எதிர்வரும் 26ஆம் திகதி கண்டி பல்லேகளே மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதும் 1ஆவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை குழாம் உத்தியோகபூர்வாமாக இலங்கை கிரிக்கட் சபையினால் இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

இடதுகை சுழற் பந்து வீச்சாளர் லக்ஷன் சந்தகன், மத்தியதரவரிசை துடுப்பாட்ட வீரர் ரொஷேன் சில்வா மற்றும் வெறுமனே 18 வயது நிரம்பிய வேகப்பந்து வீச்சாளர் அசித்த பெர்னாண்டோ ஆகிய வீரர்கள் அவர்களது டெஸ்ட் கிரிக்கட் வாழ்வில் முதல் தடவையாக இலங்கை டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த 3 வீரர்களையும் தவிர இடதுகை  மிதவேகப் பந்து வீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோவிற்கும் இலங்கை டெஸ்ட் அணியில் விளையாடும் வரம் கிடைத்துள்ளது.  இது அவரது நீண்ட நாள் கனவாகும். இவ்வாறு இவர் அணியில் இடம்பெறக் காரணம் கடந்த காலங்களில் இலங்கை உள்ளூர் மட்டப் போட்டிகளில் சிறப்பாகவும் துல்லியமாகவும் பந்து வீசியமையினால் ஆகும். இவர்களோடு இங்கிலாந்து பயணமாகியுள்ள இலங்கை “ஏ” அணியில் பிரகாசித்து வரும் தனஞ்சய டி சில்வாவிற்கு மீண்டும் இலங்கை டெஸ்ட் அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது. சகலதுறை வீரரான இவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இணைக்கப்பட்டு இருந்தாலும் அவர் பயிற்சிப் போட்டியைத் தவிர டெஸ்ட் போட்டிகளில் பங்கு கொண்டு இருக்கவில்லை என்பது கூறவேண்டிய முக்கிய அம்சம் ஆகும்.

வெளியிடப்பட்டுள்ள 15 பேர் குழாமில் 2 அல்லது 3  பந்து வீச்சாளர்கள் முதலாவது டெஸ்ட் போட்டியில் தமது டெஸ்ட் போட்டி வாழ்க்கையில் அறிமுகமாகி காலடி எடுத்து வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர்களான காயத்தில் இருந்து குணம் அடைந்து வரும் துஷ்மந்த சமீர மற்றும் தம்மிக்க பிரசாத் இவர்களோடு பந்து வீசுவதற்கு தடை செய்யப்பட்ட ஷாமிந்த எரங்க ஆகியோருக்கு பதிலாகவே இந்த புதுமுக வேகப் பந்து வீச்சாளர்கள் விளையாடும் அணியில்  இடம் பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தோடு இந்தக் குழாமில் மத்தியதர வரிசை இடதுகை துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமான்னவுக்கு இடம் வழங்கப்படவில்லை. அதனால் இவருக்குப் பதிலாக இந்த இடத்தை எந்த வீரர் நிரப்புவார் என்ற கேள்வி எழும்பி உள்ள நிலையில் அந்த காலியான இடத்திற்கு ரொஷேன் சில்வா அல்லது தனஞ்சய டி சில்வா 4ஆம் அல்லது 6ஆம் இலக்க வீரராக களம் இறங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அத்தோடு இங்கிலாந்துத் தொடரில் குறிப்பிடத்தக்க அளவு பிரகாசித்த சகலதுறை ஆட்டக் காரர் தசுன் ஷானகவிற்கு இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. 6 அடி உயரமான 24 வயது நிரம்பிய தசுன் ஷானக இதுவரையில் இலங்கை அணிக்காக ஒரே ஒரு டெஸ்ட், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் 11 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். தசுன் ஷானகவோடு இன்னுமொரு சகலதுறைவீரர் மிலிந்த சிறிவர்தனவும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கடந்த மோசமான இங்கிலாந்து தொடரின் இறுதியில் உபாதைக்கு உள்ளான சுரங்க லக்மாலும் இந்த 15 பேர் கொண்ட குழாமில் இணைக்கப்ட்டுள்ளார். ஆனாலும் அவர் முதல் டெஸ்ட் போட்டியில் முழுமையான குணம் அடைந்து விளையாடுவது கேள்விக் குறியாக உள்ளது.

 1ஆவது டெஸ்ட்டிற்கான 15 பேர் குழாம் 

எஞ்சலோ மெதிவ்ஸ் (தலைவர்)
தினேஷ் சந்திமால் (உப தலைவர்)
திமுத் கருணாரத்ன
கவுஷல் சில்வா
குசல் மென்டிஸ்
தனஞ்சய டி சில்வா
ரொஷேன் சில்வா
குசல் ஜனித் பெரேரா
நுவான் பிரதீப்
விஷ்வ பெர்னாண்டோ
அசித்த பெர்னாண்டோ
ரங்கன ஹேரத்
டில்ருவான் பெரேரா
லக்ஷன் சந்தகன்
சுரங்க லக்மால்

இந்த 15 பேர் கொண்ட அணியில் எந்த 11 பேர் முதல் டெஸ்ட் போட்டியில் களம் இறங்குவார்கள். உங்களது அணியை கீழே கொமெண்ட் செய்யவும்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்