ஆதாரம் – Cricinfo
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் தரிந்து கவ்ஷாலின் தூஸ்ரா பந்துவீச்சு முறை தொடர்பாக தெளிவுபெற இலங்கை கிரிக்கட் சபை தீர்மானித்துள்ளது. தரிந்து கவ்ஷால் சர்வேதேச கிரிக்கட் அரங்கில் தனது பந்துவீச்சு பணியை மாற்றி அமைத்து இருந்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் எஸ்.எஸ்.சியில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது தரிந்து கவ்ஷால் சந்தேகத்திற்குரிய பந்துவீச்சு நடையைக் கொண்டுள்ளார் என குற்றம் சாட்டப்பட்டார்.
அவர் வீசிய 18 தூஸ்ரா பந்துவீச்சில் 9 தூஸ்ரா பந்துவீச்சு ஐ.சி.சி. விதிக்கு மாறாக முழங்கை 15 டிகிரிக்கு மேல் கையை வளைத்து வீசி இருந்தார் என உயிர்விசையியல் (biomechanical) சோதனை மூலம் தெரிய வந்தது. இதனால் தரிந்து கவ்ஷால் தான் வீசும் தூஸ்ரா பந்துகளை நேராக ஐ.சி.சி அனுமதித்த வகையில் வீசுவதற்குப் பழகினார்.
இது தொடர்பாக இலங்கை கிரிக்கட்டின் உயர் செயல்திறன் முகாமையாளர் சிமோன் வில்லிஸ் கூறுகையில் “தரிந்து கவ்ஷால் கடந்த 4 வாரங்களாக தனது பந்து வீச்சு தொடர்பாக கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். நாம் அவரது பந்துவீச்சு தொடர்பில் 2 சிறிய தொழில்நுட்ப மாற்றங்களை ஏற்படுத்த உள்ளோம். அது அவருக்கு உதவும்” என்று கூறியுள்ளார்.