ஹெட்ரிக் கோல் அடித்து அணியை வெற்றிபெறச் செய்தார் மெஸ்ஸி

337
Argentina 5-0 Panama Copa América
Photograph - Charles Rex Arbogast AP

45ஆவது கோபா அமெரிக்க கிண்ணக் கால்பந்து போட்டியில் இன்றைய ஆட்டத்தில் 5-0 என்ற கோல் கணக்கில் பனாமாவை  எதிர்கொண்டு ஆர்ஜென்டினா அபார வெற்றிபெற்றது.

45ஆவது கோபா அமெரிக்கக்  கிண்ண கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. ‘டி’பிரிவில் இன்று காலை நடந்த ஆட்டத்தில் ஆர்ஜென்டினா – பனாமா அணிகள் மோதின.

அர்ஜென்டினா வீரர்களின் அபாரமான ஆட்டத்துக்கு ஈடுகொடுத்து விளையாட முடியாமல் பனாமா வீரர்கள் திணறினார்கள். உலகின் முன்னணி வீரரான லியோனல் மெஸ்ஸி தொடர்ச்சியாக 3 கோல்கள் அடித்து ஹெட்ரிக் சாதனை புரிந்தார். அவர் 68ஆவது நிமிடம், 78ஆவது நிமிடம் மற்றும் 87ஆவது நிமிடங்களில் கோல் அடித்து பனாமாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

ஆட்டத்தின் முடிவில் ஆர்ஜென்டினா 5–0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. ஆர்ஜென்டினா அணியின் மற்ற 2 கோல்களை நிக்கோலஸ் ஓடாமென்டி (7ஆவது நிமிடம்), செர்ஜியோ அகிரோ (90ஆவது நிமிடம்) ஆகியோர் அடித்தனர். பனாமா அணியால் ஒரு கோலைக்கூட போட முடியாமல் போனது பரிதாபமே.

இந்த வெற்றி மூலம் ஆர்ஜென்டினா கால் இறுதிக்கு தகுதிபெற்றது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் 2–1 என்ற கணக்கில் சிலியை தோற்கடித்திருந்தது. 2 வெற்றிகள் மூலம் ‘நொக் அவுட்’சுற்றை எட்டியது. ஆர்ஜென்டினா கடைசி லீக் ஆட்டத்தில் பொலிவியாவை சந்திக்கிறது.

உருகுவே வெளியேறியது; காலிறுதியில் மெக்சிகோ, வெனிசுலா

பனாமா அணி முதல் தோல்வியைத் தழுவியது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் 2–1 என்ற கணக்கில் பொலிவியாவை வீழ்த்தி இருந்தது. அந்த அணி கடைசி லீக் ஆட்டத்தில் சிலியை எதிர் கொள்கிறது.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் சிலி – பொலிவியா அணிகள் மோதின. இதில் சிலி 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. சிலி அணியில் விடால் 2 கோல்களையும் (46ஆவது நிமிடம், 90ஆவது நிமிடம்) அடித்தார். பொலிவியா அணியில் கேம்பஸ் (61ஆவது நிமிடம்) கோல் அடித்தார்.

சிலி அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். பொலிவியா 2ஆவது தோல்வியை தழுவி போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டது. இந்தப் பிரிவில் இருந்து சிலி அல்லது பனாமா ஆகிய நாடுகளில் ஒன்று கால் இறுதிக்குத் தகுதிபெறும்.

இன்று நடைபெறும் ஆட்டத்தில் “ஏ” பிரிவில் உள்ள அமெரிக்கா – பராகுவே, கொலம்பியா – கோஸ்டாரிகா அணிகள் மோதுகின்றன. இந்த பிரிவில் கொலம்பியா ஏற்கனவே கால் இறுதிக்கு முன்னேறிவிட்டது. மற்றொரு அணி எது என்பது இன்றைய ஆட்டத்தின் முடிவில் தெரியும்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்