ஆர்ஜென்டினாவிற்கு அபார வெற்றி, அரையிறுதியில் ஆர்ஜென்டினா

282
Argentina 4-1 Venezuela: Copa América
Charles Krupa AP

45வது கோபா அமெரிக்க கிண்ண  கால்பந்துப் போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதன் 3ஆவது கால் இறுதி ஆட்டம்  இன்று அதிகாலை நடந்தது. இதில் 14 முறை சாம்பியனான ஆர்ஜென்டினா – வெனிசூலா அணிகள் மோதின.

ஆர்ஜென்டினா வீரர்களின் அபாரமான தாக்குதல் ஆட்டத்துக்கு ஈடுகொடுத்து விளையாட முடியாமல் வெனிசூலா வீரர்கள் திணறினார்கள். ஆர்ஜென்டினா 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிபெற்றது.

ஆட்டத்தின் 8ஆவது நிமிடத்தில் ஆர்ஜென்டினா வீரர் கோன்சாலோ ஹிகுயின் முதல் கோலை அடித்தார். 28ஆவது நிமிடத்தில் அவர் தனது 2ஆவது கோலையும் அடித்தார். முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் ஆர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

2ஆவது பாதி ஆட்டத்திலும் அந்த அணியின் ஆதிக்கமே நீடித்தது. 60ஆவது நிமிடத்தில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி ஆர்ஜென்டினா அணியின் 3ஆவது கோலை அடித்தார்.

வெனிசூலா அணி 70ஆவது நிமிடத்தில் ஆறுதல் கோல் அடித்தது. ரான்டன் இந்த கோலை அடித்தார். இந்த கோல் விழுந்த மறு வினாடியே (71ஆவது நிமிடம்) ஆர்ஜென்டினா வீரர் லமேலா 4ஆவது கோலை அடித்தார். முடிவில் ஆர்ஜென்டினா 4-1 என்ற கணக்கில் வெனிசூலாவை வீழ்த்தியது.

இந்த வெற்றி மூலம் ஆர்ஜென்டினா அணி அரை இறுதிக்குத் தகுதி பெற்றது. ஆர்ஜென்டினா அணி அரை இறுதியில் அமெரிக்காவை சந்திக்கிறது. இந்த ஆட்டம் வருகிற 22ஆம் திகதி ஹீஸ்டன் நகரில் நடைபெறவுள்ளது.

அதைத் தொடர்ந்து 4ஆவது கால்இறுதி ஆட்டம் நடந்தது. இதில் நடப்பு சாம்பியனான சிலிமெக்சிகோ அணிகள் மோதின. சிலி அணிகோல் மழை பொழிந்து மெக்சிகோவை நசுக்கித் தள்ளி அரை இறுதிக்குத் தகுதி பெற்றது. அந்த அணி 7-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிபெற்றது.

சிலி அணியில் எடுர்டோ வர்காஸ் 4 கோல் அடித்து முத்திரை பதித்தார். எட்சன் பஞ்ச் 2 கோலும், அலெக்சிங் சான்செஸ் ஒரு கோலும் அடித்தனர்.

மெக்சிகோ அணியால் ஒரு கோல் கூட போட முடியாமல் போனது. சிலி அணி அரை இறுதியில் கொலம்பியாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் 23ஆம் திகதி  நடைபெறவுள்ளது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்