பற்றி இருந்தனர்.
பின் இலங்கை “ஏ” அணி தமது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த போது மழை குறுக்கிட்டதால் போட்டியில் டக்வத் லூயிஸ் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அந்த முறைப்படி இலங்கை “ஏ” அணிக்கு 30 ஓவர்களில் 253 என்ற பாரிய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் இலங்கை “ஏ” அணி வீரர்களால் 30 ஓவர்கள் முடிவில் 4 விக்கட்டுகளை இழந்து 164 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்தது. இதனால் இங்கிலாந்து லயன்ஸ் அணி டக்வத் லூயிஸ் முறையில் 88 ஓட்டங்களால் வெற்றி பெற்று இருந்தது. இலங்கை “ஏ” அணி சார்பாக துடுப்பாட்டத்தில் நிரோஷான் திகவெல்ல 41 பந்துகளுக்கு முகம் கொடுத்து 9 பவுண்டரிகள் அடங்கலாக 51 ஓட்டங்களையும் தலைவர் அஷான் ப்ரியன்ஜன் ஆட்டம் இழக்காமல் 43 பந்துகளுக்கு முகம் கொடுத்து 4 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடங்கலாக 39 ஓட்டங்களையும் எஞ்சலோ பெரேரா ஆட்டம் இழக்காமல் 45 பந்துகளுக்கு முகம் கொடுத்து 3 பவுண்டரிகள் அடங்கலாக 30 ஓட்டங்களையும் பெற்றனர். இவர்களோடு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மஹேல உடவத்த 36 பந்துகளுக்கு முகம் கொடுத்து 4 பவுண்டரிகள் அடங்கலாக 34 ஓட்டங்களைப்பெற்றார். இங்கிலாந்து லயன்ஸ் அணியின் தரப்பில் பந்து வீச்சில் மார்க் வூட் 5 ஓவர்கள் பந்து வீசி 8 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளையும் டோபி ரொலாண்ட் ஜோன்ஸ் 8 ஓவர்கள் பந்து வீசி 47 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளையும் தமக்கு இடையே பங்கு போட்டனர்.
போட்டியின் சுருக்கம்
இங்கிலாந்து லயன்ஸ் : 393/5 (50)
டாவிட் மலன் 185, சம் பிலிங்ஸ் 68, பென் டக்கட் 61, டேனியல் பெல் ட்ராமோண்ட் 52
பானுக ராஜபக்ஷ 34/2, லக்ஷன் சந்தகன் 72/2
இலங்கை “ஏ” அணி : 164/4 (30) டக்ளஸ் லூயிஸ் முறையில்
நிரோஷான் திகவெல்ல 51, அஷான் ப்ரியன்ஜன் 39, எஞ்சலோ பெரேரா 30, மஹேல உடவத்த 34
மார்க் வூட் 8/2, டோபி ரொலாண்ட் ஜோன்ஸ் 47/2
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்