கோபா அமெரிக்க கிண்ண 3ஆம் இடம் கொலம்பியாவுக்கு

311
USA 0-1 Colombia: Copa América
@AFP

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் கொலம்பியா அணி 3ஆவது இடத்தைப் பிடித்தது. அந்த அணி அமெரிக்காவை 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றிகொண்டது.

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் அரையிறுதிப் போட்டியில் தோற்ற அமெரிக்கா மற்றும் கொலம்பியா அணிகள் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் மோதின. ஆட்டத்தின் ஆரம்பம் முதலே 2 அணிகளும் கோல் அடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். 31ஆவது நிமிடத்தில் கொலம்பியா வீரர் கார்லோஸ் பக்கா ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுத்தந்தார்.

இதைத்தொடர்ந்து ஆட்டத்தை சமநிலைக்குக் கொண்டுவர அமெரிக்க அணி தீவிரமாக முயன்றது. அந்த அணியின் நட்சத்திர வீரரான கிளின்ட் டெம்ப்ஸே பலமுறை கொலம்பிய கோல் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினார். ஆனால் கொலம்பியாவின் கோல்கீப்பர் சிறப்பாக செயற்பட்டதால் டெம்ப்ஸேவால் கோல் அடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து கொலம்பியா அணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. இந்த போட்டித்தொடரில் அமெரிக்காவை கொலம்பியா அணி தோற்கடிப்பது இது 2ஆவது முறையாகும். ஏற்கெனவே இதற்கு முன்பு நடந்த லீக் ஆட்டத்தில் கொலம்பியா அணி 2-0 என்ற கோல்கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது.

இந்தப் போட்டி குறித்து அமெரிக்காவின் பயிற்சியாளர் கிளின்ஸ்மேன் நிருபர்களிடம் கூறும்போது, “கொலம்பியா வீரர்கள் முதல் பாதி ஆட்டத்தில் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால் எங்கள் வீரர்கள் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தவில்லை. அமெரிக்காவுக்கு இப்போட்டியில் பலமுறை கோல் அடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் அவை அனைத்தும் வீணடிக்கப்பட்டது. கொலம்பியாவுக்கு எதிரான போட்டியில் தோற்றபோதிலும், இந்தத் தொடரில் அமெரிக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். மிகப்பெரிய தொடர் ஒன்றில் அரையிறுதிச் சுற்றுவரை முன்னேறியது மகிழ்ச்சியாக இருக்கிறது”என்றார்.

இந்த தொடரின் இறுதிப்போட்டியில் சிலி மற்றும் ஆர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்