பாடசாலை மட்டத்திலான 19 வயதிற்குற்பட்ட தேசிய ஹாக்கி போட்டிகள் ஜூன் 29, 30, ஜூலை 01 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெற்றது.
ஆண்களுக்கான போட்டிகள் அஸ்ட்ரோ மைதானத்திலும் பெண்களுக்கான போட்டிகள் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி மைதானத்திலும் நடைபெற்றன. பெண்களுக்கான போட்டிகளில் கண்டி நீல அணியும், ஆண்களுக்கான போட்டிகளில் கொழும்பு சிவப்பு அணியும் கோப்பையை சுவீகரித்துக்கொண்டன.
1ஆம் நாள்
தேசிய ரீதியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மொத்தமாக 11 ஆண்கள் அணியினரும் 10 பெண்கள் அணியினரும் கலந்து கொண்டன. போட்டியின் முதலாம் நாளான 29ஆம் திகதி அன்று குழு மட்டத்திலான போட்டிகளே நடைபெற்றன.
இப்போட்டியில் பலம் வாய்ந்த அணியாக எதிர்பார்க்கப்பட்ட கொழும்பு சிவப்பு அணியின் முதல் போட்டியானது காலி அணியுடன் சமநிலையில் முடிந்த பொழுதும் இரண்டாவது போட்டியில் களுத்துறை அணிக்கு எதிராக 6 கோல்கள் அடித்து அசத்தினர். மற்றுமொரு பலம் வாய்ந்த அணியான மாத்தளை கோல்ட் முதல் போட்டியிலேயே கம்பஹா அணிக்கு எதிராக 7-1 என்ற ரீதியில் வெற்றிபெற்றனர்.எனினும் கம்பஹா அணி கண்டி வெள்ளை அணிக்கு எதிராக தனது முதலாவது வெற்றியைப் பதிவு செய்தது.மறுபக்கம் கண்டி நீல அணியினர் கொழும்பு நீல அணியினரை இரண்டு முறை குழு மட்டத்திலான போட்டிகளில் வெற்றிகொண்டனர்.
பெண்களுக்கான போட்டிகளில் கொழும்பு சிவப்பு அணியானது, மாத்தளை மரூன் அணியினை 8-0 என்ற அடிப்படையில் வெற்றிகொண்டது. அதேவேளையில் மாத்தளை கோல்ட் மற்றும் கொழும்பு நீலம் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிந்தது. கம்பஹா அணியானது கண்டி வெள்ளை அணியுடனான முதல் போட்டியில் 2-0 என்ற நிலையில் தோல்வியுற்ற போதிலும் இரண்டாவது போட்டியில் கண்டி வெள்ளை அணியினரை 3 – 0 என்று வெற்றி கொண்டது. கண்டி நீல அணி, களுத்துறை அணியுடனான போட்டியில் 1-0 என வெற்றிகொண்டது
2 ஆம் நாள்
ஜூன் 30ஆம் திகதி கால் இறுதிப் போட்டிகள் ஆரம்பமாகின. ஆண்களுக்கான முதல் கால் இறுதிப் போட்டியில் கண்டி நீல அணியை எதிர்கொண்ட காலி அணியினர் தமது பலத்தை நிரூபித்து பலம் வாய்ந்த கண்டி நீல அணியினரை 2-1 என்ற அடிப்படையில் வெற்றி கொண்டு அரை இறுதிக்கு முன்னேறினர். வென்னப்புவ ஜோசப் வாஸ் பாடசாலையை மட்டும் உள்ளடக்கிய புத்தளம் அணியினர் கம்பஹா அணியை 1-0 அன்று வெற்றி கொண்டு அரை இறுதியில் தமது இடத்தைப் பதிவு செய்தனர். அடுத்த கால் இறுதிப் போட்டியில் கொழும்பு சிவப்பு அணியினரும், கொழும்பு நீல அணியினரும் மோதிக்கொண்டனர்.இப்போட்டியில் கொழும்பு சிவப்பு அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிகொண்டனர். இறுதி கால் இறுதிப் போட்டியில் மாத்தளை மரூன் மற்றும் மாத்தளை கோல்ட் அணியினர் மோதிக் கொண்டனர். மாத்தளை கோல்டு அணியினர் இப்போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டு அரை இறுதிக்கு முன்னேறினர்.
