60 போட்டிகளைக் கொண்ட ஐ.பி.எல் கிரிக்கட் போட்டித் தொடரின் 46ஆவது போட்டி இன்று மாலை மொஹாலி பஞ்சாப் கிரிக்கட் சங்க பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முரளி விஜெய் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டேவிட் வோர்னர் தலைமையிலான சன் ரயிசஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து விளையாடியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவர் முரளி விஜெய் முதலில் தாம் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.
இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கட் இழப்பிற்கு 179 ஓட்டங்களைப் பெற்றது. பஞ்சாப் அணி சார்பாக ஹசீம் அம்லா அதிகபட்சமாக 56 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 96 ஓட்டங்களைக் குவித்தார். இவரைத் தவிர ரிதிமன் ஷா மற்றும் கங்க்ரிட் சிங் ஆகியோர் தலா 27 ஒட்டங்களைப் பெற்றனர். சன் ரயிசஸ் அணியின் பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார் 2 விக்கட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன் பின் 180 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் சன் ரயிசஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஷீகர் தவான் மற்றும் டேவிட் வோர்னர் ஜோடி களம் இறங்கியது. இந்த ஜோடி முதல் விக்கட்டுக்காக 68 ஓட்டங்களைப் பகிர்ந்தது. அதன் பின் தவான் 25 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டம் இழந்தார். பின்னர் சிறப்பாக ஆடி வந்த வோர்னர் 41 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 52 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஹிட் விக்கட் முறையில் ஆட்டம் இழந்தார்.
வோர்னர் ஆட்டம் இழக்கும் போது சன் ரயிசஸ் அணி 12.1 ஓவர்களில் 2 விக்கட் இழப்பிற்கு 97 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஹைதராபாத் அணி வெற்றி்பெற 47 பந்துகளில் 83 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் களம் புகுந்த யுவராஜ் அதிரடியாக விளையாடி பந்தை சிக்ஸருக்கும் பவுண்டரிக்குமாக விரட்டினார்.
இதன் விளைவாக இறுதியில் சன் ரயிசஸ் ஹைதராபாத் அணி 19.4 ஓவர்களில் 3 விக்கட்டுகளை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்று 2 பந்துகள் மீதமிருக்க 7 விக்கட்டுகளால் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியைத் தோல்வி அடையச் செய்தது.
இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்த யுவராஜ் சிங் 24 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 42 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். மறு முனையில் பென் கட்டிங் 11 பந்துகளில் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 18 ஓட்டங்களோடுஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஹசீம் அம்லா தெரிவு செய்யப்பட்டார்.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்