ஐ.பி.எல் கிரிக்கட் போட்டித் தொடரின் 23ஆவது போட்டி நேற்று டில்லியில் அமைந்துள்ள பெரோஸ் ஷா கொட்லா மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் சுரேஷ் ரயினா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணி சஹீர் கான் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தலைவர் சஹீர் கான் முதலில் குஜராத் லயன்ஸ் அணியைத் துடுப்பெடுத்தாட அழைப்புவிடுத்தார்.
இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் லயன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட்டுகளை இழந்தது 172 ஓட்டங்களைப் பெற்றது. குஜராத் லயன்ஸ் அணி சார்பாக ப்ரெண்டன் மெக்கலம் 36 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கால 60 ஓட்டங்களையும், டுவயின் ஸ்மித் 30 பந்துகளில் 53 ஓட்டங்களையும், ஜேம்ஸ் போல்க்னர் ஆட்டம் இழக்காமல் 13 பந்துகளில் 22 ஓட்டங்களையும் பெற்றனர். டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் சார்பில் பந்து வீச்சில் இம்ரான் தாஹிர் 3 விக்கட்டுகளையும், க்றிஸ் மொரிஸ் 2 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனை அடுத்து 173 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவர்ள் முடிவில் 5 விக்கட்டுகளை இழந்து 171 ஓட்டங்களை பெற்று, ஒரு ஓட்டத்தால் குஜராத் அணியிடம் தோல்வியைத் தழுவியது. டெல்லி அணி சார்பாக க்றிஸ் மொரிஸ் ஆட்டம் இழக்காமல் இறுதிவரை போராடி 32 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கலாக 82 ஓட்டங்களையும் ஜோன் போல் டுமினி 43 பந்துகளில் 48 ஓட்டங்களையும், ரிஷப் பண்ட் 17 பந்துகளில் 20 ஓட்டங்களையும் பெற்றனர். குஜராத் அணியின் சார்பாக பந்து வீச்சில் தவல் குல்கர்னி 3 விக்கட்டுகளை வீழ்த்த ,ஜேம்ஸ் போல்க்னர் மற்றும் டுவயின் பிராவோ ஆகியோர் தலா ஒரு விக்கட் வீதம் வீழ்த்தினர். இந்தப் போட்டியின் ஆட்ட நாயகன் விருது பந்து வீச்சில் 2 விக்கட்டுகளைக் கைப்பற்றி துடுப்பாட்டத்தில் 82 ஓட்டங்களையும் விளாசிய டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் க்றிஸ் மொரிஸிற்கு வழங்கப்பட்டது.
மேலும் கிரிக்கட் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்