கொழும்பு ரோயல் கல்லூரி எதிர் கண்டி ட்ரினிட்டி கல்லூரி (ப்ரெட்பி கிண்ண என்கவுண்டர்)
கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் கண்டி ட்ரினிட்டி கல்லூரி ஆகிய அணிகளுக்கு இடையில் வருடாந்தம் நடைபெறும் ப்ரெட்பி கிண்ண என்கவுண்டர் என்று அழைக்கப்படும் ரக்பி போட்டிகளின் முதல் சுற்றுப் போட்டி நேற்று கடுமையான மழைக்கு மத்தியில் கொழும்பு ரோயல் கல்லூரி விளையாட்டுத் திடலில் இடம்பெற்றது.
விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் பாதியில் இரண்டு அணிகளும் சிறப்பாக விளையாடினாலும் நடப்பு சம்பியன் கொழும்பு ரோயல் கல்லூரியின் ஆதிக்கம் மேலோங்கிக் காணப்பட்டது. அதற்கிணங்க போட்டியின் முதல் பாதி முடிவில் கொழும்பு ரோயல் கல்லூரி அணி 17 புள்ளிகளையும் கண்டி ட்ரினிட்டி கல்லூரி அணி 07 புள்ளிகளையும் பெற்றிருந்தது.
இரண்டாவது பாதியில் முதல் பாதி போன்றே இரண்டு அணிகளும் சிறப்பாக விளையாடின. ஆனால் 2வது பாதி ஆரம்பத்தில் கண்டி ட்ரினிட்டி கல்லூரி அணியின் ஆதிக்கம் கொழும்பு ரோயல் கல்லூரியின் ஆதிக்கத்தை விட சற்று அதிகமாகக் காணப்பட்டது. இதன் படி ஒரு நிலையில் இரண்டு அணிகளும் தலா 17 புள்ளிகளைப் பெற்று போட்டி சமநிலையில் காணப்பட்டது. ஆயினும் ரோயல் கல்லூரி அணி வீரர்களின் விடா முயற்சியின் மூலம் போட்டியின் 77வது நிமிடத்தில் ரோயல் கல்லூரி அணி வீரர் அஸ்மிர் பாஜுடீனால் ஒரு “ட்ரை” வைக்கப்பட்டது. அது அஸ்மிர் பாஜுடீன் இந்த போட்டியில் வைத்த இரண்டாவது “ட்ரை” ஆகும். இறுதியில் போட்டியின் முழு நேர முடிவில் கொழும்பு ரோயல் கல்லூரி அணி 22-17 என்ற அடிப்படையில் கண்டி ட்ரினிட்டி கல்லூரி அணியை தோல்வி அடையச் செய்தது. ThePapare.com இன் போட்டியின் சிறந்த வீரராக கொழும்பு ரோயல் கல்லூரியின் வெற்றிக்கு காரணமாக இருந்த அஸ்மிர் பாஜுடீனிற்கு வழங்கப்பட்டது.
ப்ரெட்பி கிண்ண என்கவுண்டர் ரக்பி போட்டிகளின் இரண்டாவது சுற்றுப் போட்டி எதிர்வரும் 14ஆம் திகதி கண்டி பல்லேகலேயில் நடைபெறவுள்ளது.
புனித பீட்டர்ஸ் கல்லூரி எதிர் தர்மராஜா கல்லூரி
புனித பீட்டர்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற ரக்பி போட்டி ஒன்றில் புனித பீட்டர்ஸ் கல்லூரி கண்டி தர்மராஜா கல்லூரியை எதிர்த்து விளையாடியது. போட்டியின் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய புனித பீட்டர்ஸ் கல்லூரி முதல் பாதி முடிவில் 29-06 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை பெற்றுக் காணப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது பாதியிலும் சிறப்பாக விளையாடி இறுதியில் போட்டியை 36-06 என்ற புள்ளிகள் அடிப்படையில் புனித பீட்டர்ஸ் கல்லூரி கண்டி தர்மராஜா கல்லூரியைத் தோற்கடித்தது. ThePapare.com இன் போட்டியின் சிறந்த வீரராக புனித பீட்டர்ஸ் கல்லூரி அணியின் தியத் பெர்னாண்டோ தெரிவானார்.
புனித அந்தோனியார் கல்லூரி எதிர் கிங்க்ஸ்வூட் கல்லூரி
கண்டி போகம்பர ரக்பி மைதானத்தில் இடம்பெற்ற இன்னுமொரு ரக்பி போட்டி ஒன்றில் புனித அந்தோனியார் கல்லூரி கிங்க்ஸ்வூட் கல்லூரியை எதிர்த்து விளையாடியது. போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் சிறப்பாக சமமாக விளையாடின. முதல் பாதி முடிவில் புனித அந்தோனியார் கல்லூரி 12-10 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை பெற்றுக் காணப்பட்டது. அதன் பின்பு இரண்டாவது பாதியிலும் இரு அணிகளும் விட்டுக்கொடுக்காது தமது வெற்றிக்காகப் போராடின. இறுதியில் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியை புனித அந்தோனியார் கல்லூரி 23-22 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி கொண்டது. ThePapare.com இன் போட்டியின் சிறந்த வீரராக புனித அந்தோனியார் கல்லூரி அணியின் சாமுவேல் மதுவன்த தெரிவானார்.
புனித தோமஸ் கல்லூரி எதிர் வெஸ்லி கல்லூரி
கொழுப்பு ஹெவலொக் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற மற்றுமொரு ரக்பி போட்டியில் புனித தோமஸ் கல்லூரி வெஸ்லி கல்லூரி அணியை எதிர்த்து மோதியது. முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய புனித தோமஸ் கல்லூரி அணி முதல் பாதி முடிவில் 07-00 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலையில் காணப்பட்டது. பின் இரண்டாவது பாதியில் இன்னும் சிறப்பாக ஆதிக்கம் செலுத்திய புனித தோமஸ் கல்லூரி அணி தமது எதிரணியான வெஸ்லி கல்லூரி அணியை புள்ளிகள் பெற விடாமல் ஆட்டத்தை 19-00 என்ற அடிப்படையில் வெற்றி கொண்டது. ThePapare.com இன் போட்டியின் சிறந்த வீரராக புனித தோமஸ் கல்லூரி அணியின் சச்சித ஜயதிலக தெரிவானார்.