டி20 உலகக் கிண்ணம் 2018 ஒக்டோபரில்

787
ICC to decide on T20 World Cup 2018 in October

ஐ.சி.சி. கடந்த 2007ஆம் ஆண்டில் இருந்து டி20 உலகக் கிண்ண கிரிக்கட் தொடரை நடத்தி வருகிறது. அதன்பின் தொடர்ந்து 2009, 2010, 2012, 2014 மற்றும் 2016இல் நடத்தியது.

2016-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ண தொடருக்குப்பின் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை டி20 உலகக் கிண்ணத்தை நடத்த திட்டமிட்டிருந்தது. அதன்படி அடுத்த டி20 உலகக் கிண்ணத்தை அவுஸ்ரேலியாவில் நடத்த ஐ.சி.சி. திட்டமி்ட்டிருந்தது. இதற்கிடையே அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் நடக்க இருக்கிறது. 2019இல் 50 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கட் நடக்கிறது.

கடந்த மாதம் இந்தியாவில் நடந்து முடிந்த டி20 உலகக்கிண்ணப் போட்டிகளை உலகளவில் 750 மில்லியன் மக்கள் வீடியோ, ஒன்லைன் மூலம் பார்த்து ரசித்தனர். 2015இல் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கிண்ண போட்டிகளை வெறும் 250 மில்லியன் மக்கள் தான் பார்த்தனர். இதைவிட டி20 போட்டிகளை 3 மடங்கு அதிக அளவில் பார்த்து ரசித்துள்ளனர்.

மேலும், அரையிறுதி, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா அணிகளை எதிர்த்து இந்தியா விளையாடிய போட்டியை இந்தியாவில் மட்டும் 80 மில்லியன் மக்கள் ரசித்துள்ளனர். அத்துடன் ஐசிசி எதிர்பார்த்ததைவிட அதிகளவில் வருமானமும் கிடைத்தது. ஆகவே, இந்த வருமானத்தை இழக்க விரும்பாத ஐ.சி.சி. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை டி20 உலகக் கிண்ணத்தை  நடத்த திட்டமிட்டது.

இதற்குரிய முக்கிய ஆலோசனை எடின்பர்க்கில் நடைபெற்ற ஆண்டு பொதுக்கூட்டத்தில் முன்மொழியப்பட்டது. அப்போது 2018இல் டி20 உலகக்கோப்பையை நடத்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது உறுதியான முடிவு என்றாலும், இந்த மாதம் ஒக்டோபரில் தான் அதிகாரப்பூர்வமான முடிவு எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு இந்த தொடர் நடப்பது உறுதியானால் தென்ஆபிரிக்காவில் நடைபெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை டி20 உலகக் கிண்ணம் நடத்தப்பட இருப்பதால் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை 8 அணிகளுக்கு இடையில் நடத்தப்படும் சம்பியன்ஸ் கிண்ணம்  ரத்து செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

2018ஆம் ஆண்டில்  மூன்று வார காலமாக டி20 உலகக் கிண்ணப் போட்டியை தென் ஆபிரிக்காவில் நடத்த ஐ.சி.சி. திட்டமிட்டுள்ளது. ஆனால் சிலவேளை இந்தத் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தப் போட்டி நடைபெற்றால் ஐ.பி.எல். தொடரின் வருவாய் பாதிக்கப்படும் என்று ஒளிபரப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்