பெண்கள் கிரிக்கட்: இறுதிப் போட்டியில் இராணுவ ‘ஏ’ அணிக்கு இலகு வெற்றி

335

பெண்கள் பங்குபெறும் முதலாம் பிரிவு ஒரு நாள் போட்டித்தொடரின் இறுதிப் போட்டியில் இராணுவ ‘பீ’ அணியை வீழ்த்தி இராணுவ ‘ஏ’ அணி சம்பியனானது.

கட்டுநாயக்க FTZ மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் நேவி ‘ஏ’ அணி இராணுவ பீ’ அணியை வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்குத் தெரிவானது. எனினும் வெளியிடப்படாத காரணங்களுக்காக  நேவி ‘ஏ’ அணி போட்டித்தொடரிலிருந்து வெளியேற நேர்ந்ததால் இராணுவ ‘பீ’ அணி இறுதிப்போட்டிக்கு நேரடித் தகுதிபெற்றது.

துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான ‘மேர்கன்டைல்’ மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இராணுவ ‘பீ’ அணி இராணுவ ‘ஏ’ அணியைத் துடுப்பெடுத்தாடப் பணித்தது. ஆரம்பத்திலிருந்தே இராணுவ ‘ஏ’ அணிக்காக சிறப்பாக விளையாடிய தேசிய வீராங்கனை ரெபேக்கா வண்டொர்ட் அதிரடியான ஆரம்பத்தை ஏற்படுத்திக்கொடுத்தார். ஆரம்பத்திலே 2 விக்கட்டுகளை இழந்தாலும் ஓட்ட விகிதத்தை 4இற்கும் குறையாவண்ணம் வண்டொர்ட் மற்றும் நிபுணி ஹன்சிகா ஜோடி சிறப்பாத்க துடுப்பெடுத்தாடியது. வண்டொர்ட் 72 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க ஹன்சிகா 15 பவுண்டரிகள் அடங்கலாக 104 ஓட்டங்களைப் பெற்று சதத்தினைப் பூர்த்தி செய்தார். ஹன்சிகா, ஏர்  போர்ஸ் அணிக்கெதிராக அரையிறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடியமையும் குறிப்பிடத்தக்கது.

அதிரடியாக விளையாடி 30 ஓட்டங்களைப் பெற்ற தமயந்தி டி சில்வா மற்றும் ஜனனி கௌஷல்யா இருவரும் இராணுவ ‘ஏ’ அணி வெறும் 5 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து  285 ஓட்டங்களைப்பெற வழிகோரினர்.

ஆரம்பத்திலிருந்தே வெற்றியை நோக்காகக் கொள்ளாது 50 ஓவர்களையும் ஆடி முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இராணுவ ‘பீ’ அணி  விளையாடியது. எனினும் ஆரம்பம் முதலே இராணுவ ‘பீ’ அணி விக்கட்டுக்களை தாரை வார்க்கத் தொடங்கியது. இராணுவ ‘ஏ’ சார்பாகப் பந்து வீசிய 6 பேரில் நால்வர் குறைந்தது ஒரு விக்கட்டையேனும் பெற்றுக்கொண்டனர்.

நிலுகா குஷாந்தி, அயேஷா பிரபோதினி மற்றும் கிரிஷாந்தி சந்தமாலி ஆகிய வீராங்கனைகள் மாத்திரமே இராணுவ ‘பீ’ அணி சார்பாக இரட்டை இலக்க ஓட்டங்களைப்  பெற்றனர்.அதிலும் ஒருவரால் மட்டுமே 40 ‘ஸ்ட்ரைக் ரேட்’ஐக் கடக்க முடிந்தது. எனினும் அவர்கள் தமது அனைத்து விக்கட்டுகளையும் பறிகொடுக்காமல் 7 விக்கட் இழப்பிற்கு 96 ஓட்டங்களைப் பெற்றனர்.

அனைத்து இராணுவ ‘ஏ’ வீராங்கனைகளும் சிறப்பாகப் பந்து வீசினர். அச்சினி குலசூரிய மற்றும் நிலுகா கருணாரத்ன ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளைப் பெற்றுக்கொண்ட அதேவேளை லக்மாலி மெத்தானந்தா மற்றும் தமயந்தி டி சில்வா இருவரும் தலா ஒரு விக்கட் வீதம் பெற்றுக்கொண்டனர்.

இராணுவ விளையாட்டுக் கழகம் ‘ஏ’-  285/5 (50) நிபுணி ஹன்சிகா 104, ரெபேக்கா வண்டொர்ட் 72, டிலூஷா ஹிந்தகொட 2/49, நிஷாந்தி பத்மசந்திர 2/46

இராணுவ விளையாட்டுக் கழகம் ‘பீ’- 96/7 (50) நிலுகா குஷாந்தி 24, கிரிஷாந்தி சந்தமாலி 21*, நிலுகா கருணாரத்ன 2/11, அச்சினி குலசூரிய 2/11

இராணுவ ‘ஏ’ 189 ஓட்டங்களால் வெற்றி