உள்ளக விளையாட்டு அரங்கில் விளையாடும் 5 வீரர்கள் கொண்ட புதுமையான புட்சால் கால்பந்து ‘லீக்’ போட்டி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் முதல் கட்ட போட்டிகள் சென்னை நேரு உள்ளக விளையாட்டு அரங்கில் கடந்த 3 தினங்களாக நடைபெற்றது.
இந்தப்போட்டியில் உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை 2 முறை வென்ற பிரேசில் முன்னாள் வீரர் ரொனால்டினோ விளையாடினார். நேற்றைய ஆட்டத்தில் அவரது ஆட்டம் முத்திரை பதிப்பதாக இருந்தது.
கோவா அணிக்காக விளையாடும் ரொனால்டினோ பெங்களூருக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 5 கோல்கள் அடித்தார். இந்தப்போட்டியில் கோவா அணி 7–2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
சென்னை–கொச்சி அணிகள் மோதிய மற்றொரு ஆட்டம் 4–4 என்ற கோல் கணக்கில் சமனிலை ஆனது.
நேற்றைய போட்டிக்குப் பிறகு ரொனால்டினோ அளித்த பேட்டியில் கூறியதாவது:–
புட்சால் கால்பந்து போட்டியை மேம்படுத்துவதில் பெருமைப்படுகிறேன். இது எனக்கு கிடைத்த வாய்ப்பாகக் கருதுகிறேன். இந்தியன் ‘லீக்’ போட்டியில் விளையாடுவதை விரும்புகிறேன்.
மெஸ்ஸி தற்போதும் உலகின் சிறந்த கால்பந்து வீரராக இருக்கிறார். கோபா அமெரிக்கா இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு அவர் சர்வதேசப் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் சர்வதேசப் போட்டிக்கு திரும்ப வேண்டும். அவர் இல்லாதது கால்பந்துக்கு மிகப்பெரிய இழப்பாகும்.
சமீபத்தில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து பிரேசில் அணி மீண்டு நல்ல நிலைக்கு திரும்பி உள்ளது. ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக விளையாடும். நெய்மார் முத்திரை பதிப்பார். அவர் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராவார். இவ்வாறு ரொனால்டினோ கூறியுள்ளார்.
புட்சால் பிரிமீயர் ‘லீக்’ கால்பந்தின் 2ஆவது கட்ட போட்டிகள் 19ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையும், அரை இறுதி ஆட்டங்கள் 23ஆம் திகதியும், இறுதிப்போட்டி 24ஆம் திகதி கோவாவில் நடைபெறவுள்ளது.
சென்னையில் நடந்த முதல் கட்டப் போட்டி முடிவில் ‘ஏ’ பிரிவில் கொச்சி அணி 4 புள்ளியுடனும், மும்பை 3 புள்ளியுடனும், சென்னை 1 புள்ளியுடனும், ‘பி’ பிரிவில் கொல்கத்தா (4 புள்ளி), கோவா (3 புள்ளி), பெங்களூர் (1 புள்ளி) முதல் 3 இடங்களில் உள்ளன. ‘லீக்’ முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குத் தகுதிபெறும்.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்