பெண்களுக்கான முதல் இரண்டு கால் இறுதிப் போட்டிகளும் கொழும்பு றோயல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. முதல் கால் இறுதிப் போட்டியில் கண்டி நீல அணியினர், கம்பஹா அணியினரை 5-0 என இலகுவாக வெற்றிக்கொண்டனர்.எனினும் கண்டி வெள்ளை அணி விறுவிறுப்பான போட்டிக்குப் பின்னர் களுத்துறை அணியுடன் 2-1 என்ற அடிப்படையில் பெனல்ட்டி முறையில் தோல்வி கண்டது. அடுத்த போட்டிகளில் கொழும்பு சிவப்பு அணி, கொழும்பு நீல அணியினை 2-1 எனவும், மாத்தளை கோல்ட் அணி ,மாத்தளை மரூன் அணியை 2-0 எனவும் வெற்றிகொண்டன.
3 ஆம் நாள்
ஜூலை 1ஆம் திகதி அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெற்றன. ஆண்களுக்கான முதலாவது அரை இறுதியில் மாத்தளை கோல்ட் அணி காலி அணியினை 4-0 என்ற அடிப்படையில் இலகுவாக வெற்றி கொண்டு வழமையாக இறுதிப் போட்டியில் தமது இடத்தைப் பதிவு செய்வது போன்று இம்முறையும் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகினர். மற்ற அரை இறுதிப் போட்டியானது கொழும்பு சிவப்பு அணி மற்றும் புத்தளம் அணிக்கு இடையில் நடைபெற்றது. தமது மாவட்டத்தில் ஒரே ஒரு ஹாக்கி பாடசாலையை மட்டும் கொண்ட புத்தளம் அணி பலம் வாய்ந்த கொழும்பு அணியினருக்குச் சவாலாக அமைந்தனர். கடினமான போட்டிக்குப் பின்னர் கொழும்பு சிவப்பு அணி 2-1 என்ற கோல் அடிப்படையில் வெற்றி கொண்டது.
பெண்களுக்கான முதலாவது அரை இறுதிப் போட்டியில் கொழும்பு சிவப்பு அணி களுத்துறை அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் கொழும்பு அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டு இறுதிப் போட்டியில் தமது இடத்தைப் பதிவு செய்தது. இரண்டாவது அரை இறுதி கண்டி நீல அணியினருக்கும் மாத்தளை கோல்ட் அணியினருக்கும் இடையில் நடைபெற்றது. விறுவிறுப்பான போட்டியின் பின்னர் கண்டி நீல அணி 3-0 என்ற அடிப்படையில் வெற்றி கொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப் போட்டி
ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் இரண்டு பலமிக்க அணிகளான கொழும்பு சிவப்பு அணி மற்றும் மாத்தளை கோல்ட்அ ணியினர் பலப்பரீட்சை நடத்தினர். எதிர்பார்க்கப்பட்டது போலவே இரு அணிகளும் கடுமையாக மோதிக்கொண்டன. இரு அணிகளுக்கும் இடையில் ஒரு சிறந்த போட்டியை காணக்கூடியதாக இருந்தது. முதலாவது பாதி இரு அணிகளும் கோல்கள் எதுவும் போடாத நிலையில் முடிவுற்றது. இரண்டாவது பாதியில் ஆரம்பத்திலேயே கொழும்பு சிவப்பு அணி கோல் அடிக்க அதற்கு பதிலடியாக மாத்தளை அணியும் கோல் அடித்து மீண்டும் போட்டியை சமப்படுத்தியது. கடுமையான போட்டிக்குப் பின்னர் கொழும்பு சிவப்பு அணி இறுதி சில நிமிடங்களில் கோல் அடித்துப் போட்டியை 2-1 என்ற அடிப்படையில் வென்று கோப்பையை சுவீகரித்துக் கொண்டது.
பெண்களுக்கான இறுதிப் போட்டியில் கண்டி நீல அணியும் கொழும்பு சிவப்பு அணியும் மோதிக்கொண்டன. தமது அணிக்காக முதலாவது கோலை அடித்த வத்சலா ஜயசிங்ஹ கண்டி நீல அணியினை முன்னிலைப்படுத்தினார்.எனினும் தொடர்ந்து கொழும்பு சிவப்பு அணியும் கோல் அடித்து அசத்த முதலாவது பாதி சமநிலையில் முடிந்தது. இரண்டாவது பாதியில் முதற்கொண்டே ஆதிக்கம் செலுத்திய கண்டி நீல அணி மேலும் இரண்டு கோல்களை அடித்தது. இறுதியில் 3-1 என்ற அடிப்படையில் கண்டி நீல அணியினர் வெற்றி கொண்டு கோப்பையை தமதாக்கிக்கொண்டனர்.