பிறிஸ்பேர்ணிலுள்ள அவுஸ்திரேலியாவின் தேசிய கிரிக்கெட் நிலையத்தில் ஆலோசகராகப் பணியாற்றும் குறிப்பிட்ட காலத்தில், இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் டெஸ்ட் சுற்றுப் பயணத்துக்கு முன்பதாக, சில அவுஸ்திரேலிய டெஸ்ட் வீரர்களுடன் முன்னாள் இலங்கைத் துடுப்பாட்டவீரரான திலான் சமரவீர பணியாற்றுகின்றார்.
ஜூன் மாதம் தொடக்கம் ஓகஸ்ட் மாதம் வரை, அகடமியின் ஆலோசகராக பணிக்கமர்த்தப்பட்டுள்ள சமரவீரவின் பணியானது, எதிர்வரும் இலங்கைத் தொடருக்காக அவுஸ்திரேலிய டெஸ்ட் வீரர்களைத் தயார்படுத்துவதாக இல்லாதபோதும், அடம் வொஜஸ், ஷோர்ன் மார்ஷ், ஜக்ஸன் பேர்ட் ஆகியோர் இலங்கைத் தொடருக்காக தயாராகுகையில், அவர்களுடன் இணைந்து ஏற்கெனவே சமரவீர பணியாற்ற ஆரம்பித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது, பிறிஸ்பேர்ணிலுள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் தான் பங்கெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள சமரவீர, மேற்கிந்தியத் தீவுகளில் இடம்பெற்ற முத்தரப்புத் தொடரில் பங்கேற்காத சில டெஸ்ட் வீரர்களுடன் தான் பணியாற்றுவதாகவும், அவர்கள் அங்கு பயிற்சிக்கு வருவதாக மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், அவுஸ்திரேலியாவின் இலங்கைத் தொடருக்காக அவுஸ்திரேலிய அணியுடன் செல்வேன் என்று தான் நினைக்கவில்லை என மெல்பேர்ணில் வசிக்கின்ற சமரவீர கூறியுள்ளார். இதேவேளை, அவுஸ்திரேலிய “ஏ” அணி வீரர்களுடன் பணியாற்றியிருந்த சமரவீர, இவ்வருட ஆரம்பத்தில் பங்களாதேஷில் இடம்பெற்றிருந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்துக்கு முன்னரும் அகடமியில் பணியாற்றியிருந்தார்.
அவுஸ்திரேலிய அணி வெளிநாடுகளுக்கு செல்லும்போது, அந்நாடுகளின் நிலைமைகளுக்கு பழக்கப்பட்ட பயிற்சியாளர்களை பணிக்கமர்த்துவது அவுஸ்திரேலியாவின் புதிய கொள்கையாக இருக்கையில், இலங்கையணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சு ஜாம்பவானான முத்தையா முரளிதரன், 2014ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணியின் ஐக்கிய அரபு அமீரகத்துக்கான சுற்றுப்பயணத்தின்போது சுழற்பந்துவீச்சாளர்களுடன் பணியாற்றியிருந்தார்.
ஆதாரம் – விஸ்டன் இலங்கை
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்