கடற்படைக்கு இராணுவம் கொடுத்த அதிர்ச்சி

307

பெண்களுக்கான T20 கிரிக்கெட் போட்டிகளின் இரண்டாம் நாள் ஜூலை 6ஆம் திகதி சரே விலேஜ் மைதானம் மற்றும் பானகொட இராணுவ மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டிகளில் இராணுவ A, கோல்ட்ஸ் , விமானப்படை A மற்றும் B அணிகள் வெற்றிபெற்றன.

 குழு

இராணுவ A  மற்றும் கடற்படை A  அணிகளுக்கிடையிலான போட்டி

நடைபெற்று முடிந்த ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் சிறந்த முறையில் தமது திறமையை வெளிக்காட்டியமையால் இப்போட்டி அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாக அமைந்தது. கடற்படை A  அணி நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று இராணுவ A அணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இராணுவ A  அணி நிபுணி ஹன்சிகாவின் அரைச் சதத்தின் உதவியுடன் 129 எனும் சிறந்த ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றுக்கொண்டது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கடற்படை அணியானது பிரசாதினி மற்றும் ப்ரியானியின் உதவியுடன் ஒரு சிறந்த நிலையில் காணப்பட்ட போதிலும் அவர்களைத் தொடர்ந்து வந்தவர்கள் பிரகாசிக்காததால் கடற்படை A அணியானது நியமிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 116 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது. இதன் மூலம் இராணுவ A அணி 13 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இராணுவ A அணி – 129/4 (20)  நிபுணி ஹன்சிகா 52*, ரெபேக்கா வேண்டொர்ட் 24, இநோக்கா 2/38

கடற்படை A அணி – 116/9 (20) பிரசாதினி வீரக்கொடி 32, ப்ரியானி அதிகாரி 21, சுகந்திகா 3/27

முடிவுஇராணுவ A அணி 13 ஓட்டங்களால் வெற்றிபெற்றது


மாத்தறை மற்றும் விமானப்படை B  அணிகளுக்கிடையிலான போட்டி

முதலில் துடுப்பெடுத்தாடிய மாத்தறை அணி நியமிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 99 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. மாத்தறை அணிக்காக தனியாகப் போராடிய மல்ஷா ஷெஹானி ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட போதும் மாத்தறை அணி  99 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது

தொடரில் தமது முதல் வெற்றியைப் பதிவு செய்ய 100 ஓட்டம் என்ற இலகுவான இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய விமானப்படை B அணியானது தர்ஷனி மற்றும் சதுரானியின் சிறந்த துடுப்பாட்டத்தால் 14.3 ஓவர்களில் 3 விக்கட்டுகளை மட்டும் இழந்து இலகுவாக மாத்தறை அணியை வீழ்த்தியது.

மாத்தறை அணி – 99/8 (20)  மல்ஷா ஷெஹானி 34*, ஷகிலா குமரி 3/20,சதுரானி 2/15

விமானப்படை B அணி – 100/3(14.3) தர்ஷானி தர்மசிறி 33, சதுரானி குணவர்தன 29, ஷயானி 2/23

முடிவுவிமானப்படை B 7 விக்கட்டுகளால்  வெற்றிபெற்றது


 குழு

இராணுவ B மற்றும் விமானப்படை A அணிகளுக்கிடையிலான போட்டி

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இராணுவ அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 2ஆவது பந்து வீச்சிலேயே முதல் விக்கட்டைப் பறிகொடுத்த இராணுவ B அணி ஆரம்பம் முதலே தடுமாறியது. திறமைமிக்க விமானப்படையின் பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் 20 ஓவர்கள்  முடிவில் 9 விக்கட்டுகளை இழந்து 76 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனைகளைக் கொண்ட விமானப்படையானது 77 ஓட்டம் எனும் இலக்கை எந்த ஒரு விக்கட்டையும் பறிகொடுக்காது 9.3 ஓவர்களில் பெற்றுக்கொண்டு 10 விக்கட்டுகளால் அபார வெற்றியீட்டியது.

இராணுவ B அணி – 76/9 (20)  கயானி  பண்டார 21, ஒஷாதி 2/12, சாமரி 1/7

விமானப்படை A அணி – 77/0 (9.3) சாமரி  அதப்பத்து 39 , யசோதா மெண்டிஸ் 35

முடிவுவிமானப்படை A 10 விக்கட்டுகளால் வெற்றிபெற்றது


கடற்படை B மற்றும் கோல்ட்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி

முதலில் துடுப்பெடுத்தாடிய கடற்படை B அணி ஆரம்பத்தில் தொடர்ந்து விக்கட்டுகளை இழக்காத போதிலும் அவர்களால் விரைவாக ஓட்டங்களைக் குவிக்க முடியாமல் போனது. சிறப்பாகப் பந்து வீசிய கோல்ட்ஸ் அணியினர் ,கடற்படை B அணியை 20 ஓவர்களில்  86 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தினர்.

87 எனும் இலகுவான ஓட்ட எண்ணிக்கையை நோக்கித் துடுப்பெடுத்தாடிய கோல்ட்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனைகள் 39 பந்துகளில் 52 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து கோல்ட்ஸ் அணியின் வெற்றி இலக்கை மேலும் இலகுவாக்கினர். 13.2 ஓவர்களில் 1 விக்கட்டை மாத்திரம் இழந்து கோல்ட்ஸ் அணியானது 90 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் வெற்றிபெற்றது.

கடற்படை B  அணி – 86/8 (20) துஷாந்தி30, சதானி 3/8, பூஜானி  2/18

கோல்ட்ஸ் அணி –  90/1(13.2) ஷாமின் ஷைலா 37, ஹர்ஷிதா 20*, எஸ்.ஜயவர்தன 1/12

முடிவுகோல்ட்ஸ் அணி 9 விக்கட்டுகளால் வெற்றிபெற்றது