கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக கடைசிப் பந்தில் சிக்ஸ் அடித்து அணியை வெற்றிபெறச் செய்தார் டோனி. அவர் 32 பந்துகளில் 5 சிக்ஸருடன் 64 ஓட்டங்களைக் குவித்தார்.
ஐ.பி.எல். தொடரின் 53ஆவது போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
இரண்டு அணிகளும் பிளே–ஆப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்ததால் இந்த ஆட்டம் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இருந்தாலும் இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி கடைசி இடத்தை தவிர்க்கும் என்ற நிலைமை இருந்தது
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலவைர் விஜே முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 172 ஓட்டங்களைக் குவித்தது.
பஞ்சாப் அணி சார்பாக விஜய் (59), குர்கீரத் சிங் (51) ஓட்டங்களைப் பெற்றனர். புனே அணி சார்பில் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
பின்னர் 173 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் புனே அணி களம் இறங்கியது. அந்த அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் ரஹானே 19 ஓட்டங்களிலும், கவாஜா 30 ஓட்டங்களிலும் ஆட்டம் இழந்தார்கள். அதன்பின் வந்த பெய்லி 9, திவாரி 17, பதான் 2 என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள். 6ஆவது விக்கட்டுக்கு டோனியுடன் பெரேரா ஜோடி சேர்ந்தனர். கடைசி ஐந்து ஓவரில் 70 ரன்கள் தேவைப்பட்டது.
அபாட் வீசிய 16ஆவது ஓவரில் பெரேரா இரண்டு பவுண்டரிகள், ஒரு சிக்ஸ் விளாசினார். இதனால் அந்த ஓவரில் 16 ஓட்டங்கள் கிடைத்தது. 17ஆவது ஓவரில் புனே அணி 10 ஓட்டங்களைச் சேர்த்தது. 18ஆவது ஓவரில் டோனி ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாச 15 ஓட்டங்கள் கிடைத்தது.
இதனால் கடைசி 2 ஓவரில் 29 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 19ஆவது ஓவரை மோகித் சர்மா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் பெரேரா ஆட்டம் இழந்தார். அவர் 14 பந்தில் 23 ஓட்டங்களைச் சேர்த்தார். இந்த ஓவரில் டோனி ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தார். இதனால் 19ஆவது ஓவரில் 6 ஓட்டங்கள் மட்டுமே கிடைத்தது.
கடைசி ஓவரில் புனே அணியின் வெற்றிக்கு 23 ஓட்டங்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை அக்சார் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் டோனி முதல் ஐந்து பந்துகளை சந்தித்து 2 சிக்ஸ் ஒரு பவுண்டரி விளாசினார். இதனால் கடைசிப் பந்தில் சிக்ஸ் அடித்தால் வெற்றி என்ற நிலைமை ஏற்பட்டது. ஆனால், கடைசிப் பந்தையும் டோனி சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெறச்செய்தார். டோனி 32 பந்தில் 64 ஓட்டங்களைக் குவித்து, அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
இந்த வெற்றியின் மூலம் புனே அணி 5 வெற்றிகளுடன் 7ஆவது இடத்தையும், பஞ்சாப் 4 வெற்றிகளுடன் கடைசி இடத்தையும் பிடித்தது.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்